முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்வது தொடர்பில் பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 19 ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி இதனை குறிப்பிட்டார்.
றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை வழக்கிற்கான அவரது உடல் பாகங்களை மாற்ற முயற்சித்தமை, மற்றும் அழிக்க முயற்சித்தமை தொடர்பில் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக ஆனந்த சமரசேகரவின் பெயரை பரிந்துரை செய்து அவரை கைது செய்ய பிடியாணை ஒன்றை பிறப்பிக்குமாறு குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தினால் கொழும்பு மேலதிக நீதவானிடம் நேற்றைய தினம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.
எனினும் அவரை கைது செய்வதை தடுப்பதற்காக உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மேல் நீதிமன்றிற்கு மேன்முறையீட்டு மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இரண்டினையும் இன்றைய தினம் நீதமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் நேற்றைய தினம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.