Breaking
Sun. Nov 24th, 2024

இத்தனை நாளும் இலங்கை நாட்டு மக்கள் சந்தித்திராத வித்தியாசமான அரசியலை தற்போது கண்ணுற்றுக் கொண்டிருக்கின்றனர்.ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சு.க ஆகியன ஒன்றிணைந்து தேசிய அரசை நிறுவி நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்கவை நியமித்திருந்தன.தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பொருளாதார அணுகு முறைகள் பிழையெனக் கூறி மஹிந்த தரப்பினர் பாராளுமன்றத்தில் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்திருந்தனர்.கடந்த வியாழக்கிழமை 09-06-2016ம் திகதி அத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தோல்வியடைந்திருந்தது.மஹிந்த அணியினர் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்,அமைச்சர் ராஜித சேனாரத்ன,அமைச்சர் சம்பிக்க ரணவக்க,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (கடந்த வருடம்),அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் மீதும் நம்பிக்கையில்லாப் பிரேரணைய கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர்.கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்பு தோற்றம் பெற்ற தேசிய அரசை இவர்களது நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கு அஞ்சி  கலைத்ததான கதைக்களுமுள்ளன.இப்படி இவர்கள் பலர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர முயன்றும் தங்களது நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முதல் ஒத்திகையை நிதி அமைச்சரிலேயே பார்த்துள்ளனர்.

 

மஹிந்த அணியினரைப் பொறுத்த மட்டில் காலத்திற்கு காலம் இலங்கை நாட்டு மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருக்கின்றனர்.தேங்காய் உடைத்தார்கள்,ஹைப்பார்க்கில் கூட்டம் நடாத்தினார்கள்,ஐ.நா சபை முன்றலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள்,மே தின நிகழ்வை தனித்து நடாத்திக் காட்டினார்கள்,யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தை நடாத்த தீர்மானித்து முயற்சித்தார்கள்.இவற்றில் சிலவை தற்போது நிறுவப் பட்டுள்ள தேசிய அரசுக்கெதிரானது போன்றும் சிலவை மைத்திரி தலைமையிலான சு.கவிற்கு எதிரானதாகவும் அவர்கள் வெளிக்காட்டி வந்தனர்.தேசிய அரசில் சு.கவும் அங்கம் வகிப்பதால் தேசிய அரசுக்கெதிராக தங்களது ஆதரவாளர்கள் நடந்தாலோ அல்லது தனது தலைமையிலான சு.காவிற்கு எதிராக சு.கவில் அங்கம் வகிப்பவர்கள் நடந்தலோ அவர்கள் மீது சு.காவின் தலைவர் என்ற வகையில் மைத்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதற்கு மைத்திரி தவறுகின்றமை மைத்திரியின் இயலாமையையும் சு.காவில் மஹிந்தவின் செல்வாக்கையும் எடுத்துரைக்கின்றது.

 

இவ்வாறான ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும் மைத்திரி அணியினரிடமிருந்து மஹிந்த அணியினருக்கு மிகக் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுக்கப்படுகின்ற போதும் இது வரை மைத்திரி அணியினர் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாக அறிய முடியவில்லை.ஹைப்பார்க் கூட்டத்தின் பிற்பாடு சில உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீதே மைத்திரி அணியினர் தங்களது பலத்தை வெளிப்படுத்திருந்தனர்.இவ் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மஹிந்த அணியினர் கொண்டு வந்த போது சு.க தனது அங்கத்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை.மஹிந்த அணியினரை எச்சரிக்கும் அளவான வலிமை கூட மைத்திரி அணியினரிடம் இல்லாமல் போய் விட்டதா? என்ற வினாவே இச் சந்தர்ப்பத்தில் எழுகிறது.மைத்திரி அணியினர் எச்சரிக்கை விடுத்து பின்னர் எதுவும் செய்யாது அவமானப்படாமல் மௌனியாக இருந்து தங்களுக்கென்றுள்ள மானத்தைக் காப்பாற்றிக்கொண்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

 

மஹிந்த அணியினர் மைத்திரி தலைமையிலான சு.கவிற்கு எதிராக முன்னர் மேற்கொண்ட சில செயற்பாடுகளின் போது அதனைத் தடுத்து நிறுத்த மிகத் தீவிரமாக செயற்பட்டது போன்ற எதனையும் இச் செயற்பாட்டின் போது காணக்கிடைக்கவில்லை.மஹிந்த அணியினரின் ஏனைய செயற்பாடுகளின் போது குறித்த நிகழ்வுகள் இடம்பெறும் முன் மைத்திரி,மஹிந்த அணியினருக்கிடையில் பெரும் அறிக்கை மோதல்களை அவதானிக்க முடிந்திருந்த போதும் இவ் விடயத்தில் அப்படி பெரிதான மோதல்களை காணக்கிடைக்கவில்லை.இதில் மஹிந்த அணியினரால் வெற்றி பெற முடியாது என்ற நோக்கத்தில் மைத்திரி அணியினர் இதனைப் பெரிதாக தூக்கிப்பிடிக்காதிருந்திருக்கலாம்.மஹிந்த அணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியைத் தழுவிருந்தாலும் இதில் மைத்திரியின் இயலாமை மறைந்துள்ளதை பலரும் சிந்திக்க மறுக்கின்றனர்.

 

ஒரு குறித்த அமைச்சர் பாராளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் பொறுப்பாக இருத்தல் வேண்டுமென இலங்கை அரசியலமைப்பின் 44-(4) எனும் பிரிவு கூறுவதால் இவ் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் அடிப்படையான பொருளாதாரக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு நிதி அமைச்சர் பொறுப்புக் கூற வேண்டும்.அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதி இருப்பாரென இலங்கை அரசியலமைப்பின் 42-(3) எனும் பிரிவு குறிப்பிடுகிறது.அமைச்சர்கள் செய்யும் செயற்பாட்டின் பொறுப்பு அமைச்சரவையின் தலைவரான இலங்கை ஜனாதிபதிக்குமுள்ளது.குறித்த அமைச்சர் ஒருவரின் அமைச்சின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்றால் குறித்த அமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதை விட அமைச்சுக்களின் தலைவராகவுள்ள ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைய கொண்டு வருவதே மிகவும் பொருத்தமானதாகும்.

 

அரசியலமைப்பு 150(2) எனும் பிரிவானது எந்த நிதியாண்டின் போது அந்தப் பணம் மீளப் பெறப்படவுள்ளதோ அல்லது வேறு விதமாக திரட்டு நிதியத்தில் சட்டப்படி பொறுப்பிக்கப்பட்டுள்ளதோ அந்த நிதியாண்டிற்கான குறித்துரைக்கப்பட்ட பகிரங்க சேவைகளுக்காக பாராளுமன்றத்தின் தீர்மானத்தினால் அல்லது ஏதேனும் சட்டத்தினால் அப் பணத் தொகை அனுமதிக்கப்பட்டிருந்தாலொழிய அத்தகைய ஆணைப்பத்திரம் எதுவும் வழங்கப்படலாகாது எனக் குறிப்பிடுகிறது.இவ் அரசியலமைப்பின் மூலம் நிதி தொடர்பான விடயங்களில் நிதி அமைச்சர் தன் இஸ்டப்படி கையாள முடியாது என்பதை இவ் அரசியலமைப்பின் பிரிவானது அறிந்து கொள்ளச் செய்கிறது.நிதி தொடர்பான விடயங்கள் அனைத்தும் குறித்த ஆளும் அரசின் உச்ச கண் காணிப்பின் கீழே மேற்கொள்ளப்படும் என்பதால் இதன் மீதான குற்றச் சாட்டுக்களை குறித்த அமைச்சர் மீது முன் வைப்பதை விட ஆளும் அரசின் மீது முன் வைப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.பொதுவாக இதற்கு முன்பு இந் நாட்டை ஆண்டவர்கள் நிதி அமைச்சை தங்களது கைகளுக்குள் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பொதுவாக வரி அதிகரிப்பு போன்ற சில விடயங்கள் மக்களை மிகவும் பாதித்துள்ளதை மறுக்க முடியாது.இவ் வரி அதிகரிக்கப் போகிறதென்ற கதை எழுந்ததும் அதனை எதிர்த்து ஜனாதிபதி மைத்திரி கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அவருடைய கதை கூட எடுபடாமலே இவ் விடயம் அரங்கேற்றப்பட்டமை இவ் வரி அதிகரிப்பின் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது.இவ் வரி அதிகரிப்பால் மருத்துவ பரிசோதனைகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளமை மாத்திரமே இதன் பாதிப்பை உணர்த்தப் போதுமானதாகும்.சாதாரண மக்களைப் பாதிக்கக் கூடிய வெட் வரி அதிகரிக்கப்பட்ட அதே நேரம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வீண் செலவுகளை இவ் அரசு செய்து கொண்டிருக்கின்றது.ஜனாதிபதியின் பதவியேற்பு விழா சில ஆயிரத்தோடு நிறைவுற்றதும் ஜனாதியின் வெளிநாட்டுப் பயணங்களின் போது வீண் விரயங்கள் தவிர்க்கப்படல் போன்ற ஒரு சில விடயங்களிலேயே அதிக பணம் செலவிடுகையை இவ்வரசு குறைத்துள்ளது.மற்ற அனைத்தும் வழமை போன்றே உள்ளது.அமைச்சுக்களுக்கான மிகை வாடகையிலான கட்டடடச் செலவுகள்,ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கான இரண்டு கோடி பெறுமதியான வாகன அனுமதிப்பத்திரம் வழங்கல் போன்ற செயற்பாடுகளையும் இவ்வரசு செய்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.இப்படி இவ்வரசு கடைப்பிடிக்கும் பிழையான பொருளாதார கொள்கைகளை ஆயிரம் உதாரணங்களோடு விளக்கலாம்.இவ் வரசின் பொருளாதார ரீதியான அணுகு முறை மக்களை கஸ்டப்படுத்துகின்ற போதும் அதனை நிதி அமைச்சர் மீது முற்றாக சாட்டுவதை விட இவ்வரசின் மீது சாட்டுவதே பொருத்தமானது.இவ்வரசு நினைத்தால் மக்களை துன்பத்திற்குள்ளாக்கும் விடயங்களை நிதி அமைச்சு நடைமுறைபடுத்தாது தடுக்க முடியும்.

 

பொதுவாக சிறு பான்மையினர்கள் நாட்டின் பொது விடயங்களில் அக்கறையின்றி இருப்பதை கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இது தொடர்பான வாக்களிப்பிலிருந்து த.தே.கூ விலகிக் கொண்டது.நாட்டில் ஒரு பிரச்சினை எழும் போது அதில் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய கடமை த.தே.கூவிற்குமுள்ளது என்பதால் இவ் விடயத்தில் த.தே.கூ நடுநிலை பேணியமை தவறானதொரு விடயமாகும்.தற்போது த.தே.கூ எதிர்க்கட்சித் தலைவர்ப் பதவியை தன்னகத்தே வைத்திருப்பதால் இது தொடர்பில் சரியோ? பிழையோ? காத்திரமானதொரு முடிவை முன் எடுத்திருக்க வேண்டும்.அது அரசுக்கு சார்பாக இருந்தாலும் சரி மஹிந்த அணியினருக்கு சார்பாக இருந்தாலும் சரி.ஒரு எதிர்க்கட்சியினுடைய பண்பு நாட்டில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்பதாகும்.இது விடயத்தில் அவர்கள் விலகி நின்றமை இது எங்கள் பிரச்சினையல்ல,உங்கள் பிரச்சினையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் எனும் விதமாக விலகியதாகவே பொருள் கொடுக்க முடியும்.இந்த வகையில் சிந்திக்கும் போது த.தே.கூ எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெறும் பண்பு ரீதியான தகுதியை இழந்துள்ளதெனாலாம்.

 

த.தே.கூ வைப் பொறுத்தமட்டில் இத் தேசிய  அரசுடன் முரண்பாட்டு அரசியலைக் கைக் கொள்கின்ற போதும் இவ் வரசால் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது போகின்ற போது எச் சந்தர்ப்பத்திலும் தங்களது நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்பதை நன்கே அறியும்.இதனால் எப்போதும் தற்போதுள்ள தேசிய அரசுக்கு சார்ப்புப் போக்கையே கடைபிடிக்கும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வெளிப்படுத்த வேண்டுமாக இருந்தால் அது தற்போதைய அரசுக்கே வெளிப்படுத்த வேண்டும்.எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பது த.தே.கூவின் அரசுடனான கள்ள உறவை வெளிப்படுத்துவதாக அமையும்.தற்போது எதிர்க்கட்சி தலைவர்ப் பதவி த.தே.கூவிற்கு வழங்கப்பட்டமை பிழையானதெனவும் தங்களுக்கே தர வேண்டுமென மஹிந்த அணியினர் கூறிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இச் செயற்பாடு பேரின மக்களிடையே அக் கருத்தை நிறுவுவதற்கான ஆதாரமாக மாறிவிடும்.இவ் நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக வாக்குகளால்  தொல்விறும் என்பதை அறிந்து கொண்டு த.தே.கூ இவ்வரசுக்கு வம்பை விலை கொடுத்து வாங்காமல் சாதூரியமாக தப்பித்துக் கொண்டதெனாலாம்.முஸ்லிம் அமைச்சர்களைப் பொறுத்த மட்டில் தாங்கள் ஆதரவளிக்கும் கட்சி எதைச் செய்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது அவர்களின் வழமையான செயற்பாடு. இவ் விடயத்திலும் அவ்வாறே செயற்பட்டார்கள்.

 

மக்கள் விடுதலை முன்னணியைப் பொறுத்த மட்டில் இத் தேசிய அரசை வீழ்த்தி வீட்டிற்கு அனுப்புவதில் மிகத் தீவிரமாக செயற்படுகிறது.வரி அதிகரிப்பு போன்ற விடயங்களைச் சுட்டிக் காட்டி போராட்டங்களை முன்னெடுக்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் வெள்ளம் வந்து அதனை நிறுத்தி இருந்தது.மக்கள் விடுதலை முன்னணியைப் பொறுத்த மட்டில் தேசிய அரசையும் எதிர்க்கிறது,மஹிந்த ஆட்சியையும் எதிர்க்கின்றது.இதன் பொருள் தாங்கள் இந்த நாட்டின் ஆட்சியைக் கைப் பற்றுவதாகும்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி படு தோல்வி அடைந்திருந்தது.இவ்வரசை வீழ்த்தினால் தான் தங்களது இலக்கை அடைந்து கொள்ள முடியும்.குறிப்பாக இவ்வரசை வீழ்த்தும் போது ஐ.தே.க,சு.க,மஹிந்த அணியினர் ஆகிய அனைவர் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து மக்கள் விடுதலை முன்னணி மிகப் பெரும் சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

 

மஹிந்த ராஜ பக்ஸ அணியினர் இவ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெல்லும் என்ற நோக்கில் இப் பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டு போய் இருப்பார்கள் என நம்பினால் அது பிழையான சிந்தனை.தங்களது ஆதரவு மஹிந்த அணியினருக்கு நன்றாகவே தெரியும்.இவ் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வதன் மூலம் மஹிந்த அணியினரால் குறித்த அமைச்சரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.இவர்களது நோக்கமனைத்தும் மைத்திரியை கலங்கடிப்பதாகும்.கடந்த மே தின மோதலைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்வில தங்களது போராட்டம் மைத்திரியை சு.கவின் தலைமைப் பதவியிலிருந்து அகற்றும் வரை இடம்பெறுமெனக் கூறியமை இதனை நிறுவி நிற்கின்றது.இவர்கள் இவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்ளும் ஒவ்வொரு கணமும் மைத்திரி கடும் அழுத்தங்களுக்குள்ளாவதோடு சு.கவில் மகிந்தவின் பலமும் வெளிப்படும்.

 

இவ் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த ராஜ பக்ஸ தோற்றுவிட்டதாக கூறுகின்றனர்.கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது இத் தேசிய அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.இவ் வாக்களிப்பில் 145 வாக்குகளையே இத் தேசிய அரசு பெற்றுள்ளது.மிகக் குறுகிய காலத்தினுள் இத் தேசிய அரசு பதினைந்து ஆதரவை இழந்துள்ளது.கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இத் தேசிய அரசுக்கு எதிராக ஐம்பத்தொரு வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.இவ் நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு ஆதரவாகவும் ஐம்பத்தொரு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.இலங்கையில் தேசிய அரசு நிறுவப்பட்டுள்ளது என்ற கதை உள்ள நிலையில் இத் தேசிய அரசாங்கத்தில் ஐம்பத்தொரு உறுப்பினர்கள் எதிராக உள்ளதோடு இருபத்தெட்டு உறுப்பினர்கள் எவருக்கும் ஆதரவளிக்காது நடு நிலைமை பேணியுள்ளமை தேசிய அரசின் நிறுவலை கேள்விக்குட்படுத்துவதை மறுக்க முடியாது

 

இவ் ஐம்பத்தொரு உறுப்பினர்களில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆறு உறுப்பினர்கள் தவிர்ந்து மற்ற அனைவரும் மஹிந்த சார்பு அணியினர்.கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சு.க தொண்ணூற்றைந்து  ஆசனங்களையே பெற்றிருந்தது.(அமைச்சர் ராஜித உட்பட சிலர் ஐக்கிய தேசிய முன்னணியில் தேர்தல் கேட்டமை குறிப்பிடத்தக்கது).இந்த நிலையில் நாற்பத்தைந்து உறுப்பினர்கள் மஹிந்தவிற்கு ஆதரவளிப்பது சு.கவில் மஹிந்த என்ற தனி மனிதனின் செல்வாக்கு மிகைத்திருப்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.நிச்சயமாக இத் தொகை உறுப்பினர்களை சு.க இழக்குமாக இருந்தால் அது பலமிழந்து விடும் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.இவ் உறுப்பினர்கள் மஹிந்த ராஜ பக்ஸ எதற்கு ஆதரவளித்தாலும் அதனை ஆதரிக்கக் கூடியவர்கள்.இதனை வெளிப்படுத்தி மைத்திரியை அச்சுறுத்துவதே மஹிந்த அணியினருக்குத் தேவையானது.இவ்வாறான வேலைகளை அடிக்கடி செய்து கொண்டிருக்கும் போது மஹிந்த அணியினர் தங்களது ஆதரவாளர்களை தன்னோடு தொடர்ந்துமிணைத்துச் செல்ல வழி கோலும்.தனக்கென்று ஒரு கட்சியில்லாம் இத்தனை உறுப்பினர் பலத்தை மஹிந்தவால் தக்க வைத்துகொள்ள முடியுமென்றால் அது பெரும் சாதனையே.

 

மஹிந்த அணியினர் தோல்வியடைந்து விட்டதாக அனைவரும் பிரச்சாரம் செய்கின்றனர்.மஹிந்தவை இப் பிரேரணையை தோற்குமளவு பலமுள்ளவராக இவர்கள் கருதுவதால் இவர்களுக்கு இச் சிந்தனை தோன்றலாம்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மஹிந்தவை எதிர்த்த போதும் சு.கவிலிருந்து பத்தளவிலான உறுப்பினர்களையே பிரிக்க முடிந்தது.அப்படி பிரிந்து செல்கின்றவர்களுக்கு மிகப் பெரும் பதவிகள் கண் முன்னே தெரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.முன்னாள் ஜனாதிபதியாகவுள்ள மஹிந்தவால் நாற்பத்தைந்து உறுப்பினர்களை ஒன்று சேர்க்க முடிந்தமையை ஒரு போதும் சாதாரணமாக மட்டிட முடியாது.மஹிந்த ராஜ பக்ஸ தனக்கென்று ஒரு கட்சி ஆரம்பிப்பாராக இருந்தால் அது இலங்கையில் உள்ள கட்சிகளில் ஏனைய கட்சிகளுக்கு சவாலாக உள்ள ஒரு கட்சியாக இருக்கும் என்பதையும் இவ் நம்பிக்கையில்லாப் பிரேரணை சுட்டிக் காட்டுகிறது.

 

குறிப்பு: இக் கட்டுரை இன்று செவ்வாய் கிழமை 14-06-2016ம் திகதி நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது தொடர்பான விமர்சனங்களே என்னை மென் மேலும் வளர்க்குமொரு விடயமாக கருதுகிறேன்.

 

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *