பிரதான செய்திகள்

தாறுஸ்ஸலாமின் முடிச்சு அவிழ்க்கப்படுமா? முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்குப் பகிரங்க மடல்

தலைவர் அவர்களே!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் இறையடி எய்து 15 வருடங்கள் கடந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் கட்சி அடையாளச் சின்னமான தாறுஸ்ஸலாம் – சாந்தி இல்லத்தின் நிருவாகம் தொடர்பாக சில வினாக்களை உங்கள் முன் வைக்கின்றோம்.இதற்குப் பதில் அளிப்பது உங்களின் தார்மீகக் கடமையும் கூட…….

தலைவரே!  கட்சிக் காரியாலயம் யாருடைய பொறுப்பில் உள்ளது.

பொது நம்பிக்கை நிதியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதில் அங்கம் வகிப்பவர்கள் யார்?

தலைவர் மரணிக்கு முன்னர் பொறுப்புச் சாட்டப்பட்ட நிதிய நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் யார்?

இன்று அவர்களில் எத்தனை  பேர் சட்ட ரீதியாக உள்ளனர்?

நாம் விசாரித்து அறிந்ததிலிருந்து நீங்கள் உட்பட இன்னும் இருவர்தான் இதன் நம்பிக்கைப் பொறுப்புதாரிகள் என்று தெரிவிக்கப்படுகின்றது.இப் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி முஸ்லிம் சமூகம் அறிந்து கொள்ளக் கூடாதா?

எதிர்காலத்தில் அடுக்கு மாடிகளைக் கொண்ட தாறுஸ்ஸலாமுக்கு சொந்தக்காரர்கள் நீங்கள் மூவரும் தானா?இது உங்கள் குடும்பச் சொத்தாகவும் மாறிவிட சந்தர்ப்பம் உள்ளதல்லவா?  என்று போராளிகள் கருதுகின்றனரே?

இது மட்டுமன்றி மறைந்த தலைவர் மரணத்துக்கு முன் உங்களைப் போன்றவர்களை நம்பி பொதுச் சொத்தாக அல்லாமல் தனியார் சொத்தாக உங்களுக்கு எழுதித் தந்துவிட்டுளூ நான் மரணித்தால் தேர்தல்களுக்குப் பணம் இல்லாவிட்டால் இதை விற்றுப் பணத்தைத் தேடச் சொல்லி உங்கள் பெயர்களுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் எழுதித் தந்தாரே அது பற்றி  என்ன கூற விரும்புகின்றீர்கள்.

தாறுஸ்ஸலாத்துடன் தலைவரின் ஒலுவில் இல்லமும் மற்றும் சில சொத்துக்களும் உங்களிடம் கையகப்பட்டுள்ளதே இவைகளை ஏன் நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் சொத்தாக மாற்ற முடியாது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்துவம் இல்லாத எவரும் இச்சொத்துக்கு உரிமை கோர முடியாது என்ற சட்டப்படி வேறு யாரும் இதற்கு உரிமைத்துவம் கொள்ள முடியாது என்ற நிலையில் அமான் அஷ்ரஃபையாவது அங்கத்தவராகவும் இன்னும் சில உயர்பீட உறுப்பினர்களையும் கட்சியின் சிரேஷ்ட போராளிகளையும் இதில் பங்குதாரர்களாக்க முடியாதா?

தாறுஸ்ஸலாம் அடுக்கு மாளிகையில் 16 வருடங்களாக வாடகை மூலம் பெறப்பட்ட பணம் எவ்வளவு.அது எவ்வாறு செலவு செய்யப்படுகிறது.தற்போதுள்ள வங்கி மீதி என்ன.எந்த வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.என்பவற்றை கட்சிப் போராளிகள் அறிந்து கொள்ள முடியாதா?

நாட்டிலுள்ள ஏனைய கட்சிகள் எல்லாம் தமது கட்சித் தலைமையகம் தொடர்பான வரவு,செலவுக் கணக்குகளை கணக்காய்வு செய்து ஓடிற் ரிப்போட் சமர்ப்பிக்கும் போது,

புனித அல்குர் ஆன், ஹதிஸை யாப்பாகக் கொண்ட நமது கட்சியின் பொது நிதியம் பற்றிய கணக்கு வழக்குகளை தொண்டர்கள் அறியக் கூடாதா.இது மூடு மந்திரமா?

இக்கட்சியில் எத்தனையோ பீடங்களைக் கொண்ட கட்சிப் பிரமுகர்கள் இருந்தும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன்? அவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா?அல்லது தேவையற்ற விடயமா?

காலத்துக்குக் காலம் சிரேஷ்ட போராளிகளையும் மற்றும் கட்சியின் முதுகெலும்புகளையும் துரத்துவது கட்சியின் வரலாறுகளையும் பழைய சங்கதிகளையும் வெளிக் கொண்டு வருவார்கள் என்பதனாலா?

கண்டி மாநாட்டுக்கு முன்னர் நடை பெற்ற உயர் பீடக் கூட்டத்தில் சிலர் தாறுஸ்ஸலாம் தொடர்பாக கேள்வி கேட்டும், கையொப்பமிட்ட மகஜர் வழங்கி அறிக்கை கேட்ட போதும் அதற்கான பதில் இல்லையே ஏன் ?

மரணம் எப்போது வரும் என்று எம்மில் எவருக்கும் தெரியாத நிலையில் தாறுஸ்ஸலாம் என்ற பொதுச் சொத்து தொடர்பாக தலைமை என்ன முடிவை எடுக்கப் போகின்றது.அமானிதங்களை துஷ்பிரயோகம் செய்யும் நிலையிலிரு;து அல்லாஹ் நம் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்.

அமானிதங்களை மலையொன்றிடம் ஒப்படைக்க இறைவன் விரும்பிய போது அந்த மலை இறைவா ! நான் அதற்கு தகுதி இல்லாதவன் என்று கூறியதாம்.

ஆகவே மனிதர்களாகிய நீங்கள் தலைவர் மரணித்து சுமார் 16வருடங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தாறுஸ்ஸலாம் அமானிதத்தின் முடிச்சுகளை அவிழ்ப்பது தலைவரின் கடமையல்லவா?

போராளிகளே கட்சியின் பிரமுகர்களே! மர்ஹூம் அஷ்ரஃப் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை அவரது அமானிதச் சொத்துக்கள் தொடர்பாகவும் வெளிக் காட்டுங்கள்.

மீரா எஸ்.இஸ்ஸடீன்
பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் முன்னாள்  ஊடக இணைப்பாளர்                                                              

Related posts

மன்னாரில் கஞ்சா மூடி மறைக்கும் பொலிஸ் அதிகாரிகள்

wpengine

12 இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை

wpengine

பொத்துவில்லுக்கு தனியான கல்வி வலயம்; அமைச்சர் றிசாத்தின் கோரிக்கையை ஏற்று கல்வியமைச்சர்

wpengine