Breaking
Sun. Nov 24th, 2024

இலங்கையில் கடந்த சில தினங்களாக (2021 மார்ச் பிற்பகுதி முதல்) தேங்காய் எண்ணெய் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அண்மைக் காலத்தில் முன்னொரு போதுமில்லாத அளவுக்கு இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ​ வெளிநாட்டிலிருந்து அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்த் தொகுதி தொடர்பிலேயே இந்த சர்ச்சை உருவாகியு ள்ளது.

மூன்று முன்னணி தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்துள்ள குறித்த தேங்காய் எண்ணெய்த் தொகுதியில் மனித ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத நச்சு இரசாயனம் அளவுக்கு அதிகமாகக் காணப்படுவதே சர்ச்சைக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.

குறித்த மூன்று தனியார் நிறுவனங்களும் 13 கொள்கலன்களில் 18 இலட்சத்து 71 ஆயிரம் கிலோ கிராம் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெணையை வெளிநாடொன்றிலிருந்து நாட்டுக்கு தருவித்துள்ளன. அந்த தேங்காய் எண்ணெய்த் தொகுதியின் மாதிரிகளும் ஏனைய பொருட்களின் மாதிரிகளைப் போன்று பகுப்பாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இப்பரிசோதனையை மேற்கொண்ட சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்புப் பிரிவும் இலங்கை தர நிர்ணயக் கட்டளைகள் நிறுவனமும் இத்தேங்காய் எண்ணெய்த் தொகுதியில் சந்தேகம் காணப்படுவதாக முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தன.

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பகுப்பாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது வழமையாகும். உணவுப்பொருள்களாயின் அவை மனித பாவைனக்கு உகந்தவையா? அவற்றின் தரம் என்பன பகுப்பாய்வு பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தான் மக்கள் பாவனையின் நிமித்தம் சந்தைக்கு விடுவிக்கப்படுகின்றது. அந்த அடிப்படையில் இத்தேங்காய் எண்ணெய்த் தொகுதியின் மாதிரிகளும் இப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இச்சந்தேக நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் குறித்த தேங்காய் எண்ணெய்த் தொகுதியை மக்கள் பாவனைக்காக சந்தைக்கு விடுவிக்க வேண்டாமென அறிவுறுத்தல் வழங்கிய அரசாங்கம் இத்தேங்காய் எண்ணெய்த் தொகுதியின் மாதிரிகளை மீள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

அதனடிப்படையில் இலங்கை தர நிர்ணயக் கட்டளைகள் நிறுவனம் மேற்கொண்ட இரண்டாம் கட்டப் பரிசோனையின் ஊடாக குறித்த தேங்காய் எண்ணெய்த் தொகுதியில் ‘அப்லடொக்ஸின்’ என்ற நச்சு இரசாயனம் அளவுக்கு அதிகமாகக் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இது உணவுப் பாவனைக்கு ஒவ்வாத நச்சு இரசாயனம் மாத்திரமல்லாமல் புற்றுநோய்களுக்கு துணை புரியக்கூடியதுமாகும்.

இவ்வாறான நிலையில் ‘அப்லடொக்ஸின்’ கலந்துள்ள இத்தேங்காய் எண்ணெய்த் தொகுதி மக்கள் பாவனைக்கு உகந்தவை அல்ல. அவற்றை சந்தைக்கு விடுவிக்க வேண்டாமென இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம் சுங்கத் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதற்கேற்ப இத்தேங்காய் எண்ணெய்த் தொகுதியைத் திருப்பி அனுப்புவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.

என்றாலும், இத்தேங்காய் எண்ணெய்த் தொகுதியில் ஒரு பகுதி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இதுதொடர்பில் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை நுகர்வோர் பாதுகாப்பு விவகார அதிகார சபை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதன் நிமித்தம் நாடெங்கிலும் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நாட்டின் பல பிரதேசங்களிலும் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 100 க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பகுப்பாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில் தங்கொட்டுவ பிரதேசத்திலுள்ள தனியார் தோட்டமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான தேங்காய் எண்ணெய் பவுஸர்கள் இரண்டும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தேங்காய் எண்ணெய் லொறியும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த தேங்காய் எண்ணெய்த் தொகுதி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் இத்தேங்காய் எண்ணையில் காணப்படும் ‘அப்லடொக்ஸின்’ என்றால் என்ன? என்ற கேள்வி பட்டிதொட்டியெல்லாம் மக்களைத் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கின்றது.

இது தொடர்பில் இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் மனித போஷாக்கு தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளரான பேராசிரியர் ரேணுக்க சில்வா குறிப்பிட்டிருப்பதாவது, ‘அப்லடொக்ஸின்’ என்பது ஒரு வகை பங்கசு ஆகும். இது கொப்பறாவில் உருவாகக் கூடியவொன்று. கொப்பறாவைக் கொண்டு தான் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றது.

கொப்பறா வீடுகளில் தும்புடன் வெயிலில் உலர்த்தப்படுகின்ற போதிலும் கைத்தொழில் துறையில் புகையைக் கொண்டு தான் உலர்த்தப்படுகின்றது. அவ்வாறு கொப்பறா உலர்த்தப்படும் போது அதன் நீர் 8 வீதத்தை விடவும் குறைவடையக் கூடியவகையில் உலர்த்த வேண்டும். அதேநேரம் புகையைக் கொண்டு கொப்பறாவை உலர்த்தும் போது சில சேர்வைகள் கொப்பறாவின் மேற்பகுதியில் தேங்கி பங்கசு வளர்ச்சியடைவதைத் தடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இலங்கையில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் முறைமை இப்பங்கசு வளர்ச்சியடைவதை மிகவும் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும் கொப்பறாவின் ஒரு பகுதியில் பச்சை நிறத்தில் பங்கசு காணப்படுமாயின் அதில் ‘அப்லடொக்ஸின்’ வளர்ச்சியடைந்திருக்க முடியும்.

இந்நச்சு வகையானது குறிப்பாகக் கொப்பறா காலத்தில் உட்பிரவேசிக்கின்ற போதிலும் களஞ்சியப்படுத்தப்படும் போதும் உற்பத்தி செயற்பாட்டின் போதும் இப்பங்கசு தேங்கிக் காணப்படுமாயின் அதன் ஊடாகவும் வளர்ச்சியடையலாம். என்றாலும் இந்நச்சு வகை இரண்டொரு நாட்கள் உடலில் சேர்வதால் புற்றுநோயோ ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளோ ஏற்படாது. ஆனால் இந்நச்சு நுண்ணுயிரிலிருந்து பெரிதும் தவிர்ந்து கொள்வதே ஆரோக்கியத்துக்கு உகந்தது’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை பொதுநல மருத்துவ நிபுணர் அர்ஜுன டி சில்வா, அப்லடொக்ஸினில் பல வகைகள் உள்ளது. அவற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது அப்லடொக்ஸின் – 01 ஆகும். குறிப்பாகப் புற்று நோயை ஏற்படுத்தக்கூடியதாகும். இது மரபணு மட்டத்தில் ஏற்படக்கூடிய ஒன்று. அதில் பாதிப்பு ஏற்பட்டதும் புற்று நோய்கள் ஏற்படும். இப்புற்று நோய்கள் உடலில் எந்தப் பகுதியையும் பாதிக்கலாம்.

ஆனாலும் ஈரலைத்தான் அதிகம் தாக்கும். அத்தோடு ஈரல் அழற்சியும் கூட ஏற்படலாம். பொதுவாக எந்தவொரு நச்சு இரசாயனமும் உடலினுள் சென்றதும் முதலில் அதனை எதிர்கொள்வது ஈரலாகும். அதனால் சில சமயம் ஈரலின் கலங்கள் பாதிக்கப்பட்டு ஈரல் செயலிழக்கலாம் அல்லது இரத்தக் கசிவு ஏற்படலாம் அல்லது ஈரல் அழற்சி ஏற்படலாம். இவ்வாறு ஈரல் பாதிக்கப்படுகின்ற அதேநேரம், நீண்ட காலத்தில் புற்று நோய்க்கான நெருக்கடிகளும் வெளிப்படலாம்’ என்கிறார்.

அதேநேரம் ‘இந்நச்சு இரசாயனம் சிறுக சிறுக உடலில் சேர்வது சிறு குழந்தைகளுக்கு அதிகம் பாதிப்பாக அமையும். குறிப்பாக சிறுவர்களின் உடல் வளர்ச்சியடையும் வேகம் குறைவடையலாம். அவர்களுக்கும் ஈரல் புற்று நோய் ஏற்படலாம். ஆனால் அதற்கு நீண்ட காலம் எடுக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ள அவர், ‘இந்நச்சு இரசாயனம் அடங்கிய உணவு வகைகளை ஒரிரு நாட்கள் சாப்பிடுவதால் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுமெனக் கூற முடியாது’ எனவும் கூறுகிறார் மருத்துவ நிபுணர் அர்ஜுன டி சில்வா.

இவ்வாறு அப்லடொக்ஸின் தொடர்பில் மருந்துவ நிபுணர்கள் விபரித்திருந்த போதிலும், ‘இந்நாட்டில் உணவு மற்றும் கைத்தொழில் துறைக்கென வருடமொன்றுக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது என்பதை மறந்துவிடலாகாது. அவற்றில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் நேரடியாக உணவுக்காகப் பாவிக்கப்படுகின்றது. இதில் சுமார் 20 ஆயிரம் மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் தான் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஏனைய பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யபடுகின்றது’ என்று தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் எம்.எம். புஷ்ப காந்த தெரிவிக்கின்றார்.

ஆனால் உலகில் தெங்கு செய்கையைக் கொண்டுள்ள முக்கிய நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில் வருடமொன்றுக்கு 2500−3000 மில்லியன் தேங்காய் அறுவடை செய்யப்படுகின்றது. அவற்றில் பெரும்பகுதி உணவுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. அதாவது 2020 ஆம் ஆண்டில் நாட்டில் 2792 மில்லியன் தேங்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1800 மில்லியன் தேங்காய் உள்நாட்டு உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு 960 மில்லியன் தேங்காய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது.

20 ஆயிரம் மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள உதவிப் பணிப்பாளர், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உள்நாட்டு பாவனைக்கு போதியதாக இல்லாத காரணத்தினால் தான் பெரும்பகுதியை இறக்குமதி செய்ய நேர்ந்திருப்பதாகவும் உள்நாட்டு தேங்காய் எண்ணெய்த் தேவையை நிறைவேற்றுவதற்காக தேங்காய் எண்ணெய், பாம் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகள் வருடமொன்றுக்கு சுமார் இரண்டு இலட்சம் மெற்றிக் தொன்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தேங்காய் எண்ணெய் இந்நாட்டு மக்களின் சுதேச உணவுப் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்குவதோடு உணவுடன் மாத்திரமல்லால், மக்களின் வாழ்வுடனும் அது இரண்டறக் கலந்திருப்பதையும் மறந்து விடமுடியாது.

இற்றைக்கு 15, – 20 வருடங்களுக்கு முன்னர் உணவுக்கு தேவையான தேங்காய் எண்ணெய் பெரும்பாலும் வீடுகளில் தான் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந் நிலைமை மாறி இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்ப் பாவனையில் தங்கி இருக்கும் நிலைமை இந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகப் பெருந்தொகை அந்நியச் செலாவணியை இந்நாடு தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்காகவும் இந்நாடு செலவிடுகின்றது.

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *