Breaking
Fri. Nov 22nd, 2024

(ஊடகப்பிரிவு)

இந்தத் தேர்தலை முஸ்லிம் சமூகம் சாதாரண தேர்தலாக எண்ணாமல் நல்ல சிந்தனையோடும், தூரநேக்குடனும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இந்த இறுக்கமான சூழ்நிலையில் நன்றாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மருதமுனையில் நான்கு வட்டாரங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களான ஏ.நெய்னா முஹம்மட், வை.கே.றகுமான், ஏ.எச்.ஏ.ழாஹிர், சிபான் பதுறுத்தீன் ஆகியோரை ஆதரித்து மருதமுனை, அல்மனார் வீதியில் கடந்த  (19) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் இவ்வாறு தெரிவித்தர்.

முன்னாள் கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் இஷாக், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரீ.ஹஸன் அலி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், கே.எம்.அப்துல் றஸாக், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மருதமுனை மண், கல்வியியலாளர்களை அதிகம் கொண்டிருக்கிற ஒரு பிரதேசமாகும். பல்துறை சார்ந்த கல்விச் சமூகத்தை நாட்டுக்கு தந்திருக்கின்றது இந்த மருதமுனை மண். அவ்வாறான இந்த மண்ணிலே இங்குள்ள மக்கள் சார்பாக எம்மோடு நால்வர் களத்திலே நிற்கின்றார்கள். அவர்களுடைய வெற்றி என்பது இந்த மருதமுனையின் வெற்றியாகப் பார்க்கப்படும்.

நாங்கள் கட்சியை அமைத்து, சகோதரர் அமீர் அலி மட்டக்களப்பிலே பாராளுமன்ற உறுப்பினராகி பிரதியமைச்சராகி இருக்கின்றார். சகோதரர் இஷாக் அனுராதபுரத்திலே அங்குள்ள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராகியிருக்கின்றார்.

வன்னி மக்கள் எங்களுக்கு ஆணை தந்து இந்த அரசிலே, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியைப் பெற்றுத் தந்திருக்கின்றார்கள். திருகோணமலை மாவட்டத்திலே அப்துல்லாஹ் மஹ்ரூபை பாராளுமன்ற உறுப்பினராக அந்த மக்கள் தந்திருக்கின்றார்கள். அதேபோல புத்தளத்திலே அரசியலில் நீண்டகால வரலாறு கொண்ட நவவி, தேசியப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்திலே அவருடைய பணியைச் செய்து கொண்டிருக்கிறார்.

அவ்வாறான எமது கட்சி காலத்தின் தேவையை உணர்ந்து சகோதரர் ஹஸன் அலி அவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர், நேர்மையானவர், சமூகப்பற்றுள்ளவர், அல்லாஹ்வுக்குப் பயந்தவர், இந்தச் சமுதாயத்துக்கென்று தனித்துவமான கட்சியின் பெருந்தலைவர் அஷ்ரபுடன் இணைந்து, அவருக்குப் பக்கபலமாக இருந்து அவரது கட்டளைகளை செவிமடுத்து செவ்வனே செய்தவர். அதேபோல அந்தத் தலைவரின் மரணத்துக்குப் பின்னர் இந்தத் தலைவர், “எனது நபுசு கேட்கிறது.

கட்சியின் தலைமையை எனக்குத் தாருங்கள்” என்று கேட்டுப் பெற்றுக்கொண்ட பொழுது, அதன் பிறகு இந்தத் தலைவருக்கும் பக்கபலமாக இருந்து இந்தக் கட்சியைக் காப்பாற்றியவர்.
அந்த நல்ல மனிதருக்கு துரோகிப்பட்டம் சூட்டப்பட்டு, வெளியெற்றப்பட்டுள்ளார். இன்று அவர் செய்த தியாகங்கள் எல்லாம் ஐந்து சதத்திற்கும் பெறுமதியில்லாமல், அவரை மிகவும் மோசமாக விமர்சித்துப் பேசிவருகின்ற அரசியல் கலாச்சாரம் இன்று காணப்படுகின்றது. அன்று அதாவுல்லா தொடக்கம் ஹசன் அலி வரை பல சகோதரர்கள் அந்தக்கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் அத்தனைபேரும் அந்தக்கட்சிக்காகப் பல தியாகங்களைச் செய்தவர்கள்.
சகோதரர் ஜவாத் அவர்கள் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு சொன்னார் “உங்கள் கட்சியோடு இணையப் போகின்றேன். ஏழு தினங்களாக இதைப்பற்றிச் சிந்தித்தேன். இந்தத் தேர்தலிலே சொந்தச் சின்னத்தை இழந்து விட்டு, மறந்த விட்டு இந்த அம்பாறை மாவட்டத்திலே பல அநியாயங்களைச் செய்துகொண்டிருக்கின்ற, ஒரு அரசியல்வாதியைக் கொண்டிருக்கின்ற அந்தக்கட்சியிலே, அந்தச் சின்னத்திலே, எமது இயக்கம் உருவாகிய மண்ணிலே, பல அநியாயங்கள் இடம்பெற்று வருகின்றன” என்று கூறினார்.

இவ்வாறுதான் எமது கட்சியில் சேருகின்ற முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநியாயங்களை பொறுக்கமாட்டாது, நாம் வெளியேறி வருகின்றோம் என தெரிவிக்கின்றனர் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் கூறினார்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *