‘தமிழர்களுக்கு எதிராக செயல்படும் மலேசியாவுக்கான இலங்கைத் தூதரை அந்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கையில் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது, இலங்கை இராணுவத்தின் உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்தவர் இப்ராகிம் சகீப் அன்சரி. அவர் தற்போது மலேசியாவுக்கான இலங்கை தூதராக உள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவுக்குரல் எழுப்பும் மலேசியா வாழ் இலங்கைத் தமிழ் இளைஞர்களை விடுதலைப்புலிகள் என முத்திரை குத்தி இலங்கை அரசிடம் ஒப்படைக்கும் செயலில் அவர் ஈடுபடுகிறார். மலேசியாவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்க சென்ற என்னை, அங்கு வரவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளிலும் இப்ராகிம் சகீப் அன்சர் ஈடுபட்டார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்ற மாயத்தோற்றத்தை மலேசிய அரசு உருவாக்குகிறது என மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வரும், உலகத் தமிழர் மையத்தின் தலைவருமான பேராசிரியர் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் இனத்துக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் இலங்கைத் தூதர் இப்ராகிம் அன்சரை, மலேசியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதையே மதிமுகவும் வலியுறுத்துகிறது’ என்று வைகோ தெரிவித்துள்ளார்.