Breaking
Mon. Nov 25th, 2024

துருக்கியில் இடம்பெற்றவரும் இராணுவப் புரட்சியில் குறைந்தது 42 பலியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள்  தெரிவிக்கின்றன.

துருக்கியில் இராணுவத்தின் ஒரு பிரிவு அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்ததையடுத்தே அங்கு போர் மூண்டுள்ளது.

இதையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி எர்துவான், தலைநகர் அங்காராவிலிருந்து, நாட்டின் பெருநகரான இஸ்தான்புல்லுக்கு சென்றுள்ளார்.

ஒரு இராணுவக்குழு, நாட்டை ஒரு “அமைதிக் கவுன்சில்” நடத்துவதாகவும் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மற்றும் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தது.

நிலைமை தற்போது பெருமளவு கட்டுக்குள் இருப்பதாகவும், தலைநகர் அங்காராவின் வான் பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் துருக்கிப் பிரதமர் பினாலி யில்டிரிம்,தெரிவித்தார்.

இஸ்தான்புல்லுக்கு விமானம் மூலம் வந்தடைந்த அதிபர் எர்துவானை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.

தொலைக்காட்சியில் தோன்றி கருத்துத் தெரிவித்த துருக்கி ஜனாதிபதி எர்துவான்,  இந்த அதிரடிப் புரட்சி முயற்சி ஒரு தேசத்துரோக நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.

படையினர் இஸ்தான்புல்லில் முக்கிய இடங்களில் நிலைகொண்டிருந்தனர்.  அங்காராவில் போர் விமானங்கள் வானில் தாழப் பறந்து சென்றுள்ளன.

இஸ்தான்புல்லின் மையப்பகுதியில் இருக்கும் தக்ஸிம் சதுக்கத்தில் இரு பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

அங்காராவில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் குண்டு வெடிப்புகள் நடந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பதுங்குமிடங்களில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

இதேவேளை, சி.என்.என்.துருக்கிப் பிரிவு தொலைக்காட்சி நிலையம் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் நேரலை ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

யார் இந்த அதிரடிப் புரட்சி முயற்சிக்கு தலைமை தாங்குகிறார்கள் அல்லது அவர்களுக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்பது தெளிவாகவில்லை.

சில உயர் இராணுவ அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியில் மக்கள் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் இருக்கிறார்கள் என்று இஸ்தான்புல்லில் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா துருக்கியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ” ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசை” ஆதரிக்குமாறு கோரியுள்ளார்.

துருக்கியில் ஜனநாயக அமைப்புகளுக்கு “முழுமையான மரியாதை” தரப்பவேண்டுமென்று நேட்டோ அமைப்பு கோரியுள்ளது.

இந்த நடவடிக்கை ஒரு “இணை அமைப்பால்” மேற்கொள்ளப்பட்டது என்று ஜனாதபதி எர்துவான், சி.என்.என்.துருக்கி தொலைக்காட்சிக்கும் மொபைல் தொலைபேசி மூலம் தெரிவித்தார். இதற்கு தேவையான பதிலடி தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ‘இணை அமைப்பு’ என்ற பதத்தை அவர் கடந்த காலங்களில் ஃபெத்துல்லா குலன் என்ற அமெரிக்காவிலிருந்து செயல்படும் முஸ்லீம் மதகுருவைப் பற்றிக் குறிப்பிட பயன்படுத்தியிருக்கிறார். அவர் துருக்கியில் குழப்பம் விளைவிப்பதாக எர்துவான் குற்றம் சாட்டிவருகிறார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *