(அனா)
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
வாகரை பகுதிகளில் சொத்துக்களையும், உயிர்களையும் இழந்த தமிழ் மக்கள் மற்றும் வாகரைப் பிரதேசத்தில் ஏற்படுத்தப்படவுள்ள இறால் பண்ணை வளர்ப்பை தடை செய்யுமாறும், காயான்கேணியில் அமைக்கப்பட்டுள்ள அத்துமீறிய புத்தர்சிலை தாபிப்பு தொடர்பாக செயலணிக் குழுவின் முன் ஆஜராகிய பொதுமக்கள் தமது குறைபாடுகளை வாய்மொழி மூலமும், எழுத்து மூலமும் வெளியிட்டதுடன், வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
செவ்வாய்கிழமை பிரதேச செயலக பிரிவில் 70 மேற்பட்ட முறைப்பாடுகள் வாய் மொழி மூலமும், எழுத்து மூலமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலய செயலணி குழுவின் செயலாளர் க.காண்டீபன் தெரிவித்தார்.
இச்செயலமர்வின் போது புலனாய்வு பிரிவினரின் வருகை இருக்கும் என்ற படியினால் பொதுமக்களின் வருகை குறைவாக காணப்பட்டதாகவும், நாங்கள் பயத்தின் நிமிர்தம் தங்களுடைய முறைப்பாடுகளை வழங்குவதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
செயலணியின் இறுதி அமர்வு வியாழக்கிழமை காலை 8:30 தொடக்கம் மாலை 4:30 மணிவரை பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட வலய செயலணி குழுவின் செயலாளர் க.காண்டீபன், நல்லிணக்க பொறிமுறைக்கான தேசிய செயலணியின் உறுப்பினரும், முன்னாள் பேராசிரியருமான திருமதி.சித்திரலேகா மௌனகுரு மற்றும் செயலணி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.