உட்கட்சிப் பூசல்கள் தீர்ந்தும் – கூட்டு இழுபறிகள் நீங்கியும் தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தேசிய கட்சிகள் இறுதி தீர்மானமாக அறிவித்த பின், அதில் எந்த ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற கூடியவரோ அவருக்கே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேலும்,
நாட்டில் சமகாலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஆளும் அதிகாரம் கொண்ட கட்சிகள் மீதும் அவற்றின் தலைமைகள் மீதும் நம்பிக்கைகளை இழக்க செய்துள்ளன.
யாருக்கு ஆதரவளித்தும் நமக்கேதும் பிரயோசனம் இல்லை என்ற எண்ணமே வலுப்பெற்றிருக்கின்றது. உத்தரவாதங்கள் அனைத்தும் உதவாக்கரையானவை என்பதே மக்களின் தீர்வாக இருக்கின்றது.
சமகாலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள், பரிதவிப்புகள், பராமுகங்கள் அவர்தம் அரசியல் பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
ஆட்சி அதிகாரங்களால் வழங்கப்பட்ட உத்தரவாதங்களும் சமாளிப்புகளும், இழுத்தடிப்புகளும் நம்பிக்கை அரசியல் காரணமாக முஸ்லிம் மக்களுக்கு கிடை பெற்ற வெறுமையின் பெறுபேறுகள் என்பதை நிரூபித்துள்ளன.
இந்த நிலையில், தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் ஏமாறுவதற்கு தயாரில்லை என்பதை கடந்த காலப் பட்டறிவு சிறப்பாக நமக்குப் பாடம் படிப்பித்துள்ளது.
எனவே, ஆட்சி அதிகாரம் யார் வசம் வரப்போகின்றதோ அவர்களுக்கு ஆதரவளித்து எமக்குரிய உரிமைகளை உரிய முறையில் – உத்தரவாதம் அளிக்கும் ஏற்பாடுகளின் ஊடாகப் பெற்றுக் கொள்வதே முக்கியமானது என்பதை நாம் தீர்க்கமாக உணர்ந்து செயற்பட முடிவு செய்திருக்கின்றோம்.
இதற்கான வழிநடத்தல்களையே எமது கட்சி தற்போது மேற்கொண்டு வருகின்றது. எதிர்காலத்தில் முஸ்லிம் மக்கள் எதுவித அச்சமும் இன்றி வாழும் நிலையை உருவாக்க நாம் கூட்டுணர்வோடு திட்டமிட்டு செயற்பட முன்வந்திருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.