Breaking
Thu. Apr 25th, 2024

பல கோடி ரூபா செலவில் கோலாகலமாக நடத்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பங்கேற்றிருந்த போதிலும் அவர்கள் முன்னிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பிரஸ்தாபிப்பதற்கு மு.கா. தலைமை தவறி விட்டது என அக்கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபைக் குழுத் தலைவரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய கிளைகளை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் தேசிய மாநாட்டை அண்மையில் கோலாகலமாக நடத்தி முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. மாநாடு கோலாகலமாக நடந்தது உண்மைதான். ஆனால் இந்த மாநாட்டினால் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்துள்ள ஒரு நன்மை என்ன? கட்சி சாதித்தது என்ன? இந்த மாநாட்டில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டிருந்த நிலையில் அவர்களிடம் இருந்து மு.கா. தலைமை சமூகத்திற்காக எதனை பெற்றுக் கொடுத்தார்? அல்லது பெற்றுக் கொடுக்க முயன்றது தான் என்ன? அவர்களிடம் விடுத்த வேண்டுகோள்கள்தான் என்ன? என்ற கேள்விகளை எழுப்பினால் எல்லாவற்றுக்கும் ஒரே பதில் பூச்சியம்தான்.

சத்திர சிகிச்சை வெற்றிதான், ஆனால் நோயாளி மரணம் என்பது போன்றதே முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டு பெறுபேறாகும். இங்கே கொல்லப்பட்ட நோயாளிகள் யார் என்றால் முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளும், அபிமானிகளும் ஆதரவாளர்களும் கட்சியின் வளர்ச்சிக்காக தங்களையே அர்ப்பணித்த தியாகிகளும்தான் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்ட இந்த மாநாட்டின் மூலம் ஒற்றை ரூபாவுக்காவது முஸ்லிம் சமூகத்துக்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் உயிர் நாதமான கிழக்கு மாகாண மக்களுக்கு ஏதாவது நன்மைகள் கிடைத்துள்ளனவா? குறைந்தபட்சம் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து நாட்டின் தலைவரினதும் பிரதமரினதும் கவனத்துக்குக் கூட கொண்டு வரப்படாத ஒரு கூடிக்கலையும் கூத்தாடிக் கூட்டமாகவே இந்த மாநாடு முடிவடைந்துள்ளது.

இதுதான் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் சாதனை. இந்த தலைமைத்துவம் இனிமேலும் தேவையா என்ற ஒரு அவசர முடிவுக்கு கிழக்கு மாகாண மக்கள் வரவேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுள்ளதை இந்த மாநாடு உணர்த்துகிறது. தமழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த மாநாட்டு மேடையைப் பயன்படுத்தி தனது சமூகத்தின் தேவையை, எதிர்ப்பார்ப்பை நாட்டின் தலைவரின் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் என்ன செய்துள்ளார். தனக்கு வேண்டாதவர்களை அச்சுறுத்தவும் திட்டித் தீர்க்கவும் தான் இந்த மேடையைப் பயன்படுத்தியுள்ளார்.

ஹக்கீமின் ஒட்டு மொத்த உரையில் ஒரு இடத்திலாவது முஸ்லிம் சமூகத்தின் தேவைகள், பிரச்சினைகள் அபிலாஷைகள் பற்றி ஒரு வார்த்தையாவது எதிரொலித்ததா? என்று தேடிப் பாருங்கள். இது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை ஹக்கீம் ஏற்றது முதல் அந்த கட்சி அதள பாதாளத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றது. கட்சியில் ஏற்பட்ட பிளவுகள் இதற்கு போதிய சான்றாகும். தேர்தல் காலத்தில் மட்டும் ஏதாவது ஒரு பிரச்சினையை தூசு தட்டி எடுத்து அதனோடு தொடர்புடைய வாக்குறுதிகளை வழங்கி அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வார். அதன் பிறகு அடுத்த தேர்தல் வரை அதைப் பற்றி பேசவே மாட்டார். கட்சிக்குள் இருந்து கொண்டு முடியுமானவரைக்கும் இந்த நயவஞ்சக போக்கிற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளேன். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. அதன் விளைவாகத்தான் நான் உயிருக்கும் மேலாக நேசித்த கட்சியை விட்டு விலக வேண்டிய துரதிஷ்டம் எனக்கு எற்பட்டது.

வடக்கு, கிழக்கில் அரசாங்கத்தால் பறிக்கப்பட்ட காணியை மீட்டு எடுப்பதில் தமிழ் தரப்பு மிகவும் முனைப்போடு செயற்படுகின்றது. ஆனால் தமது காணிகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் சார்பாக ஒரு கட்சித் தலைவர் என்ற ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன?  அரசியல் யாப்பு சீhதிருத்தம் பற்றி பேசப்பட்டு வரும் இன்றைய காலப்பகுதியில் வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற ரீதியில் தமிழ் தரப்பு பல்வேறு வழிகளில பல்வேறு அரங்குகளில் கருத்துக்களை முன்வைத்து காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது. ஒரு கட்சித் தலைவர் என்ற ரீதியில் இந்த விடயத்தில்; ஹக்கீமின் நிலைப்பாடு என்ன?

