Breaking
Sun. Nov 24th, 2024

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க, எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன், 2012ஆம் ஆண்டு கொலைசெய்யப்பட்டமை தொடர்பிலான சாட்சியை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, குற்றப்புலனாய்வு பொலிஸாரினால் அவர், கைதுசெய்யப்பட்டார்.

வசீம் தாஜுதீன் கொலைசெய்யப்பட்ட நாளன்று, அதிகாலை 2.45க்கும் 3.20க்கும் இடைப்பட்ட நேரத்தில், அநுர சேனநாயக்க சிவில் உடையில், நாரஹேன்பிட்டிய சாலிகா மைதானத்துக்கு அண்மையில் உள்ள வீதியில் இருந்தமைக்கான சாட்சி உள்ளதாக, குற்றப்புலனாய்வு பொலிஸார்,நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். விபத்தொன்றின் பெறுபேறாகவே வசீம் தாஜுதீன் மரணமடைந்தார் என, விசாரணைகளை முன்னெடுக்குமாறு தனக்குக் கீழான அதிகாரிகள் இருவருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

சாட்சியை மூடிமறைத்தல் மற்றும் சூழ்ச்சி செய்தமை ஆகியவற்றின் கீழ் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் போதியளவான காரணங்கள் இருப்பதாகவும், குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு, நேற்றுத் திங்கட்கிழமை கொண்டுவந்தனர். இதேவேளை, பிரபல றகர் வீரர் வசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவுக்கான பொறுப்பதிகாரியை (ஓ.ஐ.சி), இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ், மே மாதம் 12ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தார்.

வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், உயர்மட்டப் பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டுள்ளனர் எனக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறினர் என, சிரேஷ்ட அரச வழக்குரைஞர் டிலான் ரத்னாயக்க, அன்றையதினம் நீதிமன்றத்தில் கூறினார். பொலிஸ் அதிகாரிகள் 20 பேரின் வாக்குமூலங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிந்துள்ளதாகவும் அவர்களின் வாக்குமூலங்கள், ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன எனவும் அவர் எடுத்துரைத்தார். தாஜுதீனின் ஜனாஸாவைப் பிரேத பரிசோதனை செய்த முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியான ஆனந்த சமரசேகர தலைமையிலான சட்ட வைத்திய அதிகாரிகள் அணி மீது, இலங்கை மருத்துவர் பேரவை, ஒழுங்கு நடவடிக்கையொன்றை எடுத்துள்ளதென நீதவான் விசாரணையின் போது, இலங்கை மருத்துவர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்குரைஞர் சத்துர கல்ஹேன அன்று கூறினார்.

இந்த சட்டவைத்திய அதிகாரிகள், ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன், ஜூன் மாதம் முன்னிலையாக வேண்டுமென அழைக்கப்பட்டுள்ளனர். கிருலப்பனையில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை (பேர்ஸ்) தொடர்பில், நாரஹேன்பிட்டிய குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரியின் நடத்தை கேள்விக்குரியது என வழக்குரைஞர் ரத்நாயக்க கூறினார். தாஜுதீனுக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் நடந்த அலைபேசி உரையாடலை, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குமாறு மொபிட்டல் தொலைத் தொடர்பாடல் நிறுவனத்தைப் பணிக்க வேண்டுமென, குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,  நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டனர்.

இந்தச் சம்பவத்தின் சி.சி.டி.வி காணொளிகளை, கனடா மற்றும் இங்கிலாந்தின் உதவியுடன் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக வழக்குரைஞர் எடுத்துரைத்திருந்தார். மொபிட்டல் நிறுவனத்துக்கு, அலைபேசி உரையாடல் விவரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கும்படி பணித்த நீதவான், இலங்கை மருத்துவர் பேரவை, தமது விசாரணை அறிக்கையை நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பணித்ததோடு, இந்த வழக்கை மே மாதம் 26ஆம் திகதி வரைக்கும் அன்றையதினமே ஒத்திவைத்திருந்திருந்தார். வசீம் தாஜுதீனின் ஜனாஸா, நாரஹேன்பிட்டிய சாலிக்கா மைதானத்துக்கு அருகில், காரொன்றுக்குள் எரிந்த நிலையிலிருந்து 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *