(சீபான் பீ.எம்)
வரலாறு முக்கியம் அமைச்சரே..! எனும் நகைச்சுவையை செவியுற்றிருக்கிறோம். அன்று அமைச்சர் ஒருவர் பழைய வரலாற்றினை மறந்து நிந்தவூரில் ஹசனலி ,மூட்டிய தீயை அணைக்கச் சென்ற கூட்டத்தில் முழங்கியவற்றையே தூசுதட்ட நாடுகின்றேன். அமைச்சர் ஹக்கீம் நான் கஃபாவைத் தரிசித்து தேசிய பட்டியலை அழித்துவிட கோருவேன் எனக் கூறிய கூற்றை இன்று வரை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
இதே கோரிக்கையை மாமனிதர் அஷ்ரப் இறைவனிடம் மன்றாடிக் கேட்டு அது ஒரு வேளை அங்கீகரிக்கப்பட்டிருந்தால், இன்று நாம் ஹக்கீம் எனும் சாணக்யனைக் கண்டும் இருக்க மாட்டோமே! 1994 ம் ஆண்டு மாமனார் புகார்த்தீன் ஹாஜியாரின் இருபத்தெட்டு லட்ச ரூபாய் பணத்தில் வாங்கிக் கொடுத்த தேசியபட்டியலில் அவரின் நிறுவனத்தில் வெறும் “குமஸ்தா ” வாகவிருந்த ஹக்கீம் கட்சிக்குள் நுழைந்து இன்று வரை தலைமை எனும் மலர்க்கிரீடத்தை அலங்கரிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது இதே தேசிய பட்டியல் தான் என்பதனை அவர் மறந்துவிடக் கூடாது. அம்பாரை தொட்டு திருகோணமலை வரை தலைமைத்துவ தோரணையில் வென்று வர வழிவகுத்ததும் இந்த தேசிய பட்டியல்தான்.
1994 ம் ஆண்டு கட்சியின் செயளாளராகவும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராகவும் வலம் வர உதவியது இதே தேசிய பட்டியல் தானே! அன்று தன் தமையன் இன்று நண்பன் நாளை தம்பி அதிலும் இனி பெண்களையும் சேர்க்க (நிந்தவூர் கூட்டத்தில் அன்ஸில் சொன்னார்)ஹக்கிம் காங்கிரஸ் சார்பில் இடம் கோரியுள்ளமையால் இனி யார் யாரோ? இவ்வாறு பட்டியல் நீள்கையில் தேசிய பட்டியலை அழிக்கக் கோருவாரா ஹக்கீம்? போராளிகளை உசுப்பேத்தி உசாராக்குகிறார்.
மறைந்த மாமனிதனின் தனது பத்துவருட அரசியலின் இறுதிப்பகுதியில் கட்சியின் மூத்த போராளிகள் ஒவ்வொருவரையும் தேசிய பட்டியலில் அலங்கரிக்க எண்ணினார். மருதமுனை மருதூர்க்கனி அன்னாரின் முதல் எண்ணத்தின் வெளிப்பாடே. கண்ணால் கண்டு ரசியாமல் காலமாகிவிட்டார் இன்னாலில்லாஹ். ஆனால் பின்னர் வந்த பதினேழுவருடத்தில் இந்தப் பட்டியல் பட்ட பாடு சொல்லி அடங்காதவை. தலைமையின் தலையைக் காக்கும் கேடயமாக மாறிப்போனது பட்டியல். தலைமையின் இஷ்டமானது பட்டியல்.
முதலைக்கண்ணீர் வடித்து மாயாஜாலப் பேச்சாற்றலால் மாட்டுத்தொழுவத்தை உதாரணம் காட்டி தன்னை சூழவுள்ளவர்களை மாடுகளாக்கி தான் கம்பாகித் தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கின்றார் ஹக்கீம். ஆனால் காலவோட்டத்தின் வேகத்தில் ஒவ்வொன்றாய்க் கழண்டு விழுவதனைப் போல் ஹக்கீம் சாம்ராஜ்யம் வீழும்.பின்னர் மீண்டும் ஹக்கீம் தேசிய பட்டியல் தேடும் ஒரு நாள் வெகு சீக்கிரம் வரும் இன்ஷா அல்லாஹ்.