Breaking
Mon. Nov 25th, 2024

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ் ஸலாம் காணி, கட்டிடம் மற்றும் கட்சிச் சொத்துக்களின் உரித்துடமை தொடர்பாக பகிரங்கப்படுத்துமாறு கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் கேட்டுள்ளார். 

இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீமுக்கு 13.7.2016 திகதியிட்டு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைக் காரியாலயம் என அனைவராலும் அறியப்படுகின்ற மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் முயற்சியால் கட்சி உறுப்பினர்களிடமும், பொது மக்களிடமும் அன்பளிப்பு பெற்று கட்டப்பட்ட இலக்கம் 51, வொக்ஷோல் ஒழுங்கை, கொழும்பு – 02 என்ற விலாசத்தில் அமைந்துள்ள கட்டடத்தின் திறப்பு விழாவில் 1998.10.23 அன்று  அவர் உரையாற்றுகின்ற போது இக் கட்டிடத்துக்கு “தாருஸ் ஸலாம்” என்று பெயரிடுகிறேன் என்றும், இதனை முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக் காரியாலயமாகப் பிரகடனம் செய்து இலங்கையின் அனைத்துச் சமூகங்களுக்கும் கையளிப்புச் செய்கிறேன் என்றும் கூறினார்.

2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி நிகழ்ந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களின் அகால மரணம் பற்றிய மர்மம் இன்றுவரை நீடிப்பது போன்றே அவர் தந்த நமது கட்சியின் தலைமைச் செயலகக் கட்டிடத்தின் உரிமை அவரின் மரணத்தின் பின் கட்சிக்கு இருக்கிறதா? இல்லையா? என்ற மர்மமும் இன்றுவரை தொடர்கிறது.

தாருஸ் ஸலாமில் நடைபெறும் கட்சியின் உச்சபீடக் கூட்டங்களிலும், வேறு சில கூடிப்பேசும் நிகழ்வுகளிலும், அங்கு சில சமயங்களில் வைக்கப்படும் பந்திச் சாப்பாடுகளிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். இவை தவிர அண்மையில் இக்கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்ட கட்சியின் காரியாலயத்துக்கும் சமூகமளித்துள்ளேன்.

ஆயினும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக் காரியாலயம் எனச் சொல்லப்படும் பலகோடி ரூபாய் பெறுமதியான சொத்தின் உரிமை தொடர்பாக பலமுறை அறிய முற்பட்டும் முடியாமையால் இம்மடலை தங்களுக்கு வரைகிறேன்.

கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் சிலர் அண்மையில் கடிதம் ஒன்றின் மூலம் செயலாளர் நாயகத்திடம் தாருஸ்ஸலாமின் உரித்தும், பராமரிப்பும், கணக்கு வழக்கும் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தனர் என்பதனையும்,செயலாளர் நாயகத்துக்கு இவை தொடர்பாக எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பதனையும் தாங்களும் அறிவீர்கள்.

இக்கேள்விகளுக்கு நீங்களும், உச்சபீட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான முகமட் ஹபீல் முகமட் சல்மானும் உச்சபீடக் கூட்டம் ஒன்றில் பதிலளித்தீர்கள்.

உங்கள் இருவரினதும் மழுப்பலான விளக்கங்களால் அன்று எனக்கும், இன்னும் பல உச்சபீட உறுப்பினர்களுக்கும் திருப்தி ஏற்பட்டிருக்கவில்லை.

ஆயினும் நீங்கள் அக்கூட்டத்தில் தெரிவித்த கருத்தின் பிரகாரம் உங்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கி உச்சபீடக் கூட்டம் ஒன்றிலன்றி தனிப்பட்ட ரீதியில் தங்களிடம் இவ்வுரித்து தொடர்பாகக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று அன்று நான் முடிவெடுத்திருந்தேன்.

