clean sri lanka நிகழ்ச்சித் திட்டமானது பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை நீக்கும் ஒரு திட்டமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (09) காலை மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் இடம்பெற்ற clean sri lanka திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இத்திட்டத்துடன் இணைந்ததாக, மேற்கு மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் 124 இடங்களில் இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இது மு.ப 8.00 முதல் மு.ப 11.00 வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள 1,740 கிலோமீற்றர் கடற்கரைகளை சுத்தப்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
நாடு முழுவதும் உள்ள 1,740 கிமீ கடற்கரையை சுத்தம் செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
இன்று நாம் clean sri lanka திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல கிலோமீற்றர்களை சுத்தம் செய்கிறோம். clean sri lanka திட்டம் என்பது சுத்தம் செய்வதை மட்டும் குறிக்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டமன்று. அதற்குப் பின்னால் ஒரு பெரிய நோக்கம் உள்ளது. நமது சூழல் மட்டுமல்ல. நமது உள்ளத்தில் உள்ள அழுக்குகள் முதல் ஒரு பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை அகற்றுவதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்நாட்டு மக்கள் ஒரு பெரிய சமூக மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இது ஒரு அரசியல் மாற்றத்தைப் போன்றே ஒரு சமூக மாற்றமுமாகும். அந்த மாற்றம் அரசாங்கத்தால் மட்டும் செய்யக்கூடிய ஒன்றல்ல. இது ஒரு கூட்டு செயல்முறை. இந்த மாற்றம் நம்மில் தொடங்கி நம் வீடுகள், கிராமங்கள், தெருக்கள் மற்றும் கடைவீதிகளில் இருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு பெருமளவிலான பொதுமக்களின் பங்களிப்பு தேவை. நாங்கள் அனைவரும் இங்கு கூடியிருப்பது எமது உத்தியோகபூர்வ பதவிகளின் அடிப்படையில் அல்ல. இந்த நாட்டின் குடிமக்களாகவே ஒன்றிணைந்திருக்கிறோம்.
கொழும்பு மாவட்டத்தின் பிரஜைகள் என்ற வகையில் நாம் வாழக்கூடிய இடத்தை உருவாக்க வேண்டும். பாதுகாப்பு, கல்வி, தூய்மை, நீதி இவை அனைத்தும் எமது வாழ்விற்கு அவசியமானவையாகும்.
clean sri lanka திட்டத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல, மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப், கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் லக்ஷ்மன் நிபுனராச்சி, கொழும்பு நகர சபை வேட்பாளர் விராய் கெலீ பல்தசார், கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன குமார, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் குணசேகர, இலங்கை பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.