திருடர்களை பிடிப்பதாக கூறிய பிரதமர் ரணில் உள்ளிட்ட அனைவரும் திருடர்களோடு பந்தியில் அமர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொட்டகலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஜே.வி.பியினர் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டம் நேற்றைய -02- தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியாகும். இந்த மோசடி குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம். தற்போதைய மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் திருடர்களை பிடிப்பதாக கூறியே ஆட்சிக்கு வந்தது.
ஆனால், இங்கு ரணில் திருடர்களுக்கு பாதுகாப்பாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியும் திருடர்களை பாதுகாக்கவே முயற்சிகின்றார். முன்பு மகிந்த ராஜபக்சவும் திருடர்களை பிடிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்து பின்னர் அவரும் பொது சொத்துகளை துஷ்பிரயோகம் செய்தார்.
கடந்த 1994ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் ஊழல் நடப்பதாக கூறியே சந்திரிக்காவும் ஆட்சிக்கு வந்தார். ஆனால் என்ன நடந்தது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்களை காலி முகத்திடலில் பகிரங்கமாக தூக்கில் இடுவதாக கூறிய சந்திரிக்கா,அவ்வாறு நடந்து கொண்டாரா? இல்லை.
ஆகவே, இவர்கள் எல்லோரும் ஊழலை தடுப்பதாக கூறியே ஊழல் செய்கின்றனர். அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் போது ஊழலில் ஈடுபடுவதில்லை என கூறியே சத்தியபிரமாணம் செய்கின்றனர்.
அதேபோல் எதிர்காலத்திலும் சத்தியப்பிரமாணம் செய்வார்கள். இந்த அமைச்சர்கள் மீண்டும் வந்தால் தொடர்ந்தும் ஊழலை தடுப்போம் என கூறி பொய் வாக்குறுதிகளை அளித்தே ஆட்சியில் அமர்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திலும் எஸ்.பீ.திஸாநாயக் , நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, டிலான் பெரேரா உட்பட இன்னும் பலர் பொது மக்களின் சொத்துகளை சூறையாடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.