இந்தப் பின்னணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நம்பிக்கைச் சொத்துக்களும், அவற்றின் உரித்தும் தொடர்பாக கட்சியின் அங்கத்தவர்கள் பலரும் இக்கட்சியின் தவிசாளர் என்ற வகையில் என்னிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். ஆகையால் இச்சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டிய தார்மீகக் கடமை என்னையும், உங்களையும், இக்கட்சியின் உச்சபீட உறுப்பினர்களையும் சார்ந்ததாகும் என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் என்ற ரீதியிலும்,“தாருஸ் ஸலாத்தின்” கட்டிட நிதிக்காக மிகச் சொற்ப அளவிலாயினும் பங்களிப்புச் செய்தவன் என்ற அடிப்படையிலும், லீடர்ஸ் ஒப்லிகேட்டரி ட்ரஸ்ட் போர் யுனிட்டி அன்ட் ஸ்ரீலங்கன் ஐடென்டிட்டி (லோட்டஸ்) Leader’s Obligatory Trust for Unity and Srilankan Identity (LOTUS) உடைய பொதுக்குழுவில் 56 ஆவது உறுப்பினர் என்ற வகையிலும் கட்சியின் மேற்படி சொத்தின் உரித்துடமை பற்றி எனக்கு எழுத்து மூலம் அறியத்தருமாறு இக்கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கிறேன். தாங்கள் கடந்த 16 வருடங்களாக நமது கட்சியின் கௌரவ தலைவராக இருப்பதால் தங்களிடத்தில்; தெளிவான தகவல்கள் இருக்கும் என்றும்நான் நம்புகிறேன்.

எனது அறிவுக்கு எட்டியவரையில் தாருஸ்ஸலாம் அமைந்துள்ள காணி, கொள்வனவு செய்யப்பட்ட காலம் தொட்டு அதில் மாடிக்கட்டிட நிர்மாணப் பணி ஆரம்பிக்கும் வரை, கட்சிக்கு உரித்தான சொத்தாகவே இருந்தது. அக்காலத்தில் வறக்காப்பொலயிலும், விசாலமான காணியொன்று கட்சியின் சொத்தாகக் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இக்காணி பின்னர் கட்சியாலேயே விற்பனையும் செய்யப்பட்டது.

மேலும் தலைவர் அஷ்ரஃப் உயிரோடு வாழ்ந்திருந்த காலத்தில் லீடர்ஸ் ஒப்லிகேட்டரி ட்ரஸ்ட் போர் யுனிட்டி அன்ட் ஸ்ரீலங்கன் ஐடென்டிட்டி (லோட்டஸ்) (Leader’s Obligatory Trust for Unity and Srilankan Identity (LOTUS) உருவாக்கப்பட்டதுடன், தாருஸ்ஸலாம் கட்டிடம் கட்டத் தொடங்கிய சிலகாலத்தில் “யுனிட்டி பில்டர்ஸ் பிரைவட் லிமிடெட்” (Unity Builders (Pvt) Ltd)  என்ற தனியார் கம்பனியும் பதிவு செய்யப்பட்டது.

ஆயுத வன்முறையாக வடிவெடுத்தி ருந்த இனப்பிரச்சினை,1990களின் நடுப்பகுதியில் கர்ண கொடூரமான மரபு வழி யுத்தமாக மாறியிருந்தது. இக்கால கட்டத்தில்தான் பெருந்தலைவர் அஷ்ரஃப் அமைச்சராகவும் பதவி வகிக்க நேர்ந்தது. கொரில்லாப் போர், மரபுப் போராக மாறியிருந்த காலத்தில்தான் தீர்க்க தரிசனம் நிறைந்த எம் தானைத் தலைவர், தான் ஆரம்பித்த தனித்துவமான அரசியலை, ஆன்ம அமைதியும், ஐக்கியமும் தேடும் மானுட மகிமைக்கான அரசியலாக மாற்றத் தொடங்கியிருந்தார்.

இந்த கருத்தியல் மாற்றத்துக்கு இயைபாக தனக்கான அனைத்தையும் தனது புதிய கண்ணோட்டத்துக்குள் உள்ளீர்த்தார்.

இனப்பிரச்சினைக்கு மட்டுமல்ல, எப் பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு அல்ல அமைதியும், ஐக்கியமுமே தீர்வு என்ற சுலோகத்தோடு நாடு முழுவதிலும் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தனது கட்சியின் தலைமையகத்துக்கு அமைதி இல்லம் என்ற கருத்துடைய “தாருஸ் ஸலாம்” என்ற அரபு மொழிப்  பெயரை இட்டார்.

தேசிய ஐக்கிய முன்னணி (National Unity Alliance)  என்ற புதிய அரசியல் கட்சியொன்றை முஸ்லிம் காங்கிரஸுக்கு சமாந்தரமாகத் தொடங்கினார்.

இவ்வாறான கோட்பாட்டின் அடிப்படையிலேயே“யுனிட்டி பில்டர்ஸ் பிரைவட் லிமிடட் (Unity Builders (Pvt) Ltd) என்ற தனியார் கம்பனியையும் ஆரம்பிப்பதற்கு உரிய ஆலோசனைகளைத் தெரிவித்து இருந்தார்.

மேலே நான் தெரிவித்த விடயங்களை நீங்கள் நன்கு அறிவீர்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை. இப்பின்னணியில் கட்சியின் சொத்துக்கள் எவ்வாறு பராமரிக்கப்பட்டுவருகின்றன என்ற பூரண விபரம் தங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்பதனால் இந்தக்கட்சியின் தலைவர் என்ற வகையில் கட்சியின் சொத்துகள் பற்றிய தெளிவினைப் பெறும் நோக்கிலான பின்வரும் எனது கேள்விகளுக்கு இக்கடிதம் கிடைத்து இரு வார காலத்துக்குள் எழுத்து மூலம் பதிலளிப்பீர்களாயின் நன்றியுடையோனாவேன்.

எது எவ்வாறாயினும் இரு வார காலத்துக்குள் தங்களது பதில் எனக்கு கிடைக்காவிட்டால் உங்களுக்கு இது பற்றிய பூரண தகவல்கள் தெரிந்திருந்தும் வேண்டுமென்று உள்நோக்குடன் கட்சியின் உச்சபீட உறுப்பினர்களுக்கும் குறிப்பாக இக்கட்சியின் தவிசாளரான எனக்கும் மிகவும் அத்தியாவசியமாகத் தெரிந்திருக்கவேண்டிய கட்சியின் நம்பிக்கைச் சொத்துக்கள், அச்சொத்துக்களின் மூலம் கட்சிக்குச் சேரும் வருமானங்கள் பற்றிய தகவல்களை தாங்கள் வேண்டுமென்றே மறைக்கின்றீர்கள் என்பதுடன் அச்சொத்துக்களின் பராமரிப்பு, வருமானம் போன்ற விடயங்களில் தாங்கள் கரிசனையற்றுச் செயற்பட்டு வருகின்றீர்கள் என்பதும் வெட்டவெளிச்சமானதாகும்.

இச்செயலானது கட்சியின் நம்பிக்கைச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு சமனானதாக அமைந்துள்ள காரணத்தினால் குறிப்பிட்ட லீடர்ஸ் ஒப்லிகேட்டரி ட்ரஸ்ட் போர் யுனிட்டி அன்ட் ஸ்ரீலங்கன் ஐடென்டிட்டி (லோட்டஸ்) (Leader’s Obligatory Trust for Unity and Srilankan Identity (LOTUS)  என்ற நம்பிக்கைப் பொறுப்புக்குரிய சொத்துக்களின் உரித்துக்களை கட்சியின் எதிர்கால நன்மை கருதி கண்டறிவதற்கும்,அக்குறிப்பிட்ட சொத்துக்களின் பராமரிப்பை மேற்கொள்வதற்கும், அதன்மூலம் கிடைக்கும் வருமானங்களை முறையாக ஒன்று சேர்ப்பதற்கும் உரிய பொருத்தமான நடவடிக்கைகளைஇக்கட்சி அங்கத்தவர்கள் எல்லோரினதும் பொதுநலனைக் கருத்திற் கொண்டு  எடுப்பதற்கு நான் தள்ளப்படுவேன் என்பதை இக்கடிதம் மூலம் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இவ்விவகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இக்கட்டிட நிதிக்கு பங்களிப்பு செய்தோருக்கும், கட்சி ஆதரவாளர்கள், அபிமானிகள், பொதுமக்கள் ஆகியோருக்கும் வெளிப்படுத்தும் உரிமையும், கடமையும்எனக்கு இருப்பதாக என் மனச்சாட்சி தூண்டுவதனால் இவ்விடயத்தை பிரசித்தப்படுத்துவதில் எவ்வித தவறும் கிடையாது என்பதையும் தங்களுக்கு பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களிடம் நான் பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகள் பின்வருமாறு:
1.  லீடர்ஸ் ஒப்லிகேட்டரி ட்ரஸ்ட் போர் யுனிட்டி அன்ட் ஸ்ரீலங்கன் ஐடென்டிட்டி (லோட்டஸ்) என்ற நம்பிக்கை நிதியத்தின் இன்றைய நிறைவேற்று அதிகாரசபை உறுப்பினர்கள் யார் என்பதையும் அவர்களின் பூரண விபரங்களையும் அறியத் தருவீர்களா?

2.  லீடர்ஸ் ஒப்லிகேட்டரி ட்ரஸ்ட் போர் யுனிட்டி அன்ட் ஸ்ரீலங்கன் ஐடென்டிட்டி (லோட்டஸ்) என்ற நம்பிக்கை நிதியத்திற்கு உரித்தான சொத்துக்களின் விபரங்களையும் அவற்றை யார் பராமரிக்கிறார்கள் என்பதையும் அதன்மூலம் பெறப்படும் வருமானங்களின் விபரங்களையும் அறியத்தருவீர்களா?

3.  தாருஸ் ஸலாமின் சட்டப்படியான உரித்துடமை எந்த அமைப்பிடம் அல்லது குழுவிடம் அல்லது எந்த நபரிடம் உள்ளது?

4.  தாருஸ் ஸலாமின் பராமரிப்பு யாரால் அல்லது எவ்வமைப்பால் மேற்கொள்ளப்படுகிறது?

5.  தாருஸ் ஸலாம் கட்டிடத்தின் மூலம்  கிடைக்கும் மாதாந்த வருமானம் எவ்வளவு?கடந்த 16 வருடங்களாக கிடைத்த வருமானம் எவ்வளவு? இவ்வருமானம் கட்சிக்கு கிடைத்ததா? அல்லது வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் எந்த வங்கியில்? அதன் கணக்கு இலக்கம் என்ன? கட்சிக்கு இவ்வருமானம் கிடைத்திருந்தால் பேராளர் மாநாடுகளில் வாசிக்கப்பட்ட கணக்கு அறிக்கைகளில் இவ்விபரம் உள்ளடக்கப்பட்டிருந்ததா? தேர்தல் ஆணையாளர் செயலகத்துக்கு கட்சியினால் வழங்கப்படும் கணக்கு அறிக்கைளில் இவ்வருமானம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதா?

6.  லீடர்ஸ் ஒப்லிகேட்டரி ட்ரஸ்ட் போர் யுனிட்டி அன்ட் ஸ்ரீலங்கன் ஐடென்டிட்டி (லோட்டஸ்) பதிவு செய்யப்பட்டுள்ளதா? பதிவு செய்யப்பட்டிருந்தால் சட்டப்பூர்வமான எந்நிறுவனத்தில் பதியப்பட்டுள்ளது? பதிவிலக்கம் என்ன? நிதியத்தின் யாப்பு அல்லது உபவிதி (Bylaw) இருப்பின் அதன் ஒரு பிரதியைத் தரமுடியுமா? பதிவு செய்யப்படாவிட்டால் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின்னரான 16 வருடங்களிலும் இந்நிதியத்தை பதிவு செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

7.  1998ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான யுனிட்டி பில்டர்ஸ் பிரைவட் லிமிடட்டின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக இருந்தவர்கள், இருக்கின்றவர்கள் ஆகியோரின் பெயர், விலாசம் முதலானவை அடங்கிய விபரங்களையும், இதுவரை இக்கம்பனியால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பிரதிகளையும் தர முடியுமா?

8.  யுனிட்டி பில்டர்ஸ் பிரைவட் லிமிடட்டின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதி ஏற்படுத்தப்பட்ட மாற்றம் பற்றியும், இது கட்சிக்காக உருவாக்கப்பட்ட கம்பனியாக இருந்தபோதும் கட்சியின்  உச்சபீடத்துக்கு இதுபற்றித் தெரிவிக்காதது ஏன்?

9.  தலைவர் அஷ்ரஃப் அவர்கள் மரணமடைவதற்கு ஒரிரு மாதங்களுக்கு முன்பு அவர் கட்சிக்காக “கார்சல் அன்ட் கம்பபர்க்” என்ற நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்த தாருஸ் ஸலாமுக்கு பக்கத்தில் அமைந்திருக்கும் பழைய இலக்கம் 53, வொக்ஷோல் ஒழுங்கை, கொழும்பு – 02 என்ற விலாசத்தினை உடைய வெற்றுக் காணித்துண்டுக்கான, 2000 ஆம் ஆண்டு சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் எழுதப்பட்ட உறுதியின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியையும், இதே காணிக்கு 2012ஆம் ஆண்டு எழுதப்பட்ட புதிய இலக்கம் 55/11, வொக்ஷோல் ஒழுங்கை, கொழும்பு – 02 எனக்குறிப்பிடும் உறுதியின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியையும் உச்சபீட உறுப்பினர்களின் பார்வைக்கு வழங்க முடியுமா?

10.    2006ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற இருந்த வேளை திட்டமிட்டு நமது கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தி, தடையுத்தரவு பெற்று, அத்தேர்தலில் மரச் சின்னத்தில் கட்சியை போட்டியிட முடியாதவாறு செய்தமைக்கு பின்புலத்தில் நின்று செயற்பட்டவர் யார் என்பதைத் தாங்கள் அறிவீர்களா?அந்நபர் இன்று கட்சியில் முக்கிய பதவியொன்றில் அமர்த்தப்பட்டுள்ளாரா? மரச் சின்னம் பறிக்கப்பட்ட வழக்கைத் தொடுத்தவருக்கு எதிராக, நட்டஈடு கோரி கட்சியால் தொடுக்கப்பட்ட  வழக்கிற்கான நீதிமன்றத் தீரப்பில் வழக்குத் தொடர்ந்த ஜமால்தீன் இஸ்ஹாக் தலைவருக்கு பத்து கோடி ரூபாயும், செயலாளர் நாயகத்துக்கு ஐந்து கோடி ரூபாயும்,  நட்டஈடாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு தீர்ப்பின் பின்னர் மேற்படி நபர் இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடொன்றிற்குச் சென்று மறைந்து வாழ்ந்தார். தற்போது குறித்த நபர் ஏறாவூரில் சுதந்திரமாக நடமாடித் திரிவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வழக்கின் தீர்ப்புக்கு என்ன நடந்தது? தலைவரும் செயலாளரும் குறித்த நட்டஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டீர்களா? பெற்றுக்கொண்டிருந்தால் கட்சியின் கணக்கு வழக்குகளில் அவை காட்டப்பட்டனவா? அறவிடப்படாதிருந்தால் மேற்குறிப்பிட்ட தீர்ப்பில் கூறப்பட்ட பணத்தொகையை அறவிட்டு கட்சி நிதிக்கு சேர்ப்பதற்கு தாங்கள் என்ன நடடிவக்கை எடுத்துள்ளீர்கள்?.

உலவும் கதைகளின் படி குறித்த இஸ்ஹாக் என்பவர் கட்சியிலும், கிழக்கு மாகாண சபையிலும் உயர் பதவிகளை வகிப்பவர் ஒருவரால் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டார். அன்று, தான் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டேன் என இஸ்ஹாக்கிடம் ஒரு சத்தியக்கடதாசி பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அறிகிறேன். அச்சத்தியக்கடதாசி பெறப்பட்டதா என்பதைத் தெளிவுபடுத்துமாறும் அவ்வாறு இருந்தால் சத்தியக் கடதாசியை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

11.    நஸீர் அஹமட் அவர்களை 2012ம் வருடம் மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்ளும் தீர்மானத்தை உச்ச பீடத்தினூடாக நீங்கள் எடுத்த போது, அவர்  தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நமது கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை, சட்ட பூர்வமாக மீளளிப்பது என்றும், இதற்கு உபகாரமாக அவரை கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நியமிப்பது என்றும் உடன்பாடு காணப்பட்டதாக உச்சபீடத்திற்கு அறிவித்திருந்தீர்கள்.

வாக்களித்தப்படி கட்சி இவருக்கு பிரதித் தலைவர் II என்ற பதவியை வழங்கிவிட்டது. மேலும் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நமது கட்சியின் மரச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கி, முதலில் மாகாணசபை உறுப்பினராக்கி, பின்னர் மாகாண அமைச்சராக்கி, அதன் பின்னர் அம்மாகாண சபையின் முதலமைச்சராகவும் நியமித்து எமது கட்சி பெருந்தன்மையைக் காட்டியுள்ளது என வைத்துக் கொள்வோம். இவற்றிற்கு கைம்மாறாக அவருடன் கட்சி நடாத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட்டு உங்களால் உச்சப்பீடத்துக்கு அறிவிக்கப்பட்டபடிக்கு எல்லாச் சொத்துக்களும் கட்சிக்கு அவரால் மீளளிக்கப்பட்டுள்ளதா? அப்படியாயின் விபரங்களைத் தருவீர்களா?

12.    எனக்குத் தெரிந்தவரையில் யுனிட்டி பில்டர்ஸ் பிரைவட் லிமிடட்டின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவராக ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நஸீர் அஹமட் இருந்தார். அவ்வேளை மேற்படி நிறுவனத்தினால் உரிமை கோரப்பட்ட தாருஸ் ஸலாமுக்கு அண்மையில் உள்ள வெற்றுக் காணியின் உரிமையை கட்சிக்கு உரித்தாக்கக்கோரி கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட7350/SPL இலக்க வழக்கை சமாதானமாக தீர்த்து, காணியை கட்சிக்கு உரித்தாக்க அவர் ஒத்துக் கொண்டார். இதற்கிணங்க நஸீர் அஹமட் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் பணிப்பாளர்களாக இருந்த காலத்தில் 2012 ஏப்ரல் 17ஆம் திகதி எழுதப்பட்ட 4155 ஆம் இலக்க உறுதியின் படி எமது கட்சிக்கு இக்காணி உரித்தாக்கப்பட்டுள்ளது.

இது தவிர வேறெந்த சொத்தும் மீளளிக்கப்பட்டதாக எனக்கு இதுவரை எவரும் தெரிவிக்கவில்லை. எனவே கட்சிக்குரிய வேறேதும் சொத்துக்கள் யுனிட்டி பில்டர்ஸ் பிரைவட் லிமிடட்டாலோ, வேறெந்த தனிநபராலோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்தாலோ எமது கட்சிக்கு மீளளிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் அறியத்தருவீர்களா?

எவை நம் சூழலில் உள்ள உண்மையான வினாக்களோ, அவை இயல்பாகவே எழுந்து வருகின்றன. தன் வாலைத் தானே விழுங்கிச் சுருண்டு கிடக்கும் சாரைப்பாம்பு போல என்னால் கிடக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். கடந்த காலங்களிலும் பல தடவைகள் அறிக்கைகளாகவும், உச்சபீட உரைகளாகவும், கடிதங்களாகவும், தனிப்பட்ட உரையாடல்களாகவும் பல கேள்விகளை எழுப்பியுள்ளேன்.

நீதி விசாரணைக்கு தேவைப்பட்டால் மனிதப் புதைகுழிகளையே தோண்டுவதில்லையா! அவ்வாறே நாற்றம் எடுத்தாலும் பரவாயில்லை என்று புதைகுழிக்கு அனுப்பப்பட்ட கடந்த கால உண்மைகளை தோண்டியெடுத்து மக்கள் முன் வைப்பது கட்சியை தூய்மைப்படுத்த நம் முன்னே உள்ள வழிகளில் ஒன்று என்று நினைக்கிறேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *