எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவார் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ராகமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கிடைத்துள்ள தகவல்படி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார் எனவும் அவர் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.
கட்சியின் தலைவரான அவர் ஏன் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வருகிறார் என்பது கடவுளுக்கு தான் தெரியும்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியே வேட்புமனுக்களை வழங்கும். ரணில் விக்ரமசிங்கவும் அதில் போட்டியிடலாம். அவர் விரும்பினால் தனியாகவும் போட்டியிடலாம்.
ரணில் விக்ரமசிங்க தற்போது அமைதியாக இருப்பது தொடர்பாக வியப்பாக இருக்கின்றது. பேச்சுவார்த்தைகளை நடத்தினோம், சில இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளோம்.
திங்கட் கிழமை கூட்டணியை உருவாக்குவோம். அன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க கலந்துக்கொள்ள வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் தொடர்ந்தும் இருக்கின்றேன்.
கட்சியினரில் பெரும்பாலானோர் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளனர் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.