கட்டுரைகள்பிரதான செய்திகள்

தேசிய பட்டியல் நியமனம்! ஹக்கீமின் பார்வையில் ஹசன் அலி, பஷீர் நம்பிக்கை அற்றவர்கள்.

(மொஹமட் பாதுஷா)

பதவிகளும் பட்டங்களும் மிகப் பெரிய போதைகளாகும். அதை ஒருமுறை அனுபவித்து விட்டால், அதன் சுகம் தலைக்கேறிவிடும். நீண்டகாலத்துக்கு அதில் கட்டுண்டு கிடப்பதற்கே மனம் நாடும் என்பதை நாமறிவோம். ‘போதை’ அருந்துபவர்கள் பற்றியும் நமக்குத் தெரியும். வெளியில் என்ன நடந்தாலும்; அதுபற்றி அவர்கள் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். பதவி போதையில் இருக்கின்ற பல அரசியல்வாதிகளிடத்தே இவ்வாறான பண்புகளை அவதானிக்க முடிகின்றது. முக்கியமாக, முஸ்லிம் அரசியலுக்கு இது பொருந்தும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு, ஐக்கிய தேசிய கட்சியால் பிரதியுபகாரமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைகள் பற்றிய கதைகள் எல்லாம், இப்போது சிலருக்கு பழங்கதை ஆகிவிட்டதாகத் தெரிகின்றது. இந்தப் பிரச்சினையை இப்படியே இன்னும் பல மாதங்களுக்கு, வருடங்களுக்கு இழுத்துச் சென்றுவிட ஓரிருவர் நினைக்கின்றனர். யார் என்ன செய்தாலும் பரவாயில்லை நமது காரியம் முடிந்தால் போதுமென்ற நினைப்பில் மேலும் பலர் இது பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர். யாருக்கோ உரித்துடைய தேசியப் பட்டியல் எம்.பி பதவியை யாரோ அனுபவித்துக் கொண்டிருக்க, மிகத் தெளிவாக மக்களின் தலையில் மிளகாய் அரைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றமை, இன்றுவரை சிலருக்கு உறைக்கவே இல்லை.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது மக்களின் கட்சி. கிழக்கிலுள்ள முஸ்லிம்களில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரைச் சொன்னாலே மெய் சிலிர்த்துப் போகும். அந்தளவுக்கு அவர்கள் அக்கட்சியை நேசிக்கின்றனர். அவ்வாறு மு.காவை உளப்பூர்வமாக ஆதரிக்கும் கணிசமான மக்கள், கிழக்குக்கு வெளியிலும் உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸுக்குள் இன்று ஏற்பட்டிருக்கின்ற பெரும் சிக்கல்களுக்கு இரண்டு விடயங்களைக் காரணமாகக் குறிப்பிடலாம். முதலாவது, தேசியப் பட்டியல் எம்.பிப் பதவிகளுக்கு தற்காலிகமாக நபர்களை நியமித்ததில் ஏற்பட்ட அதிருப்தி. இரண்டாவது, செயலாளரின் பதவிக்குண்டான அதிகாரங்களை மேசைக்கு கீழால் பறித்தெடுத்தமை ஆகியவையாகும். இதிலும் மிக அடிப்படைக் காரணி, தேசியப்பட்டியலே.

ஏனென்றால், செயலாளர் எம்.ரி.ஹசன் அலிக்கும், தவிசாளர் பஷீர் சேகுதாவூதுக்கும் அல்லது, அவர்களுள் ஒருவருக்கேனும் எம்.பி பதவியை கொடுத்திருந்தால், இவ்விருவரும் இன்னும் சில காலம் அமைதி காத்திருக்கலாம் என்றே அனுமானிக்க முடிகின்றது.

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் அரசியலோடு நேரடியாகத் தொடர்புபட்டிராத இருவரின் பெயர்களையும் தேசியப்பட்டியலில் பெயரிட்டிருந்தார். முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டு இன்னும் பதவிகளைப் பெறாமல் இருக்கின்றவர்களும், காலகாலமாக அக்கட்சிக்கு வாக்களித்துக் கொண்டு தேசியப் பட்டியல் எம்.பி கிடைக்குமென்று இலவு காத்துக் கொண்டிருக்கின்ற பல பிரதேசங்களும் இப்பட்டியலில் இடம்பெறுவதற்கான 2 வாய்ப்புகள் இதன்மூலம் கபளீகரம் செய்யப்பட்டன என்பதே உண்மை. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்சிக்குள் இருக்கின்ற ஹசன் அலி, பஷீர் உள்ளிட்ட மற்றைய உறுப்பினர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் இதை தட்டிக் கேட்டிருக்க வேண்டும். அதுவே, ஆரம்பத்தில் விட்ட தவறாகும். பெயரைப் போட்டதே தவறு என்று கருதப்படுமிடத்து, தற்காலிகமாக தனது சகோதரர் ஹபீஸையும் நண்பர் சல்மானையும் எம்.பிகளாக நியமித்தமை அதைவிட பெரிய தவறுகளாகவே இருக்க வேண்டும். அதைக்கூட தளபதிகளும் உயர்பீட உறுப்பினர்களும் ஏன் என்று கேட்டு தடுத்து நிறுத்தவில்லை. இது இரண்டாவது தவறு.

அவ்வேளையில், கட்சியின் தலைவர் ஒரேயொரு வரியில் விளக்கமளித்தார். ‘எனக்கு விசுவாசமானவர்கள் இருவரைத் தற்காலிகமாகப் போட்டுள்ளேன்’ என்று அவர் கூறினார். இதன்மூலம் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்ட ஏனைய முக்கியஸ்தர்களிடத்தில் நம்பிக்கையில்லை என்று சொல்லாமல் சொன்னார். ஹசன் அலியையும் பஷீரையும் நிசாம் காரியப்பரையும் நம்பிக்கை அற்றவர்கள் என்று கூறுவதானது, சிரேஷ்ட உறுப்பினர்கள் எல்லோரையும் நம்பிக்கை அற்றவர்களாகக் கூறி மட்டம் தட்டுவதற்குச் சமமானது என்பது கூட, பலருக்கு விளங்கவேயில்லை இது இந்தச் சமூகத்தின் இமாலய கைசேதமாகும். கிழக்கில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் இருக்கின்ற ஒரு நல்ல போராளியை விடவும் சல்மானும்.

ஹபீஸும் இந்தக் கட்சிக்காக எந்த தியாகங்களை செய்திருக்கின்றார்கள், எந்த அடிப்படையில் அவர்கள் விசுவாசமானவர்களாக கொள்ளப்படுகின்றார்கள், என்று பகிரங்கமாக தலைவரிடம் கேட்டு, மக்களுக்கு அதற்கான பதிலைப் பெற்றுக் கொடுக்க யாருக்கும் திராணியிருக்கவில்லை. உயர்பீட உறுப்பினர்களுக்கோ, வெளியே தலைவருக்கு ஆதரவாக அறிக்கைவிட்டுக் கொண்டு இரகசியமாக ஹக்கீமுக்கு எதிராக செயற்படுவோருக்கோ இதன் கனதி விளங்கவும் இல்லை.

காரணம், பதவி ஆசை பிரதேச சபை உறுப்பினராக உள்ளவர்களுக்கு மாகாண சபைக்குச் செல்லவும் மாகாணத்தில் இருப்போருக்கு எம்.பியாக வேண்டும் என்றும், வாக்கு வங்கியே இல்லாதோருக்கு தேசியப்பட்டியல் தேவை என்றும் கனவு இருக்கின்றது. எனவே, தலைவருடன் வாக்குவாதப்பட்டு வாய்ப்புக்களை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்தனர். இதை மிக நன்றாக அறிந்து வைத்திருக்கும் தலைவர் ‘ஆடுகிற மாட்டை ஆடியும் பாடுகின்ற மாட்டை பாடியும்’ என்ற மாதிரியில் தன்விருப்பப்படி காரியத்தை முடித்துக் கொண்டிருக்கின்றார்.

தலைவர் மிகச் சிறந்த விசுவாசிகள் இருவருக்கு எம்.பி வழங்கினார் என்பதை ஏதோவோர் அடிப்படையில் பொறுத்துக் கொள்வோம் என்று வைத்துக் கொள்வோம். அவர், கட்சியின் தலைவர். அவருக்கென்று சில வரப்பிரசாதங்கள் இருக்க வேண்டும். அந்த வகையில் ஓர் அவசரத்துக்காக அதைச் செய்தார் என்று வைத்துக் கொண்டாலும், ‘தற்காலிகம்’ என்று சொல்லப்படும் ஒரு சொல்லின் உண்மையான அர்த்தம்தான் என்ன, என்று பொது மக்கள் சிந்திக்க வேண்டும். அவரது சகோதரர் ஹபீஸ் சுமார் நான்கு மாதங்களாக அப்பதவியை வகித்தார். சல்மான் எம்.பி இந்த நிமிடம் வரைக்கும் எட்டு மாதங்களாக அப்பதவியில் இருக்கின்;றார். அப்படியென்றால் இது ‘தற்காலிகம்’ என்று சொல்லலாமா, கடுமையாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. ‘மறுஅறிவித்தல் வரை’ இப்பதவியை மேற்படி இருவருக்கும் வழங்குவதாகச் சொல்லியிருந்தால், அது பொருத்தமாக இருந்திருக்கும். இப்போது சல்மான் எம்.பி வகித்துக் கொண்டிருக்கின்ற பதவியைப் பார்த்தால், அவருக்கு சுழற்சிமுறையான எம்.பி பதவி கொடுத்தது போல் இருக்கின்றது என்றார் ஒரு மூத்த போராளி.

இத்தனை மாதங்கள் இருவருக்கு எம்.பி பதவிகளை தற்காலிகமாக வழங்க முடியுமாக இருந்தால், பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி, நிசாம் ஆகியோருக்கு தலா இரண்டு மாதங்களுக்கு எம்.பி பதவியை வழங்கியிருக்கலாம். ஜம்இய்யதுல் உலமா சபை முன்னிலையில் சட்ட ரீதியான ஆவணத்தில் ஒப்பமிட்டு, மக்கள் சாட்சியாக அதைச் செய்திருந்தால், அவர்கள், அப்பதவியை இராஜினாமாச் செய்வதற்கு மறுக்க முடியாது. அப்படிச் செய்தால் மக்கள் அவர்களை காறி உமிழ்ந்து விடுவார்கள். இப்படி அவர்களுக்கு வழங்கப்பட்ட எம்.பி

பதவியை மீளப்பெற்று இந்நேரம் அட்டாளைச்சேனைக்கோ, வன்னிக்கோ அன்றேல் பொருத்தமான வேறு யாருக்கோ அதை வழங்கியிருக்கவும் முடியும். இப்படிச் செய்திருந்தால் தவிசாளரும் செயலாளரும் இந்தளவுக்கு கிளர்ந்தெழுத்திருக்க மாட்டார்கள். அதேபோன்று தேசியப்பட்டியலுக்காக காத்துக் கொண்டிருக்கும் ஊர்களின் மக்களும் ஓரளவுக்கு திருப்தி அடைந்திருப்பார்கள் என்று கருதலாம். ஆனால், அது நடக்கவில்லை. இன்னும் ஒரு தேசியப்பட்டியல் பதவிக்கான நிரந்தர உறுப்பினர் நியமனம் இழுபறியாகவே உள்ளது.

மறைந்த தலைவரின் காலத்தில் அசித்த பெரேரா என்றொருவர், மு.கா ஊடாக தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டார் என்பது நமக்குத் தெரியும். இது அக்காலத்தில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியிருந்தது. ஆனால், தலைவர் தனது தீர்மானத்தில் உறுதியாக இருந்ததுடன், அதற்கான காரணங்களையும் மக்களுக்கு சொன்னார். அஷ்ர‡ப் தனது கடைசி மேடைப் பேச்சில் அசித்த பெரேரா பற்றியே அதிகம் பேசினார். ‘ஒரு மனிதனை பின்பற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், அசித்தவை பின்பற்றுமாறு தனது மகனுக்கு கூறியிருப்பதாக’ அவர் கூறினார் என்றால், அந்த பதவி வழங்கப்பட்டதில் உள்ள நியாயங்கள் எவ்வளவு ஆழமானவை என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், இப்போது தேசியப்பட்டியல் எம்.பி பதவியை இவ் விருவருக்கும், குறிப்பாக இரண்டாமவருக்கு ஏன் இன்னும் வழங்கியுள்ளோம் என்ற எந்த விளக்கத்தையும் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக அறிவிப்புச் செய்யவில்லை.

இத்தனை பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கின்ற போதும், சல்மான் எம்.பியை இராஜினமாச் செய்யுமாறு தலைவர் ஹக்கீம் கோரியதாகவோ, அதற்கு சல்மான் எம்.பி மறுத்ததாகவே தகவல்கள் கசியவில்லை. நம்மால் இத்தனை சிக்கல் தலைவருக்கு ஏற்பட்டிருக்கின்றது என்று நிலைமைகளைப் புரிந்து கொண்டு சல்மானும் இராஜினாமாச் செய்யவும் இல்லை. முன்னரே சுஹைர், ஹூசைன் பைலா போன்றோர் தொடர்பில் கசப்பான அனுபவங்களை பெற்றுள்ள மு.காவுக்கு இது இன்னுமொரு சத்திய சோதனையாக மாறியிருக்கின்றது. இது பற்றி, விசாரித்துப் பார்த்ததில் சில உள்வீட்டு தகவல்கள் கசியவந்தன. அது என்னவெனில், யாருக்கு அடுத்த தேசியப்பட்டியல் எம்.பியை கொடுப்பது என்ற பிரச்சினையே இப்போது பிரதானமாக ஏற்பட்டிருக்கின்றது. அத்தோடு, சல்மான் எம்.பியிடம் இருந்து அப்பதவியைப் பெறுவதிலும் ஹக்கீமுக்கு சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தலைவருக்கும் சல்மானுக்கும் இடையிலான உறவில் குறிப்பிடத்தக்க விரிசல்கள் ஏற்படவில்லை என்றே கூறப்படுகின்றது.

