COVID தொற்றால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் பாராளுமன்றத்தில் (10) கூறவில்லை என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பிரதமர் பாராளுமன்றத்தில் நேற்று விடுத்த அறிவிப்பின் பின்னர், பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் COVID -இனால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்தமையை வரவேற்பதாக அறிக்கைகள் மூலம் தெரிவித்தனர்.
கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்கள் என்று பிரதமர் கூறவில்லை. மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படுமா என்று மரிக்கார் கேட்டார். அதற்கு அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்று கூறினார்
என குறிப்பிட்ட கோகிலா குணவர்தன, கொரோனாவினால் ஏற்படும் மரணம் தொடர்பாக ஜனாதிபதியோ, பிரதமரோ தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு விசேட குழுவொன்று இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பிரதமரின் அறிவிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எப்போது வௌியிடப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் இன்று வினவினார்.
அதற்கு பதிலளித்த COVID தடுப்பு மற்றும் ஆரம்ப வைத்திய சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே,
சுகாதார அமைச்சின் தீர்மானங்கள் தனிப்பட்ட ரீதியில் எடுக்கப்படமாட்டாது. தொழில்நுட்பக்குழு ஊடாக அது எடுக்கப்படும். எனவே, தொழில்நுட்பக் குழுவே அந்த யோசனையைக் கொண்டுவந்தன. அவர்களின் இணக்கப்பாட்டுடனேயே நாம் எதனையும் செய்ய முடியும்
என பதிலளித்தார்.
இதனையடுத்து, பிரதமரின் அறிவிப்பைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.
இதனை தடுக்கும் சுகாதார அமைச்சின் அந்த நோயாளி யார்? இந்த செயற்பாட்டினால் நமது நாட்டில் இன முரண்பாடு ஏற்படுவதுடன் நாடும் பின்னோக்கி செல்கின்றது
என ரவூப் ஹக்கீம் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என பிரதமர் கூறுகின்றமை குரல் பதிவுகளிலும் காணொளிகளிலும் தௌிவாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் S.M.மரிக்கார் சுட்டிக்காட்டினார்.