குடும்ப வாழ்விலே பிரச்சினைகளும், பிரளயங்களும் ஏற்படுவதற்கு வறுமையும் ஒரு பிரதான காரணம். குடும்பத் தலைவிகளான பெண்கள் நன்கு திட்டமிட்து செயற்பட்டால் வறுமையை நீக்கி, குடும்பத்திலே சுபீட்சம் பெறுவதற்கு வழிவகுக்க முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் சிலிட்டா நிறுவனத்தில் தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கான சான்றிதழ் வழங்குதல் மற்றும் தையல் இயந்திரம் கையளித்தல் நிகழ்வு மூதூரில் நடைபெற்ற போது, பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
03 தசாப்த கால யுத்தம் வடக்கு, கிழக்கில் பொதுவாக எல்லோரையும் பாதித்தபோதும் பெண்களை வெகுவாக பாதித்தது. இந்தப் பிரதேசத்தில் கணவனை இழந்த பெண்கள் ஏராளமானோர். இந்த விதவைகள் குடும்பப் பொறுப்பை நேரடியாக தமது தலையில் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகினர். குடும்பச் செலவுக்கு உழைக்க வேண்டிய நிர்ப்பந்தமும், பிள்ளைகளை பராமரிக்க வேண்டிய கடப்பாடும், பாடசாலைக்கு ஒழுங்காக அனுப்ப வேண்டிய நிலையும் இவர்களிடம் வந்து சேர்ந்துள்ளது. எனவே விதவைப் பெண்கள் விடயத்தில், குடும்பத் தலைமையை பொறுப்பேற்றுள்ள பெண்களின் விடயத்தில்நாம் அதிக கரிசனை செலுத்த வேண்டியுள்ளது.
பெண்கள் சுய தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்க வழி உண்டு. அடுத்தவரிடம் கையேந்தும் சமூகமாக, பிறரையே நம்பி இருக்கும் சமூகமாக, பெண் சமூகம் தொடர்ந்தும் இருக்கக் கூடாது என்ற நோக்கத்திற்காகவே, நாங்கள் இவ்வாறான தையல் பயிற்சிகளை வழங்கி, தையல் இயந்திரங்களை கொடுக்கின்றோம். இவற்றை நீங்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.
பெண்கள் சமூதாயத்தின் கண்கள் என்று கூறுவர். சமுதாயத்தை வழி நடத்த வேண்டிய நீங்கள் அற்ப சந்தோசத்துக்காக தொலைக்காட்சிகளில் உங்கள் பொழுதைக் கழிக்கக் கூடாது. பிள்ளைகளை மடியில் போட்டுக்கொண்டு நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பதன் மூலம், பச்சிளங்குழந்தைகளையும், அதற்குப் பழக்கபப்டுத்த துணை போகின்றீர்கள். இந்த நிலையில் இருந்து நீங்கள் விடுபட்டு, இஸ்லாமிய வழிமுறைகளில் உங்கள் கவனத்தை மேலும் செலுத்த வேண்டுமென அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன் என அமைச்சர் கூறினார்.
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எம்.பிக்களான அமீர் அலி, இஷாக், மற்றும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அ இ ம காவின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.