கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் நான் பேச எழுந்த போது சில உறுப்பினர்கள் எழுந்து சப்தமிட்டு இடையூறு விளைவித்தனர். ஏற்கனவே திட்டமிட்டு செய்யப்பட்டதாகும்.
எத்தனை இடையூறு வந்தாலும் தாருல்ஸலாத்தை மீட்டெடுக்கும் எனது அமைதிப் போராட்டம் தொடரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் பேச எழுந்தபோது சிலர் சப்தமிட்டு இடையூறு விளைவித்து தடுத்தமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், தாருல்ஸலாம் தொடர்பான ஊழல்கள் பற்றி நான் விளக்கம் கேட்டிருந்தமையடுத்தே அரசியல் உயர்பீட கூட்டத்தில் கட்சியின் தலைவரினால் விளக்கமளிக்கப்பட்டது.
இல்லையேல் விளக்கம் வழங்கப்பட்டிருக்கமாட்டாது. கட்சியின் தலைவர். நம்பிக்கை நிதியம், UNITY BUILDERS (PVT) LTD, சம்பந்தப்பட்ட விடயங்களில் கட்சியின் ஈடுபாடு என்பன பற்றி விளக்கமளித்தார். இதிலுள்ள பிரச்சினைகள், சிக்கல்கள் பற்றி தெரியப்படுத்தினார். அவர் புற விளக்கமொன்றினை வழங்கினாரே தவிர அக விளக்கங்களை வழங்கவில்லை.
தாருல்ஸலாமில் உள்ள மறைந்த தலைவரின் தனிப்பட்ட சொத்துக்களை மீள கொடுப்பது தொடர்பாகவும் கூறப்பட்டது. ஆனால் இரகசியமான ஆவணங்கள் இல்லாமற் செய்யப்பட்டமை உட்பட எனது பல கேள்விகளுக்குப் பதில் வழங்கவில்லை.
இதனையடுத்தே கூட்டத்தில் நான் எழும்பி நின்று எனது கேள்விகளுக்குப் பதில் வழங்கப்படவில்லை, பதில் வழங்கப்படவேண்டும் என்றேன்.
இச்சந்தர்ப்பத்திலே திட்டமிட்டிருந்தபடி கூலிக்குமாரடிக்கும் சிலர் எழுந்து சப்தமிட்டனர். என்னை கேள்விகள் கேட்கவிடாது தடுத்தனர். ஆனால் பெரும்பாலானவர்கள் பொறுமையாக இருந்தனர். சமூகம் தாருல்ஸலாம் தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டும். தாருல்ஸலாம் காப்பாற்றப்பட வேண்டும்.
இதற்காக நான் இறுதிவரை போராடுவேன். கூச்சல்களால் என்னைத் தடுத்து விட முடியாது என்றார்.
நான் கேள்விகள் கேட்டுவிடுவேன். அதனால் பிரச்சினைகள் ஏற்படுமென்று தலைவர் ஸலவாத்துடன் கூட்டத்தை நிறைவு செய்து விட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.