அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு தொழிற்சங்கத்தினர் செயற்பட்டனர், அவர்களுடன் அரசாங்கம் மோதாது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு மாபியாக்களாக செயற்படும் தொழிற்சங்கத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.ஆகவே அவர்களுடன் அரசாங்கம் மோதாது. துறைமுக மாபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அவர்களை அரசாங்கம் தாலாட்டுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு மக்களையே சேரும்.மாபியாக்களை அடக்காத அரசாங்கம் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை எவ்வாறு சிறந்த முறையில் நிர்வகிக்கும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் கேள்வியெழுப்பினார்

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற  ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

துறைமுகத்தில் தற்போது நிலவும் கொள்கலன் சிக்கல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.இந்த நெருக்கடியின் பொறுப்பை ஜனாதிபதியும், அரசாங்கமும் ஏற்க வேண்டும். சுங்கத்திணைக்களத்தின் சேவையாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் சட்டபடி வேலையில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அவ்வாறு சட்டப்படி வேலையில் ஈடுபடுவதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

சுங்கச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும. நல்லாட்சி அரசாங்கத்தில் அப்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீர சுங்க சட்டத்தை திருத்தம் செய்வதற்கு   சட்டமூலத்தை முன்வைத்த போது மக்கள்  விடுதலை முன்னணியும் அவர்களுக்கு சார்பான தொழிற்சங்கங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.அதன் விளைவையே நாடு இன்று எதிர்க்கொள்கிறது.

 பொருளாதார பாதிப்புக்கு அரசியல் கட்சிகள்  பொறுப்புக் கூற வேண்டும் என்று   தேசிய மக்கள் சக்தியினர் குறிப்பிடுகிறார்கள். பொருளாதார முன்னேற்றத்துக்கு சாதகமான வகையில் சட்டங்களை திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராகவே செயற்பட்டது. ஆகவே துறைமுக நெருக்கடிக்கும், தற்போதைய பொருளாதார பாதிப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக் கூற வேண்டும்.

தேசிய  மக்கள்  சக்தி அதிகாரத்துக்கு வருவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். ஆகவே அவர்களுக்கு எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது. துறைமுக கொள்கலன்கள் நெருக்கடியினால் பாரிய   வருமானத்தை சுங்கத் திணைக்களம் இழந்துள்ளது. இதனை ஜனாதிபதியின் செயலாளர் நன்கு அறிவார் இருப்பினும் அவர் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கம் தான் துறைமுகத்தை ஆக்கிரமித்துள்ளது ஜனாதிபதி ஏன் இவ்விடயத்தில் தலையிடவில்லை. கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் துறைமுக மாபியாக்களை அரசாங்கம் தாலாட்டுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு மக்களையே வந்தடையும்.

நெல் மாபியா, அரிசி மாபியா, தேங்காய் மாபியா, தேங்காய் எண்ணெய் மாபியா,  கடவுச்சீட்டு மாபியா என்று மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கத்தினரே  பலம் வாய்ந்த மாபியாக்களாக செயற்படுகின்றனர். ஆகவே மாபியாக்களை அடக்காத அரசாங்கம் எவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்கும். ஆகவே அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது என்றார்.

Related posts

பொலீஸ் மா அதிபர் நியமனம்! அரசியலமைப்புக்கு எதிரானது – பசில்

wpengine

கிரிக்கெட் விளையாட்டுக்கான பாதணிகளை வழங்கி வைத்த அன்வர்

wpengine

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற உள்ளவர்களுக்கான அறிவித்தல்!

Editor