கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் முஸ்லிம் பெண்களை சிறு வயதிலேயே திருமணம் முடித்துக் கொடுக்கும் அனுபவம் கொடுமையானது என்று அமைச்சர் பைசர் முஸ்தபா விமர்சித்துள்ளார்.
கொழும்பு-12, குணசிங்கபுர, அல்ஹிக்மா கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இது குறித்த கவலையை வௌியிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா,
“பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே திருமணம் முடித்துக் கொடுக்கும் நிகழ்வின் காரணமாக முஸ்லிம் பெண்களில் படித்த தலைமுறையொன்றை உருவாக்கும் விடயம் சவாலாக அமைந்துள்ளது.
மறுபுறத்தில் ஆண்களும் வருமானமீட்டும் நோக்கில் கல்வியை இடைநிறுத்தி நடைபாதை வியாபாரிகளாக, முச்சக்கர வண்டி சாரதிகளாக மாறிவிடுவதன் காரணமாக குறித்த தொழில்கள் அவர்களின் பரம்பரைத் தொழிலாக மாறிவிடுகின்றன. தந்தை செய்த தொழிலை தனயனும் மேற்கொள்ளும் அவல நிலையே கொழும்பில் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலை மாற வேண்டும். கல்வியில் உயர் நிலையை அடைய வேண்டும் என்றால் சிற்சில தியாகங்களை செய்தாக வேண்டும்” என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.