Breaking
Sun. Nov 24th, 2024

(சுஐப் எம். காசிம்)

இலங்கையின் சிறு, நடுத்தர தொழில் முயற்சியாண்மையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாரிய அளவில் ஐரோப்பிய யூனியனும், சர்வதேச நாடுகளும் உதவுவதற்கு முன்வந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால் (யு.என்.டி.பி) ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய வர்த்தகச் சந்தைக் கண்காட்சி பண்டாரநாயக்க சர்வசே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை அவர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

நிகழ்வில் அமைச்சர் உரையாற்றியதாவது,

இளைஞர் மற்றும் பெண்கள் , தொழில் புத்தாக்குனர்களை ஒரே தளத்தில் கொண்டு வந்து, உள்ளுர் மற்றும் சர்வதேச சந்தைகளில் அவர்களின் ஆக்கங்களையும், திறன்களையும் வெளிப்படுத்துவதில் எனது அமைச்சின் கீழான ‘சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மை’ யானது ஓர் இணைப்பு பாலமாக செயற்பட்டு வருகின்றது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஐ.நா அபிவிருத்தி நிகழச்சித் திட்டம் மேற்கொள்ளும் உதவிகளுக்கு நன்றி பாராட்ட வேண்டும். அத்துடன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது, தேசிய வடிவமைப்பு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு உதவி அளித்து வருகின்றது. இதுவரையில் பல்வேறு பிரிவுகளிலுள்ள அதாவது, பனம்பொருள், நார், இறப்பர், தையல், புடைவை, கயிறு, செங்களிமண், திரை அச்சிடல் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு ஐ.நா அபிவிருத்தித் திட்டம் உதவுகின்றது. முல்லைத்தீவு, மன்னார், முருங்கன், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொத்துவில் பிரதேசங்களிலுள்ள கிராமிய இளைஞர்களுக்கே இவ்வாறான பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐ.நா அபிவிருத்தித் திட்டம் இந்தப் பயிற்சி நெறியின் பங்காளராகவிருப்பதுடன், கனடா, நோர்வே மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் நிதியுதவியுடன் தேசிய வடிவமைப்பு நிலையம் இந்தப் பயிற்சி நெறிகளை முன்னெடுத்து வருகின்றது.
தேசிய புத்தாக்க அபிவிருத்தி அதிகார சபையின் (நெடா) செயற்பாடுகளுக்கும் ஐ.நா அபிவிருத்தித் திட்டம் உதவியளித்து வருகின்றது. பின் தங்கிய மாவட்டங்களின் பொருளாதரா வளர்ச்சிக்கும், பொருளியல் ரீதியான தயாரிப்புக்களை ஊக்குவிப்பதற்காக வியாபார அபிவிருத்தி உதவி, திறன் அபிவிருத்தி, பொருளியல் ஆலோசனைச் சேவை ஆகியவற்றை பிரதேச மட்டங்களில் நெடா மேற்கொள்வதற்கு யு.என்.டி.பி நிறுவனமே உதவி அளிக்கின்றது.
2030ம் ஆண்டு இலங்கையின் நிலை பேண் அபிவிருத்தி இலக்கை அடைவதற்குத் தேவையான மூலவளங்கள் மற்றும் அபிவிருத்தி இயலுமைப் பங்களிப்பு ஆகியவற்றுக்கு ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் போன்ற சர்வதேச நிறுவனங்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
ஜனாதிபதி மைத்திரினால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தூர சிந்தனையுடனான இலக்கை நோக்கியே நாம் பயணிக்கின்றோம். அரசாங்கத்தின் கொள்கை, அபிவிருத்தித் திட்ட மூலோபாய விடயங்களுக்கும் சிறு மற்றும் நடுத்தர முயற்சியாண்மையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதென அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளுர் பொருளாதார வளர்ச்சியில் பிராந்திய அபிவிருத்தி, இளைஞர் வேலைவாய்ப்பு, வறுமைக் குறைப்பு ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மை தனது செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. அத்துடன் மொத்த உள்ளுர் உற்பத்தியில் 52 சதவீதமான பங்களிப்பையும், தொழில்வாய்ப்பில் 45சதவீதமான பங்களிப்பையும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மை வழங்கிவருவதை நாம் நம்பிக்கையுடன் வெளிப்படுத்துகின்றோம்.

பூகோள மயமாக்கலின் போக்கு அதிகரித்துள்ள தற்போதைய காலகட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையானது, நாட்டின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் துரிதப்படுத்துவதற்கு உதவி வருகிறது.

எனது அமைச்சும் எனது அமைச்சின் கீழான தேசிய புத்தாக்க அபிவிருத்திச் சபையும் இணைந்து தேசிய சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி கொள்கையையும், தேசிய சிறிய மற்றும் நடுத்தர அபிவிருத்தி அதிகார சபையையும் அறிமுகப்படுத்துகின்றது என்பதை மிகவும் சந்தோசத்துடன் தெரிவிக்க விரும்புகின்றேன். அத்துடன் இவற்றிற்கான அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதுடன் இதற்கான கட்டமைப்பு குறித்தான பணிகளில் அமைச்சினது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மை ஒரு கூட்டு முயற்சி என்றே கருதுகின்றோம். இந்த முயற்சிக்குத் தொடர்ச்சியான வழிகாட்டல்களும் அனுசரணைகளும், பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் அதிகார சபைகளிடமிருந்தும் தேவைப்படுகின்றன என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *