நாட்டின் தேசிய செல்வத்தை ராஜபக்சவினர் பெருமளவில் கொள்ளையிட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் இருப்பதால், கொள்ளையிட்டதாக கருதப்படும் அந்த பெருந்தொகை செல்வத்தை உடனடியாக மீட்டு, அதனை அரச திறைசேரியிடம் கையளிக்க வேண்டும் என ராமஞ்ஞை பௌத்த பீடத்தின் தென் இலங்கையின் பிரதான சங்க நாயக்கர் கலாநிதி ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது எனது அண்ணன், மகன், மருமகன், உறவினர் அல்லது நெருக்கமானவர் என கூறாமல், சுதந்திரமான நாடு பற்றி எண்ணி தனது பதவிக்கான மரியாதை மற்றும் கௌரவத்தை நினைத்து, கொள்ளையிட்டுள்ளதாக ஒப்புவிக்கப்பட்டுள்ள செல்வத்தை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக்கொள்ள ஜனாதிபதி தலையீடுகளை மேற்கொண்டு செயற்பட வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதான நாட்டு மக்களின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை நாங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கூறிக்கொள்கிறோம்.
இந்த நிலைமையை மாற்றி ஜனாதிபதி கௌரவமான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதி இந்த அதிஷ்டமான நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதியால் கடந்த காலத்தில் பெரிய தவறுகள் நடந்தன. ஜனாதிபதி மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். மக்களின் நிலைப்பாட்டுக்கு தலை வணங்க வேண்டும்.
மாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். குற்றம் சுமத்தப்படும் பன்டோரா ஆவணங்கள் உட்பட மோசடியான கொடுக்கல், வாங்கல்கள் குறித்து சரியான முறையில் விசாரணைகளை நடத்த வேண்டும்.
ஜனாதிபதி இராணுவ பயிற்சிகளை பெற்ற திடமான நோக்கு, பலம், கௌரவத்தை கொண்டுள்ளவர்.இவற்றை வெளிப்படுத்தக் கூடிய நேரம் தற்போது வந்துள்ளது.
அப்படி செய்தால், நாட்டின் நெருக்கடி தீர்க்கப்படும். உலகமும், நாடும் ஜனாதிபதி மீண்டும் நம்பிக்கை கொள்ளும். வெளிநாடுகளில் உழைக்கும் இலங்கை மக்கள் லட்சக்கணக்கான பணத்தை நாட்டுக்கு அனுப்புவார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி, ஜனாதிபதி தேசிய வீரர் என்ற வகையில் வரலாற்றில் இடம்பெறும் நடவடிக்கைகள் எடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.