பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வகுப்புத்தடை, ஏப்ரல் 7ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாணவர்களை கடந்த 6ஆம் திகதியன்று பகடிவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், 18 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள், பகடி வதைக்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
புதிய மாணவர்களில் தமிழ் மாணவிகள் தலைமுடியை இருபுறமும் பின்ன வேண்டும் என்றும் சிங்கள மாணவிகள் தலைமுடியை தனியான பின்னலாக போட்டு வரவேண்டும் என்பதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று இரண்டாம் வருட மாணவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். அத்துடன் புதிய மாணவ, மாணவிகள் பகடிவதைக்கு உட்படுத்தப்பட்ட கால எல்லைக்குள் உள்ளாடைகள் அணியவும் இந்த மாணவர்கள் தடைவிதித்துள்ளனர்.
மேலும், பகடிவதைக்கு உட்படுத்தப்பட்ட காலத்தில் காலை உணவு தொடர்பில் கட்டுபாடு விதிக்கப்பட்டதுடன், வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வேப்பிலை பானம் மற்றும் மிளகாய் என்பவற்றை உண்ணுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு, பகடிவதையில் ஈடுபட்ட மாணவ, மாணவர்கள் 28 பேர் தொடர்பில் ஆகக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட மாகாபொல புலமைப் பரிசில் மற்றும் பல்கலைக்கழக விடுதி வசதிகள் என்பவற்றை இல்லாமற் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அப்பல்கலைக்கழகத்தின் உப-வேந்தர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வகுப்புத்தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவ சங்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாணவர்களுக்கு ஒரு மாத கால வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் எம்.எம்.நாஷீம் தெரிவித்துள்ளார்.