பிரதான செய்திகள்

தேர்தல் காலத்தில் கல்முனை,சாய்ந்தமருது பிரதேசங்களை பிரித்தாலும் அரசியல்வாதிகள் உள்ளனர் அமைச்சர் றிஷாட்

(சுஐப் எம்.காசிம்) 

சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தருவதாக பிரதமரை கல்முனைக்கு அழைத்து வந்து வாக்குறுதி அளித்தவர்கள், இரண்டு தரப்பினரையும் ஒன்றாக இருத்தி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாமல் தனித்தனியாக சந்தித்து பேசியமையினாலேதான் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை பிரச்சினை தற்போது இழுபறி நிலைக்கு உள்ளாகி, விஷ்வரூபம் எடுத்திருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

டோஹா நகரில் உள்ள கொர்னிச் அல்பனார் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில், கட்டார் வாழ் இலங்கையர்களை சந்தித்துக் கலந்துரையாடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம், முஸ்லிம்களின் கல்வி, மீள்குடியேற்றம், அபிவிருத்தி நடவடிக்கைகள், மக்கள் காங்கிரஸின் அரசியல் நிலைப்பாடு ஆகியவை தொடர்பில் அமைச்சர், இந்த ஒன்றுகூடலின் போது தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் அமைச்சரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போது, அவற்றுக்கு அமைச்சர் விரிவாக பதில் வழங்கினார்.

சாய்ந்தமருதுக்கென தனியான பிரதேச சபையை உருவாக்கும் விடயத்தில் எமது கட்சியான மக்கள் காங்கிரசையும், பிரதேச சபை விவகாரத்தையும் இணைத்து முடிச்சுப் போடுபவர்களாக சிலர் இருக்கின்றனர். நாங்கள் அம்பாறை அரசியலுக்குள் அண்மையில்தான் காலடி எடுத்து வைத்தவர்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு சுமார் 33, 000 வாக்குகளை பெற்றபோதும் எந்தவொரு ஆசனமும் கிட்டவில்லை. எனினும், அந்தத் தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வாக்குறுதிகளை கொடுத்தவர்கள் இந்த விடயத்தில் இதய சுத்தியாக கருமம் ஆற்றவில்லை.

எங்களிடம் இந்த விவகாரத்தை சாய்ந்தமருது மக்கள் எடுத்து வந்தபோது, நாம் மேற்கொண்ட முயற்சியை அடுத்து, அமைச்சர் பைசர் முஸ்தபாவையும் அந்தப் பிரதேசத்துக்கு அழைத்துச் சென்று பின்னர் வாக்குறுதி வழங்கினோம். பிரதேச சபை உருவாக்கம் கனிந்து கொண்டிருக்கும் நிலையில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட சமூக நல இயக்கங்களின் பிரதிநிதிகள் என்னை வந்து சந்தித்து “கல்முனை மாநகர சபையில் இருந்து சாய்ந்தமருதுவை பிரித்து தனியான பிரதேச சபையை பெற்றுக் கொடுக்கும் முயற்சிக்கு உடந்தையாக இருக்க வேண்டாம். இந்தப் பாவத்தை செய்யாதீர்கள். இது ஒரு பெரிய அநியாயம்” என்று என்னிடம் வேண்டினர். அதேபோன்று சாய்ந்தமருது மக்களும் என்னை சந்தித்து தமது கோரிக்கையின் நியாயங்களை எடுத்துரைத்தனர். இந்த விடயம் தொடர்பில் 39 தடவைகள் கொழும்பு வந்திருப்பதாகவும், இது 40ஆவது தடவை என்றும் அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அமைச்சர் பைசர் முஸ்தபாவையும், இரு தரப்பினரும் சந்தித்து தத்தமது பக்க நியாயங்களை எடுத்துரைத்திருந்தனர்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா, கல்முனைத் தொகுதி பா.உ ஹரீஸ் மற்றும் நான் உட்பட கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே சிறந்தது என்று, என்னைச் சந்தித்த சாய்ந்தமருது பிரதிநிதிகளிடம் ஆலோசனை வழங்கினேன். அதன் பின்னர் அவ்வாறான ஒரு சந்திப்பு இடம்பெற்ற போது, கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரிப்பதற்கு கல்முனையைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் அங்கு யோசனை வெளியிட்டனர். ஏற்கனவே எங்களுடன் நடந்த சந்திப்பிலும் அவர்கள் இதை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம். இவ்வாறன ஒரு வாக்குறுதியை பிரதமர் தம்மிடம் வழங்கி இருப்பதால் அதற்கான கடிதத்தை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் உறுதியளித்தார்.

இதன் பின்னர் பிரதமரை சந்திப்பதற்கான நேரத்தையும் அவர் பெற்றார். பிரதமருடனான சந்திப்பில் சகோதரர் ஹக்கீமுடன் இணைந்து, என்னால் அங்கு வர முடியாதென, நான் கூறினேன். மாகாண சபை திருத்தச்சட்ட விவகாரம் தொடர்பில் எனக்கேற்பட்ட கசப்பான சம்பவங்கள் அனுபவங்களால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் இணைந்து பணியாற்றுவதில் பிரச்சினை இருப்பதாக பகிரங்கமாகத் தெரிவித்தேன். எனினும், கல்முனை சாய்ந்தமருது சார்ந்த பிரதிநிதிகள் பிரதமரை சந்திப்பதற்கு போகுமாறு விடாப்பிடியாக நின்றதனால், நான் அதற்கு சம்மதம் தெரிவித்தேன். பின்னர் நாங்கள் இருவரும் பிரதமரை சந்தித்த போது, அவர் மறுநாள் பைசர் முஸ்தபாவுடன் அமர்ந்து இந்த விவகாரத்தை தீர்ப்போம் என உறுதியளித்தார்.

மறுநாள் அமைச்சர்களான நாங்கள் மூவரும் பிரதமரைச் சந்தித்த போது, அவர் அது தொடர்பில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். அம்பாறை அரசாங்க அதிபரிடம் இது தொடர்பிலான விருப்பத்தைப் பெற்று, மேலதிக செயற்பாடுகளை முன்னெடுப்பதெனவும் அங்கு முடிவு செய்யப்பட்டது. அந்த சந்திப்பின் பின்னர் நாங்கள் ஜனாதிபதியுடன் கட்டார் நாட்டுக்கு வந்துவிட்டோம். தற்போது கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக அறிகின்றோம். இதுதான் உண்மை நிலை என்றும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் முஸ்லிம்களாகிய நாம் நூற்றுக்கு நூறு சதவீதம் பங்களிப்புச் செய்தவர்கள். முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதுமான ஞானசார தேரரின் அடாவடித்தனங்களை முன்னாள் ஜனாதிபதி கட்டுப்படுத்தாமல் விட்டதும், அரசும் பொலீஸாரும் தமது கடமைகளை சரியாகச் செய்ய தவறியதுமே அரசின் மீது நாம் நம்பிக்கை இழப்பதற்குப் பிரதான காரணம். எனவே, ஆட்சி மாற்றத்தை வேண்டி நின்ற நமது சமூகத்துக்கு புதியவர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்ததனால், அவரைப்பற்றி நாம் ஆராயவில்லை.

முஸ்லிம் தலைவர்களை விட முஸ்லிம் மக்களே இந்தத் தலைவர்களை ஆதரிப்பதில் முண்டியடித்துக் கொண்டு நின்றவர்கள். நானோ அமைச்சர் ஹக்கீமோ அமைச்சர் பைசர் முஸ்தபாவோ இவர்களை ஆதரிப்பதற்கு முதல், அவர்கள் தமது ஆதரவை வெளிக்காட்டத் தொடங்கி இருந்தனர். எனினும், ஆட்சி மாற்றத்துக்கு உதவுமாறு எம்மிடம் அமைச்சர் ராஜித, ஆசாத் சாலி மற்றும் ஜனாதிபதி மைத்திரி நடுநிசி இரவில் எம்மைச் சந்தித்து ஆதரவு கோரிய போதும், உடனடியாக நாங்கள் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அகதி மக்களின் நலன்களில் அக்கறை காட்டியதனால், அந்த அரசை விட்டு உடனடியாக வெளியேறுவது என்பது எனக்கு இலகுவாக இருக்கவில்லை. எனினும், எம்மை சந்தித்தவர்கள் சமூகம் தொடர்பான எதிர்கால அச்சத்தை வெளிக்காட்டிய போது, நாம் சாதகமான முடிவை வெளிப்படுத்தினோம். தற்போது, அரசாங்கத்தை விட்டு எம்மை வெளியேறுமாறு சிலர் வற்புறுத்துகின்றனர். இந்த அரசிலிருந்து எமது கட்சியைச் சார்ந்த ஐந்து பேர் வெளியேறினால் ஆட்சி மற்றம் ஏற்படுமா? ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியிலிருந்து இறக்கப்படுவாரா? இதனை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

நான் இந்த இடத்தில் உங்களிடம் ஒரு கேள்வியை எழுப்புகின்றேன். புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் முஸ்லிம்களின் பங்களிப்பை நாம் இன்று சிலாகித்துப் பேசுகின்றோம். அவர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இந்த அரசு, முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளாமல் அமைந்திருந்தால் என்னவாகும்? இதனை நான் உங்கள் சிந்தனைக்கு விடுகின்றேன்.

புதிய அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரக் குறைப்பு ஆகியவை தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அன்றைய காலகட்டத்தில் நமது சமூகத்தின் மீது கொடூரங்கள் காரணமாக, நாம் இந்த மாற்றங்களைப் பற்றி அப்போது அலட்டிக்கொள்ளவில்லை. அன்று இவைகள் எமது கண்ணுக்குப் பெரிதாக புலப்படவுமில்லை.
முன்னாள் ஜானதிபதி மஹிந்தவும் 2/3 பெரும்பான்மையுடனேயே ஆட்சி செய்தார். எனினும், அப்போது அவர் தனியான ஒரு தலைவராக இருந்தார். 18 ஆவது திருத்தத்தை கொண்டுவந்த போது, அந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அரசுடன் இணைந்த போது, 2/3 பெரும்பான்மை ஆதரவை அந்த ஆட்சி பெற்றது. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியை உருவாக்கி முஸ்லிம் சமூகத்தை நிம்மதியாக வாழ வைத்த ஜனாதிபதி ஒருவர், மூன்றாவது தடவையாகவும் ஆட்சி செய்ய விரும்புகின்றோம் என்று எம்மிடம் ஆதரவு கோரிய போது நாம் கை கொடுத்ததில் என்ன தவறு இருக்கின்றது? எனினும், அவர் நாம் செய்த நல்ல விடயங்களை எல்லாம் மறந்து அதிகாரத் திமிருடன் எமது சமூகத்துக்கு துன்பங்கள் ஏற்பட்ட போது, பார்த்துக் கொண்டிருந்ததனாலேயே அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.
இந்த ஆட்சியை கொண்டுவருவதில் முஸ்லிம் சமூகம் மட்டும் உரித்துடையதல்ல. தமிழ்ச் சமூகத்தினரும், மலையக சமூகத்தினரும் பெரும் பங்காற்றி இருக்கின்றார்கள். தமிழர்களை பொறுத்தவரையில் தனிநாட்டுக்காக போராடியவர்கள். தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்த இலக்கை நோக்கி பயணித்ததால் எந்த அரசுடனும் இணைந்துகொள்ளாமல் எதிர்க்கட்சி ஆசனத்திலேயே அமர்ந்து உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள். ஜனநாயக வழியிலும், ஆயுத போராட்டத்திலும் ஈடுபட்ட இந்த தமிழ்ச் சமூகம் பல்லாயிரக் கணக்கான உயிர்களை காவுகொடுத்தும் பல மில்லியன் சொத்துக்களை இழந்தும் இருக்கின்றது. எனவே, பின்னர் இவர்கள் சமஷ்டி தொடர்பில் பேசினர். இப்போது புதிய அரசியலமைப்பு செயற்பாட்டில் ஏதோ ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு தீர்வொன்றை பெறுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் அரசாங்கத்துடனான முஸ்லிம் அரசியல் சக்திகளின் பயணமும், இணங்கியும் பிணங்கியும் சென்று கொண்டிருக்கின்றது. முஸ்லிம் தலைவர்கள் அரசுடன் இருந்தும் நமது சமுதாயப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கின்றதா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
இந்த அரசாங்கத்தின் இரண்டு பெரிய கட்சிகளில் உள்ள இனவாதிகள் சிறுபான்மைச் சமூகத்தின் ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க வேண்டும், மாகாண சபையை ஆள வேண்டும், உள்ளூராட்சி சபைகளை தம்வசம் வைத்திருக்க வேண்டும் என்ற பேராசையில் உள்ளனர். உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்திலும், எல்லை நிர்ணயத்திலும் எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்து மலையக மக்களினதும், முஸ்லிம்களினதும் பிரதிநிதித்துவத்தை வெகுவாக அவர்கள் குறைக்க முற்பட்ட போது, நாங்கள் அதை எதிர்த்து போராடினோம். எமது போராட்டத்தின் விளைவினாலேயே 50/50 எமக்குக் கிடைத்தது. இது எமக்கு 100% சாதகம் இல்லாவிடினும், 60/40 ஐ விட நன்மை பயக்கக் கூடியது. இதனால் எம்மீது நாட்டுத் தலைமைகள் வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் இருப்பதை நாம் உணர்கின்றோம். எல்லை நிர்ணயத்தில் எமக்கேற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்யும் வகையில் சில முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் மேலும் தெரிவித்தார்.

Related posts

சிரியா மக்களுக்காக இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

wpengine

நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனம்!பிரதமர் வழங்கிவைத்தார்.

wpengine

ஜெர்மனியில் 20 லீட்டர் தண்ணீரை குடித்து வாழும் இளைஞனுக்கு வந்த சோதனை

wpengine