றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க எதிர்வரும் 4ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, தாஜூடீன் கொலை செய்யப்பட்ட தினத்தில், ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்ற வாகனங்கள் தொடர்பான குறிப்புகள் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்பொருட்டு இதுவரை 25 பாதுகாப்பு உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இன்னும் 14 பேரின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள, தாஜூடினுடையது என கருதப்படும் உடற்பாகங்கள், தற்போது பொரல்லை ஜின் டெக் நிறுவனத்தில் உள்ளன.
இதனை, நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள வழக்கு ஆவணங்களாக்க அனுமதிக்குமாறு, அரச தரப்பு சட்டத்தரணி இன்றைய வழக்கு விசாரணையின் போது கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதவான் அதற்கு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.