உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று சிறிலங்கா சுததந்திரக் கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் தலைமையில் வவுனியாவில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்றது.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் அழைப்பு விடுக்கப்ட்ட செயற்பாட்டாளர்கள் மாத்திரம் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கலப்பு தேர்தல் முறை மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாகவும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பான விளக்கங்களை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் வழங்கினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட திருத்தச்சட்டங்கள் தொடர்பாகவும் கிராம மக்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும்.
அத்துடன் வவுனியாவில் இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் தனிப்பட்டவரின் பிரச்சினைகளை சமூகப் பிரச்சனைகளாக மாற்றுவதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள் என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்திலுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.