ஊடகப்பிரிவு-
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அமைச்சின் கீழ் உள்ள, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டுள்ளது.
சாய்ந்தமருதில் இயங்கிவரும் கிழக்கு மாகாண அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் அதே இடத்தில் மேற்கொள்ளும் வகையில், அதற்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் (23) கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம், சாய்ந்தமருதிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கிவருகிறது.
இதனை அம்பாறை நகரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்தி, குறித்த அலுவலகம் அவ்விடத்திலையே தொடர்ந்தும் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ரிஷாட் எம்.பி அக்கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
