தேர்தல் பிரசாரத்தில் கட்சித்தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனிலிருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார்.
கோட்டூர்புரம் பாலம் அருகே ஜெயலலிதாவின் கார் சென்ற போது, அங்கு 25 முஸ்லீம் பெண்கள் உள்பட 75 பேர் நின்றனர். அவர்களைப் பார்த்ததும் நடுரோட்டில் காரை நிறுத்தினார் ஜெயலலிதா. அ.தி.மு.க.வின் உறுப்பினரும், நடிகருமான பஷீர் என்ற விஜய்கார்த்திக் மற்றும் வேளச்சேரி பள்ளிவாசலை சேர்ந்த அபு ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் அருகே சென்றனர்.
அப்போது விஜய்கார்த்திக், ஜெயலலிதாவுக்கு குஆர்னை பரிசாக கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட அவர், ‘இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ என்றார்.
இதுகுறித்து நடிகர் விஜய்கார்த்திக் கூறுகையில், “முஸ்லிம்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரம்ஜானுக்கு கஞ்சி காய்ச்ச இலவச அரிசி, வக்பு வாரியத்தின் 5 ஆயிரம் ரூபாய் கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டெடுத்தது, உலமாக்களுக்கு பென்சன் திட்டம் மற்றும் ஊதிய உயர்வு ஆகியவை இந்த ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளதற்கும், தேர்தலில் பி.ஜே.பி.யுடன் கூட்டணியில் சேர்க்காததற்கும் நன்றி தெரிவித்தோம்” என்றார்.