(அனா)
தேசியத்திலே தலைமைத்துவம் என்று சொல்லி ஏதும் பேசாமல் இருந்து வெறுமனே தேர்தலுக்கு தயார் என்கின்ற ஒரு இயந்திரமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிஸின் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது காரியாலயத்தில் நூறு பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எஸ்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உண்மையுடன் இருக்கும் வரை வாழ வையுங்கள். நீங்களும் அதுவரை இருக்க வேண்டும். உங்களை இக்கட்சி ஏமாற்றுகின்றது என்று கருதினால் கட்சியின் தொண்டர்கள் ஆதரிக்க கூடாது.
கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறிய காரணத்தால் தான் அவர்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டு திரிகின்றார்கள். ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை தேர்தல் காலத்தில் மாத்திரம் புடவை வியாபரிகள் போல் வந்து கட்சி பாடல்களை போட்டு உரிமைகளை பேசி எமது உணர்வுகளை தூண்டி வாக்குகளை பெற்றுச் சென்றது தான் மிச்சம்.
கட்சி வேண்டும் என்று மக்கள் கட்சியின் பின்னால் இருந்ததால் தான் அதை அவர்களது பலமாக வைத்துக் கொண்டு பெருந்தலைவரின் மறைவுக்கு பின்னர் எம்மை தொடர்ந்து ஏமாற்றினார்கள். கட்சி என்பது எமது மார்க்கம் அல்ல, குறுவானும் அல்ல மக்களுக்கு பணி செய்ய உருவாக்கப்பட்டதே கட்சி.
கட்சிக்காக மக்கள் அல்ல மக்களுக்காகத் தான் கட்சி. கிழக்கு மாகாணத்திலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களுடைய பலவீனம் அவர்களுக்கு தெரிந்து போன காரணத்தால் எங்களை பிரித்து வைத்து ஒரு பிரதேசத்தில் ஐந்து தலைமைகளை வைத்து தேசியத்திலே தலைமைத்துவம் என்று சொல்லி ஏதும் பேசாமல் இருந்து வெறுமனே தேர்தலுக்கு தயார் என்கின்ற ஒரு இயந்திரமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மக்களுடைய வேலைத் திட்டங்களை, எதிர்பார்ப்புக்களை, அபிலாசைகளை, ஒட்டு மொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பை, தேசியத்திலுள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பை, பிற மாவட்ட பள்ளிவாயல்களின் பாதுகாப்பு போன்றவற்றை சிந்திப்பதற்கு அவர்களுக்கு நாம் இடம்கொடுக்காதது தான் அவர்கள் எங்களை ஏமாற்றினார்கள். இன்றும் ஏமாற்றி கொண்டு இருக்கின்றார்கள் என்றார்.