Breaking
Sun. Nov 24th, 2024
(எம்.ஐ.முபாறக்)
வடக்கு-கிழக்குத் தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு காலத்துக்குக் காலம்-அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கைகளை நகர்த்தி வந்துள்ளது.

புலிகள் காலத்திலும் புலிகளுக்குப் பிந்திய மஹிந்தவின் காலத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியலின் ஊடாகவே தமிழரின் பிரச்சினைகளிக்கான தீர்வைத் தேடியது.

மஹிந்தவின் ஆட்சியில் அந்த எதிர்ப்பு அரசியல் தீவிரமாக இருந்தது.சர்வதேசத்தின் ஆதரவு அந்தப் போராட்டத்துக்குப் பக்க பலமாகவும் இருந்தது.கூட்டமைப்பின் அந்தப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக புலம்பெயர் தமிழர்களும் வெளிநாடுகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

மஹிந்த எந்தவொரு போராட்டத்துக்கும் வளைந்து கொடுக்கவில்லை.இருந்தாலும்,அவர் ஆட்சி இழப்பதற்கு மஹிந்தவின் அந்த நிலைப்பாடுதான் காரணமாகவும் அமைந்தது.

தமது எந்தவொரு பிரச்சினையும் மஹிந்தவால் தீர்க்கப்படமாட்டாது என்பதை உணர்ந்த தமிழர்கள் மஹிந்தவின் வீழ்ச்சிக்குத் துணை போக்கினர்.கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியலே இதற்குக் காரணமாக இருந்தது என்பதே உண்மை.

இருந்தாலும்,எல்லா சூழ்நிலையிலும் இந்த எதிர்ப்பு அரசியல் பொருந்தாது என்பதை உணர்ந்த கூட்டமைப்பு ஆட்சியாருக்கு ஏற்ப அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தொடங்கியது.அந்த வகையில்,மஹிந்தவின் பின் ஆட்சிபீடமேறிய மைத்திரி-ரணில் அரசுடன் இணைந்து போய் தமிழரின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கூட்டமைப்பு முடிவெடுத்தது.

அந்த இணக்கப்பாட்டு அரசியலின் விளைவாக தமிழரின் சில பிரச்சினைகளுக்கு மெல்ல மெல்ல தீர்வுகள் கிடைத்தன.அவை தமிழருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தின.இது போன்றே அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று அவர்கள் நம்பினர்.

ஆனால்,நிலைமைமாரிவிட்டது.அவர்களின் மிகமுக்கிய பிரச்சினைகளான அரசியல் தீர்வு மற்றும் போர்க் குற்ற விசாரணை போன்றவை தொடர்பில் தமிழருக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படும் என்பது சந்தேகமாகவே உள்ளது.

அரசியல் தீர்வைப் பொருத்தவரை இணைந்த வடக்கு-கிழக்கிற்குள் சமஷ்டி அடிப்படையில்தான் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் நிலைப்பாடாக உள்ளது.ஆனால்,அரசோ இந்த நிலைப்பாட்டை நிராகரித்து ஒற்றை ஆட்சியின் கீழே தீர்வு என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்துக்களைத் திரட்டிய குழுவும் அந்தக் அக்கருத்துக்களை அரசிடம் ஒப்படைத்தபோது அரசின் நிலைப்பாட்டை ஒத்த சிபாரிசையே முன்வைத்தது.அதன் பிரகாரமே தயாரிக்கப்படும் என்றும் அரச தரப்பில் இருந்து தெரியவருகின்றது.

அடுத்ததாக,போர்க் குற்ற விசாரணை.இதுதான் இப்போதைய அரசியல் அரங்கைப் பரபரபாக்கிக் கொண்டிருக்கின்றது.தற்போது ஜெனீவாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் .ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் இந்த விவகாரம் இடம்பிடித்துள்ளது.

இந்த விடயமும்கூட இணக்கப்பாட்டு அரசியலைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது.இதுகூட தமிழரின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாகவே உள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிர்களுக்கு நீதியைத் தேடும் இந்தப் போராட்டம் அநீதியைப் பெற்றுக் கொடுத்துவிடும் என்றே தெரிகின்றது.

இதில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதி வேண்டும்.குற்றவாளிகளான இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழர்களின் நிலைப்பாடாகும்.இந்த நிலைப்பாடு நிறைவேற்றப்படும்போதுதான் தமிழருக்கு முழுமையான நீதி கிடைத்ததாக அர்த்தப்படும்.அனால்,அது நடக்காது என்றே தெரிகின்றது.

40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்படவில்லை;போர் குற்றச்சாட்டை நிராகரித்து மனித உரிமை மீறல்கள் என்ற தலைப்பின் கீழே விசாரணை;சர்வதேச விசாரணையைத் தவிர்த்து உள்ளக விசாரணையே நடத்தப்படும்;அந்த உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படமாட்டார்கள்;இராணுவத்தினர் குற்றவாளிகளாகக் காணப்பட்டாலும் அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள்;பதிலுக்குப் பொறுப்புக் கூறல் மாத்திரமே நிறைவேற்றப்படும்.

போர்க் குற்ற விசாரணை தொடர்பான அரசின் நிலைப்பாடு இதுதான்.மேற்கூறப்பட்டுள்ள அரசின் இந்த நிலைப்பாட்டுக்குள் அடங்கியுள்ள எல்லா விடயங்களும் தமிழரின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாடாகும்.அது பாதிக்கப்பட்ட தமிழருக்கு எந்த வகையிலும் நீதியை-நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு உதவாத நிலைப்பாடாகும்.

இவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு இந்த விசாரணையை நடத்தினாலும் ஒன்றுதான் நடத்தாவிட்டாலும் ஒன்றுதான் என்பதுதான் தமிழர்களின் இப்போதைய நிலைப்பாடாகும்.

ஆகவே,ஒரு சில விடயங்களில் தமிழருக்கு சார்பாக நடந்துகொண்ட-இணக்கப்பாட்டு அரசியலைப் பாதுகாக்கும் விதத்தில் நடந்துகொண்ட அரசு தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளான அரசியல் தீர்வு மற்றும் போர்க் குற்ற விசாரணை தொடர்பில் தமிழருக்குப் பாதகமாக-இணக்கப்பாட்டு அரசியலைப் பாதிக்கும் விதத்தில் நடந்துகொள்கிறது.

இதில் கூட்டமைப்பின் நிலைதான் திண்டாட்டமாக உள்ளது.இணக்கப்பாட்டு அரசியலைத் தொடர்வதா அல்லது பழைய எதிர்ப்பு அரசியலுக்கு மாறுவதா அல்லது சர்வதேச உதவியின் ஊடாக-அழுத்தத்தின் ஊடாக மேற்படிப் பிரச்சினைகளில் தமிழருக்குச் சார்பான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக காய் நகர்த்துவதா என்று கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டியுள்ளது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *