முறையான திட்டமின்றி பணத்தை அச்சிடுவது பொருளாதார பிரச்சினையை மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும் செயல் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா (Shan Wijayalal de Silva) தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் காலி தொகுதியின் பிரதான அமைப்பாளர் மெத்சிறி டி சில்வா, காலி கனம்பிட்டியவில் ஏற்பாடு செய்திருந்த கட்சியின் கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொருளியல் விஞ்ஞானத்தில் திட்டமின்றி பணத்தை அச்சிடுவதை வயிற்று போக்கை மேலும் அதிகரிக்கும் செயல் போன்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சில அரசாங்கங்கள் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் தந்திரோபாயமாக பணத்தை அச்சிடுவது என்பது உண்மை. எனினும் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே பெருந்தொகையான பணத்தை அச்சிட்டது.
கடந்த ஆண்டின் இறுதி வரை அரசாங்கம் ரில்லியனுக்கும் மேற்பட்ட பணத்தை அச்சிட்டுள்ளதாக தகவல். முறையான திட்டமிடல் இன்றி பணத்தை இப்படி அச்சிட்டுவது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்குமே அன்றி நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மை ஏற்படாது.
இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஜேர்மனி இப்படி பணத்தை அச்சிட்டதால், சிகரட் பக்கெட் ஒன்றை கொள்வனவு செய்ய தள்ளு வண்டியில் பணத்தை எடுத்துச் செல்ல நேரிட்டதாக ஒரு கதை உள்ளது.
எதிர்காலத்தில் பொருட்களுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் பணத்தை அச்சிட்டால், பொருட்களின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது பெருந்தொகை பணத்தை செலவிட நேரிடும்.
இது பொருளாதார பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நிவாரணமாக இருக்காது என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடு. கொரோனா தொற்று நோய் உலகில் அனைத்து நாடுகளிலும் பரவியது.
எனினும் அனைத்து நாடுகளும் எமது நாட்டை போல் பொருளாதாரத்தில் மோசமான நிலைமைக்கு செல்லவில்லை. எமது நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு, உர தட்டுப்பாடு, மக்கள் வரிசைகளில் நிற்பது என பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
வேறு நாடுகள் செய்யாத தவறு எமது நாட்டில் எங்கோ நிகழ்ந்துள்ளது. அந்த தவறிய இடத்தை தற்போதாவது கண்டறிய வேண்டும். அதற்கான தீர்வை உருவாக்க வேண்டும். அப்படியில்லை என்றால் எதிர்காலத்தில் நிலைமை மேலும் மோசமடையலாம். அதிகரிக்கலாம் எனவும் ஷான் விஜேலால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.