அண்மையில் ஊடகத்தை கையாளும் விடயத்தில் தன்னைப் பிழையாக வழிநடாத்தியதாக சல்மான் எம்.பியை தலைவர் கடிந்து கொண்டதாகவும் இணையத்தில் ஊகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், கிழக்கில் நடைபெற்ற ஊடகவியலாளர்களின் நோன்பு திறக்கும் நிகழ்வில், ‘நிலைமைகளை’ சமப்படுத்தும் நோக்கிலோ அல்லது ஊடகவியலாளர்களின் அழைப்பை மதிப்பதாக காட்டிக் கொள்வதற்காகவோ கலந்து கொண்ட தலைவர், அதன்பின்னர் அட்டப்பள்ளத்தில் உயர்பீட உறுப்பினர்களின் கூட்டத்தையும் நடாத்தினார். ஆனால் தேசியப்பட்டியல் தொடர்பிலோ வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலோ முடிவு எதையும் அறிவித்ததாக தெரியவில்லை.

சல்மான் எம்.பிக்;கு, தலைவர் ஹக்கீம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து எம்.பி பதவியை இராஜினாமாச் செய்ய வைப்பது கடினம் என்றும், ‘முள்ளில் விழுந்த சேலை போல’ மெதுவாகவே அதை அவரிடம் இருந்து கழற்றி எடுக்க வேண்டும் என்றும் விடயமறிந்தவர்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம். ஆனால், மு.கா தலைவர் அன்பாக கேட்டுக் கொண்டால், சல்மான் எம்.பி அதை இராஜினமாச் செய்வார் என்றே ஊகிக்க முடிகின்றது. அவ்வாறென்றால், ஏன் இன்னும் அதைச் செய்யவில்லை, என்ற கேள்வி எழுகின்றது. அது ஏனெனில், மு.காவுக்குள் தேசியப்பட்டியலுக்கு பலத்த போட்டி இருக்கின்றது. இருப்பினும், செயலாளர் ஹசன் அலிக்கு அப்பதவியைக் கொடுத்து அவரை சமாளிக்க தலைவர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். ஹசன் அலி அல்லது

பஷீர் சேகுதாவூத்துக்குக் கொடுப்பதே அவருக்கு இருக்கின்ற வழிகளில் மிக எளிதானதாகும். அதன் பிறகு பதவி கேட்கின்ற நபர்களுக்கு இலகுவாக காரணம் கூறிவிடலாம். பழியையும் இவர்கள் மீது போட்டுவிடலாம். ஆனால், சமரசப் பேச்சுக்களில் முன்னேற்றம் இல்லை என்பதால் அதைச் செய்ய இயலாது, அதனால் ‘அதிகாரமற்ற பிரதேசத்திற்கு எம்.பி கொடுத்தல்’ எனும் கதையை கைவிட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தலைவர்கள் சொல்வதைச் செய்ய வேண்டும். செய்யக் கூடியவற்றையே சொல்ல வேண்டும். மறைந்த அஷ்ர‡பிடம் அது இருந்தது. 90களில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றில் ‘அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு சபையாவது தோற்றால், எனது

எம்.பி பதவியை இராஜினாமாச் செய்வேன்’ என்று அவர் சொல்லியிருந்தார். அத்தேர்தலில் இரு சபைகளில் மு.கா தோல்வியடைந்தது. உடனே அஷ்ரப் தனது பதவியை இராஜினாமாச் செய்தார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘கொடுத்த வாக்குறுதி கொடுத்ததுதான். முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அதை மீற முடியாது. அதை நிறைவேற்றியாக வேண்டும்’ என்று பதிலளித்தார். இப்படியான நல்ல பண்புகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எம்.பி பதவியை ஹசன் அலிக்கோ பஷீருக்கோ கொடுக்காமல், அட்டாளைச்சேனை போன்ற வேறு பிரதேசங்களுக்கு கொடுப்பது என்ற நிலைப்பாட்டுக்கு மு.கா தலைமை வந்தாலும், யாருக்கு கொடுப்பது என்ற அடுத்த பிரச்சினை உள்ளது. மு.கா தலைவர், தானே வகுத்த திட்டத்தின்படியே செயற்பட்டாலும், இவ்வாறான பல காரணங்களால் இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை காணப்படுகின்றது. அந்த முடிவு எட்டப்படும் வரை, தற்காலிகம், நிரந்தரமாக இருக்கும்.

Related posts

அரசாங்கத்தை அதிகாரத்தில் இருந்து நீக்கி புதிய அரசியல் தலைமையை உருவாக்குவோம்.

wpengine

மகளிர் தினம் நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல்

wpengine

பாகிஸ்தான் முதலாவது போட்டியில் அபாரவெற்றி ; இன்று 2 ஆவது போட்டி

wpengine