2016 தொலைக்காட்சி அரச விருது விழா கொழும்பு நெலும்பொக்குன கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. தொலைக்காட்சி ஆக்கத்துறையின் தரத்தை மேம்படுத்தி இத்துறையைச்சார்த படைப்பாளர்களை அரச மட்டத்தில் பாராட்டும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்த விருது விழாவை வருடாந்தம் நடத்திவருகிறது.
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும ,பிரபல தொலைக்காட்சி திரை வசன எழுத்தாளர் சோமவீர சேனாநாயக்க, பிரபல நாடகக் கலைஞர் ஐராங்கனி சேரசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
கடந்த வருடம் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் ஒளிபரப்பான 40 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறந்த படைப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 76 பேர் இங்கு விருது வழங்கிக் கௌரவிக்கபட்டனர்.
இந்த நிகழ்வில் பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகைக்கான தேசிய விருதினை பெற்றுக்கொண்டார். வசந்தம் தொலைக்காட்சியில் அஸ்மின் தயாரிக்கும் ‘தூவானம்’ கலை -இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி 2015 ஆம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சியாக தேர்வாகியுள்ளது.
அதே போன்று நேத்ரா தொலைக்காட்சியில் அரசியல் தமிழ் நிகழ்ச்சியை நடாத்திவரும் செய்திப்பிரிவின் பிரதிப் பணிப்பாளா் யு.யாக்கூபின் சிறந்த அரசியல் நிகழ்ச்சி விருதினை பெற்றுக் கொண்டாா்.