அரச சேவையானது நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பரந்து விரிந்துள்ளதாகவும் அது நாட்டுக்கு சுமை என நிதியமைச்சர் தெரிவித்துள்ளமையானது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கும் என நினைப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அந்த அறிவிப்பை கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
அரசாங்கம் இந்த நாட்டில் அரச சேவையை கலைப்பதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தயாராகி வருகின்றமை தெளிவாகின்றது என்றார்.
அரச பணியாளர்கள் ஓய்வுப்பெறும் வயதை 60 இலிருந்து 65 வரை உயர்த்துவதற்கான
யோசனையை வரவு- செலவுத்திட்ட உரையில் முன்வைத்த நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, அதற்கு மறுநாள் தான் தெரிவித்த கருத்துகளை தானே மீறி கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் பலிபீடத்தில் மூடி சூட்டப்படும் அரச பணியாளர்களைத் தமது நோக்கங்கள் நிறைவேறிய பின்பு, அரசாங்கம் இவ்வாறு நன்றி கெட்டதனமாக விமர்சிப்பதை நாம் ஆச்சிரியமாகப் பார்க்கவில்லை என்றும் அது இந்த நன்றி கெட்ட அரசாங்கத்தின் இயல்பாகும் என்றார்.
கொரோனா தொற்று பேரழிவு காலத்தில் அரச பணியாளர்களின் போற்றத்தக்க மற்றும் சிறந்த பணிகளை இந்த அரசாங்கம் கொரோனா பேரழிவு முடிவதற்குள் மறந்து விட்டு, அவர்களை சுமையாளர்களாகப் பார்ப்பதாகத் தெரிரவித்தார்.
எனினும், எவ்வித திட்டமிடலும் இல்லாமல், தன்னிச்சையாக அரச நிறுவனங்களுக்கு
ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டது யார் என்பதை முழு நாடும் அறியும் என்றார்.
ஆனால், இவை எதனையும் கருத்தில் எடுக்காத இந்த அரசாங்கம் தமது தவறுகளை அரச
பணியாளர்கள் மீது சுமத்தி, கைகழுவ எடுக்கும் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக முன்னுரிமை மற்றும் தலையீடு செய்த பெரும்பான்மையான அரச பணியாளர்களை குறித்த அறிவிப்பு ஊடாக பலமாகத் தாக்கியுள்ளது என்றார்.