ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடரில் பங்கேற்கும் இலங்கைத் தூதுக்குழுவில் அமைச்சர்களான திலக் மாரப்பன, சரத் அமுனுகம மற்றும் பைசர் முஸ்தபா உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
2017 மார்ச் 23 ஆம் திகதியிடப்பட்ட 34:1 ஆம் இலக்க தீர்மானத்தின் படி மனித உரிமைகள் பேரவையின் கோரிக்கைக்கமைய, மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் 2015 ஒக்டோபர் 1 ஆம் திகதியிடப்பட்ட 30:1 ஆம் இலக்க தீர்மானத்தை நிறைவேற்றுவது
மற்றும் இலங்கையின் நல்லிணக்கம், மனித உரிமைகள் குறித்த விடயங்கள் தொடர்பிலான எழுத்து மூலமான அறிக்கையொன்றினை எதிர்வரும் 23ஆம் திகதி பேரவையிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை குழுவில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், ஒருங்கிணைக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலகம் மற்றும் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் உள்ளடக்கப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும், முன்னதாக கடந்த 16ஆம் திகதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டிருந்த அறிவிப்பில் அமைச்சர்களான திலக் மாரப்பன மற்றும் சரத் அமுனுகம ஆகியோர்பெயர் மாத்திரமே உள்ளடக்கப்பட்ருந்தது.
இந்த நிலையில், அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமைச்சர பைஸர் முஸ்தபாவின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை குறித்து சர்வதேச மட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.