எங்காவது அவர் இது பற்றி ஒரு வார்த்தையாவது பேசியதுண்டா? சம்பந்தன் ஐயாவையும் மேடையில் வைத்துக் கொண்டு சாணக்கியமாக இது பற்றி தனது கட்சியின் நிலைப்பாட்டை ஹக்கீம் வெளியிட்டிருந்தால் அவரை வாழ்த்தலாம். ஆனால் அவர் தனக்கு பிடிக்காதவர்களை தூற்றத்தான் இந்த மேடையை முழுக்க முழுக்க பயன்படுத்தினாரே தவிர சமூகப் பிரச்சினை பற்றி எதுவும் பேசாமல் விட்டுவிட்டார். கல்முனை கரையோர மாவட்டம், முஸ்லிம்களுக்கான தனி அலகு என தேர்தல் காலங்களில் முழங்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இது பற்றிய தனது சரியாக நிலைப்பாட்டை மாநாட்டு மேடையில் நாட்டின் தலைமைக்கு முன்னால் வெளியிட்டிருக்கலாமே. அதைப்பற்றி பேசாமல் விட்டது ஏன்?

தான் சொன்னால் மக்கள் எந்த வகையிலும் நம்ப மாட்டார்கள் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்த ஹக்கீம் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தனக்கு எற்பட்டிருந்த சரிவை ஈடுசெய்யும் துருப்புச் சீட்டாக பிரதமரைப் பயன்படுத்தி அவர் மூலம் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை பற்றிய வாக்குறுதியை மக்களுக்கு வழங்கினார். பாவம் மக்களும் இதை நம்பி கடைசி நேரத்தில் வழமைபோல் ஹக்கீமிடம் ஏமாந்து போனார்கள். குறைந்தது இந்த கட்சி மாநாட்டு மேடையில் மீண்டும் அதை பிரதமருக்கு நினைவூட்டும் வகையில் ஹக்கீம் ஒரு வார்ததையாவது உதிர்த்தாரா? சாய்ந்தமருது பிரதேச சபை விடயத்தை இருவருமே சௌகரியமாக மறந்து போனதன் காரணம் என்ன? என்று மக்களுக்கு விளக்கமளிக்க ஹக்கீமால் முடியுமா? பொதுத்தேர்தல் மேடையில் பிரதமருக்கு எழுதிக் கொடுத்து இதைப் பற்றி பேச ஞாபகம் ஊட்டிய ஹக்கீம் தனது கட்சி மாநாட்டு மேடையில் அதை மறந்தது ஏன்?

ஹக்கீமின் பலவீனங்களை நன்கு புரிந்து வைத்துள்ள ஜனாதிபதியும் பிரதமரும் அதை தமக்கு சாதகமான முறையில் பயன்படுத்தி வருவதையும் அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிகின்றது.  சாதாரணமாக ஒரு அரசியல் கட்சியின் மாநாடு என்றால் அதன் முடிவில் கொள்கை சார்ந்த, தனது சமூகம் சார்ந்த அல்லது தேசிய அளவில் முக்கியத்தவம் மிக்க பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அந்த தீர்மானங்கள் அடங்கிய பிரகடனமும் வெளியிடப்படும். முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? வெளியிடப்பட்ட பிரகடனம் என்ன? இரண்டு உயர்பீட உறுப்பினர்களை இடைநிறுத்தி உள்ளேன். இன்னும் சிலரை அடுத்து வரும் நாற்களில் இடைநிறுத்தவுள்ளேன. இதைத் தவிர வேறு பிரகடனங்கள் ஏதும் செய்யப்பட்டதா?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி இந்த நாட்டு முஸ்லிம்களின் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களின் இரத்தம், வியர்வை, கடின உழைப்பு, அர்ப்பணம், தியாகம் என்பனவற்றால் வளர்க்கப்பட்டது. மரத்துக்கு மக்கள் இட்ட உரம் இவைதான். அதனால்தான் அது இன்று திடமாக உள்ளது. அந்த மரம் துளிர்விடத் தொடங்கியது முதல் அதன் வளர்ச்சியில் பங்கேற்றவர்களில் நானும் ஒருவன். கட்சிக்குள் இடையில் வந்து ஒட்டிக் கொண்டவன் அல்ல நான். அதனால்; கட்சியின் தலைமைத்துவத்தை தைரியமாகச் சாடும் உரிமை எனக்கு சற்று அதிகமாகவே உள்ளது. முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி காலத்தை கடத்தும் உரிமையை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு இனிமேலும் வழங்க முடியாது. தேர்தல் காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் மந்தைக் கூட்டம் அல்ல இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு உணர்த்த வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்- மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரப்புடைய கொள்கைகளின் அரிச்சுவடியைக் கூட புரிந்து கொள்ள முடியாத அல்லது புரந்து கொள்ளும் ஆhவம் அற்ற ஒரு தலைமைத்துவமாகத்தான் இன்றைய தலைமைத்துவம் காணப்படுகின்றது. இறுமாப்பும் அகந்தையும் தலைக்கேறி கட்சியின் ஆரம்ப கால சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் ஓரம்கட்டப்படும் ஆபத்தான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.  அது அந்தக் கட்சியை மேலும் பள்ளத்தில் தள்ளிவிடும். அதிலிருந்து அந்தக் கட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அதன் போராளிகளையே சாரும். அவர்கள் முதலில் தமது கண்களை திறந்து, சிந்தனைத் தெளிவுடன் கட்சியின் இன்றையை உண்மையான நிலைவரத்தை புரிந்து கொள்ள முன்வர வேண்டும்” என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *