Breaking
Sun. Nov 24th, 2024

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)     

துருக்கியில் இராணுவ புரட்சி என்ற போர்வையில் இஸ்லாத்தின் எழுச்சிக்கு எதிரான சதித்திட்டமொன்று அல்லாஹ்வின் உதவியினால் முறியடிக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த நாட்டிலோ, அல்லது ஏதாவது ஒரு மூலையிலோ இஸ்லாம் எழுச்சி பெற்றால் அதனை அடக்கி ஒடுக்க எகூதிகளும், நசாராக்களும் அதற்கு எதிராக அந்த நாட்டு இராணுவத்தினர்களை அல்லது எதிர் கட்சிகளை தூண்டி விடுவதும் அவைகள் தோல்வி அடையும் பட்சத்தில் புதிதாக ஆயுத இயக்கங்களை அந்நாட்டு அரசுக்கு எதிராக உருவாக்குவதும் அதற்காக பாரியளவில் பணத்தினை செலவழிப்பதும் வரலாற்று ரீதியாக உலகில் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளாகும்.

சிதைவடைந்த இஸ்லாமிய கிலாபத்தின் இறுதி தலைநகரான துருக்கியை பொறுத்தவரையில் இராணுவ புரட்சி என்பது புதியவிடயமல்ல. அந்த நாடு பல தடவைகள் இராணுவ புரட்சிக்கு முகம் கொடுத்துள்ளது. அத்துடன் அந்நாட்டு அரசியல் அமைப்பும் இராணுவத்துக்கு சாதகமாகவே உள்ளது. அப்படியான அரசியல் அமைப்பினை மாற்றம் செய்வதற்கும் இராணுவமே பாரிய தடையாக இருந்து வருகின்றது.

இப்படியான இராணுவ புரட்சியின் அனுபவங்களினையும், அதன் பின்புலத்தினையும் துருக்கி மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளதனால்தான், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புக்குரிய அதிபரின் வேண்டுகோளை ஏற்று பொலிசாரின் உதவியுடன் துணிந்து நின்று வீதியில் இறங்கி பல இழப்புக்களுடன் இராணுவ புரட்சியினை அந்நாட்டு மக்கள் முறியடித்துள்ளார்கள்.

ஈரானில் இமாம் கொமைனி அவர்களின் தலைமையில் 1979 ஆம் ஆண்டு மக்கள் புரட்சியின் மூலம் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. அதனை அழிப்பதற்கு ஈராக் அதிபர் சத்தாம் ஹுசைன் அவர்கள் மூலமாக அனைத்து உதவிகளையும் வழங்கி அமெரிக்கா ஈரானுக்கு எதிராக நீண்டதொரு யுத்தத்தினை மேற்கொண்டது.

நீண்டதொரு முயற்சியின் பின்பு பத்துவருட யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 1989 அம் ஆண்டு ஈரான் – ஈராக் இடையில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. இந்த யுத்தத்தின் மூலம் சத்தாம் ஹுசைன் தன்னை பலப்படுத்தி கொண்டதனால், தன்னால் வளர்க்கப்பட்ட சத்தாமை அழிப்பதற்காக ஈராக்கை குவைத் மீது படை எடுக்க தூண்டிவிட்டு பின்பு சத்தாமை ஒரு பயங்கரவாதியாக உலகுக்கு காண்பித்துவிட்டு ஈராக்கை அழிக்க அமெரிக்க படையை அனுப்பியது.

பாகிஸ்தானில் இஸ்லாமிய சரியாவை அமுல்படுத்தப்போவதாக அன்றைய பிரதமர் நவாஸ் ஷரீப் அவர்கள் அறிவித்ததும், அதிர்ந்துபோன அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்நாட்டின் இராணுவ தளபதியான பர்விஸ் முஷாரப் அவர்களை தூண்டிவிட்டு இராணுவ ஆட்சிக்கு உதவி செய்தது. இதனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் அவர்கள் இலங்கைக்கு வந்திருந்த வேளையில் 1998 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் நவாஸ் ஷரீபின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பர்விஸ் முஷாரப் தலைமையில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.

வரலாறுகளை புரட்டி பார்ப்போமானால், நெருப்பு வணக்கத்தினை கொண்ட பாரசீக சாம்ராஜ்யமும், கிரிஸ்தவர்களைக் கொண்ட ரோம சாம்ராஜ்யமும் உலகில் எவராலும் அசைக்க முடியாத இரு பேரரசுகளாக விளங்கியது. உலகின் பெரும்பாலான பிரதேசங்களும், நாடுகளும் இப்பேரரசுகளின் சிற்றரசாக செயற்பட்டது. இந்த ரோம, பாரசீக பேரரசுகளுக்கு எதிராக உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் போர் செய்து தகர்த்தெறிந்தார்கள். இஸ்லாமிய ஆட்சியானது உலகின் பல பாகங்களிலும் ஊடுருவியது. உமர் (ரழி) அவர்களின் ஆட்சியிலேயே ஐரோப்பா, வடக்கு, மேற்கு ஆபிரிக்கா மற்றும் வட ஆசியா கண்டங்களுக்கு இஸ்லாம் பரவச்செய்து, இஸ்லாமிய ஆட்சி அதிகார எல்லை விரிவு படுத்தப்பட்டது.

உலக நாடுகளை கைப்பேற்றி அதன் வளங்களை சுரண்டித்திரிந்த இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள், இஸ்லாமிய நாடுகளை கைப்பெற்றுவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டதானாலும், ஐரோப்பாவில் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்துவதனை தடுப்பதற்காகவும் கட்டுக்கோப்பான பலம்வாய்ந்த இஸ்லாமிய பேரரசை அழிப்பதற்கு பல சூழ்ச்சிகளை மேற்கொண்டனர்.

அந்த வகையில் துருக்கியை தலைநகராக கொண்ட உஸ்மானியா சாம்ராஜ்யத்தின் இறுதி கலீபாவான  6 ஆம் முகம்மத் அவர்களின் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கிடையில் மொழி ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும், மத கோட்பாடு ரீதியாகவும் பிளவுகள் உண்டுபண்ணப்பட்டு, உள்ளக இராணுவப் புரட்சி மூலம் இஸ்லாமிய உஸ்மானியா சாம்ராஜ்யம் 1922 இல் சிதைவடைந்தது.

எனவே உலகில் மீண்டும் இஸ்லாமிய சாம்ராஜ்யம் நிறுவப்பட்டுவிடக் கூடாது என்பதில் எகூதிகளும், நசாராக்களும் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றார்கள். இதற்காக ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டு வருவதுடன், அவர்களது புலனாய்வுத் துறையினர்கள் இரவு பகலாக விழிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.

அத்துடன் மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் முஸ்லிம்களின் பூமியான பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து  இஸ்லாமியர்களின் பரம எதிரியான யூதர்களை குடியேற்றி இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க முன்னின்று இங்கிலாந்து செயற்பட்டது. அதனாலேயே இன்றுவரை முடிவில்லாத தீர்க்கப்படாத பிரச்சினையாக பாலஸ்தீன் பிரச்சினை இருந்துகொன்டிருக்கின்றது.

எனவே 1922 உடன் சிதைவடைந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தினை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் எகிப்தை மையமாக கொண்டு ஹசனுள் பன்னா அவர்கள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினை உருவாக்கி ஜனநாயக வழியில் புரட்சிகரமான தனது செயட்பாட்டை ஆரம்பித்தார். இறுதியில் அவர் சிறையிலடைக்கப்பட்டு அடக்கப்பட்டார். அதுபோல கிலாபத்துக்கான ஜனநாயக ரீதியிலான பலமுயற்சிகள் அவ்வப்போது அடக்கப்பட்டது.

இரண்டாவது உலகமகா யுத்தத்தில் ஜப்பான் நாட்டின் இரு நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடாத்தியதன் மூலம் அமெரிக்கா தன்னை உலகத்தின் ஒரு அசைக்க முடியாத சண்டியனாக பிரகடனப்படுத்தியது. அதுவரைக்கும் இங்கிலாந்து உலக நாடுகளை கைப்பெற்றி ஆட்சி செய்து வந்ததுடன், இஸ்லாத்துக்கு எதிராக அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு உலகிற்கு தன்னை ஒரு சண்டியனாக காண்பித்துக்கொண்டிருந்தது.

இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்துவந்த இங்கிலாந்து அரசு, இரண்டாவது உலகமகா யுத்தத்துக்கு பின்பு தனது தலைமை பொறுப்புக்களை அமெரிக்காவிடமும், இஸ்ரேலிடமும் வழங்கிவிட்டு இவ்விரு நாடுகளின் இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கும் பின்னணி செயற்பாட்டாளராக செயல்பட்டு வருகின்றது.

ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளுக்கு எதிரான போராட்டம் மூலம் ஒசாமா பின் லாதின் அவர்கள் தன்னை பலப்படுத்தி கொண்டதுடன், சோவியத் படைகளை வெளியேற்றுவதற்காக தனக்கு உதவிசெய்த அமெரிக்காவுக்கு கட்டுப்பட மறுத்துவிட்டார். பின்பு ஒசாமா பின் லாதின் தலைமையில் அல் கைதா அமைப்பை நிறுவி இஸ்லாமிய கிலாபத் நோக்கியும், அமெரிக்காவின் உலக ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், ஆயுத போராட்டத்தினை ஆரம்பித்தார்கள்.

2001 செப்டம்பர் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற ரீதியில் அமெரிக்கா தனது நேச நாடுகளை அழைத்துக்கொண்டு அல் கைதா இயக்கத்தினையும், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிய தலிபான்களையும் இலக்கு வைத்து தாக்கி அழித்தது. அந்த போர் ஓய்வில்லாமல் இன்றுவரை ஆப்கானிஸ்தானில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

இஸ்லாமியர்களிடம் காணப்படும் ஆட்சி அதிகார மோகம், அளவுக்கு மீறிய பண மற்றும் பொருள் ஆசைகள் பாரிய ஒரு பலயீனமாக காணப்படுவதனால், அவைகளை தங்களுக்கு பலமாக கருதுகின்ற இஸ்லாமிய எதிரிகளான எகூதி, நசாராக்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிரான சக்திகளுக்கு ஏராளமான பணத்தினையும், ஆயுதங்களையும் வழங்கி இஸ்லாமிய ஆட்சியை கவிழ்ப்பதற்கு தூண்டுகின்றார்கள். அதாவது எங்களது கைகளைக்கொண்டே எங்களது கண்களை குத்துகின்றார்கள்.

அந்த வகையிலேயே இறுதியாக இஸ்லாமிய கிலாபத்துக்கு தலைமை வகித்த துருக்கியில் மீண்டும் இஸ்லாமிய எழுச்சி அந்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அர்துர்கான் அவர்களின் தலைமையில் மெதுமெதுவாக துளிர்விட்டு எழும்புவதனை பொறுத்துக்கொள்ள முடியாத அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்களது பணபலத்தினையும், ஆயுத சக்தியினையும் கொண்டு அந்நாட்டின் இராணுவத்தின் மூலமாக இஸ்லாமிய சிந்தனையை மழுங்கடிக்க மேற்கொண்ட சதிமுயட்சிதான் இந்த தோல்வியுற்ற இராணுவ புரட்சியாகும்.

ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், லிபியா, பாலஸ்தீன், லெபனான், எகிப்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் முடிவில்லாத இரத்த ஆறுகளை ஓடச்செய்துவிட்டு தனது நாட்டில் அமைதியை பேணும் அமெரிக்காவானது, துருக்கியிலும் அவ்வாறான ஒரு முயற்சிக்கு இராணுவ புரட்சி மூலம் வித்திட்டது. ஆனால் அந்த அமெரிக்காவின் முயற்சி அல்லாஹ்வின் உதவியினால் முறியடிக்கப்பட்டது. இந்த இராணுவ புரட்சி முறியடிப்பானது துருக்கி இராணுவத்தின் தோல்வி அல்ல. மாறாக இதற்கு பின்னணி வகித்த அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற இஸ்லாத்தின் எதிரிகளுக்கு கிடைத்த படுதோல்வி ஆகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *