பிரதான செய்திகள்

தவிசாளர் தெரிவில் அமைச்சரை பாரிய நெருக்கடிக்குள்ளாக்கிய வட மாகாண சபை உறுப்பினர்.

(முசலி மண்,முசலி முரசு)

அன்றிரவு அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாரிய நெருக்கடியிலும் அழுத்தத்திலும் காணப்பட்டார். எப்படியாவது முசலியில் ஆட்சியமைத்து விட வேண்டும் என்பதற்காக அவர் அதியுச்ச வியூகங்களை வகுத்து செயற்பட்டார்.

முசலியில் ஆட்சியைக் கைப்பற்ற கூட்டுச் சேர்ந்த முத்தரப்பும் முசலிக்கு தெளிவான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்வைக்காமல் ‘அமைச்சர் ரிசாட் பதியுதீனை எப்படியாவது தோற்கடிப்பது’ என்ற ஒரே குறிக்கோளில் பல முனைகளிலும் அவர்களால் முடிந்த சகல சக்திகளையும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

இருப்பினும் சபை கூடுவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னரே (2 மணி) ஆட்சியமைப்பதற்கான முழுப்பெரும்பான்மை நம்பிக்கை தரும் வகையில் பெற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் தவிசாளர் யார் என்பது இறுதி நேரத்திலேயே (2.25-2.30) தீர்மானிக்கப்பட்டது.

அமைச்சர் 2.25 மணியளவில் என்னை அவரது வாகனத்தில் ஏற்றினார். அதற்குள் சகோதரர் சுபியான், சகோதரர் மக்பூல் (கை), சகோதரர் துல்பிகான் (மொட்டு) ஆகியோர் அமைச்சருடன் இருந்தனர்.

எனக்கு மாத்திரமே தவிசாளர் பதவி தருவதாக தான் வாக்குறுதியளித்ததாகவும் சகோதரர் சுபியான் உட்பட வேறு எவருக்கும் அவ்வாறு சொல்லியிருக்கவில்லை என்றும் கூறிய அமைச்சர் ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை தேர்தலில் பெற்றுக்கொள்ள முடியாத பலவீன சூழ்நிலையால் தவிசாளர் பதவியை பகுதி பகுதியாக பிரித்து வழங்க வேண்டிய நிர்ப்பந்த நிலை இருப்பதாக விளக்கினார். முதலில் தவிசாளர் பதவியைப் பெறுபவருக்கு ஒரு வருடம் என்றும் அடுத்தவருக்கு ஒன்றரை வருடம் என்றும் கூறிய அமைச்சர் இதுவிடயம் என்னையும் சகோதரர் சுபியானையும் முடிவெடுக்கச் சொன்னார்.

எனினும் இந்த முடிவை அமைச்சரே கூறும்படி நான் கேட்டுக் கொண்டேன். அமைச்சர் மறுத்து விட்டார். சபைக்குள் செல்ல இன்னும் 2 நிமிடங்கள் இருந்தன. முதல் ஒரு வருடத்தை நான் கேட்டேன். சகோதரர் சுபியானும் கேட்டார். வாகனத்தில் இருந்த இரு உறுப்பினர்களும் சகோதரர் சுபியானுக்கு முதல் ஒரு வருடம் எனக்கு அடுத்த ஒன்றரை வருடம் என அவசரமாக முடிவுக்கு வரும்படி கருத்து வெளியிட்டனர்.

நிலைமையை உணர்ந்து முதல் ஒரு வருடத்தை சகோதரர் சுபியான் பெற்றுக் கொள்ளட்டும் எனக்கூறி விட்டேன். தவிசாளர் விடயம் முடிவுக்கு வந்தது. தவிசாளரை நானே பிரேரிக்க வேண்டும் என அமைச்சர் அன்பாகக் கேட்டுக் கொண்டதையும் நான் ஏற்றுக் கொண்டேன்.

அடுத்து தவிசாளராகும் வரை பிரதித் தவிசாளர் பதவியை ஏற்றுக் கொள்ளும்படி அமைச்சர் என்னைக் கேட்டுக் கொண்டார். எப்படியாவது நாம் ஆட்சியமைக்க வேண்டும் என்றும் அதற்காக பிரதித் தவிசாளர் பதவியை வேறொருவருக்குக் கொடுக்க நிர்ப்பந்தம் இருந்தால் கொடுக்கும்படியும் அமைச்சரிடம் கூறினேன். அதனை அமைச்சர் மறுத்ததால் பிரதித் தவிசாளர் பதவியை ஏற்றுக் கொள்ள உடன்பட்டேன்.

தவிசாளர் பதவி ஒரு வருடத்துக்கென கட்சிக்கு எழுத்து மூலம் கடிதம் தர வேண்டுமென்றும் ஒரு வருட முடிவில் கட்சி கேட்டுக் கொள்ளாமலேயே இராஜினாமாச் செய்துவிட வேண்டுமென்றும் அமைச்சர் கூறியதை சகோதரர் சுபியான் ஏற்றுக் கொண்டார். அப்போது நேரம் 2.30 ஆகும். அந்த இறுதி நேரத்தில் தவிசாளர், பிரதித் தவிசாளர் பதவிகள் தீர்மானிக்கப்பட்டன.

சபைக்குள் சென்றதும் தவிசாளர் யார் என்று என் கட்சி உறுப்பினர்கள் என்னிடம் கேட்டனர். சற்றுப் பொறுத்திருக்கும்படி கூறினேன். சகோதரர் சுபியானைத் தவிர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நானே தவிசாளர் என நினைத்திருந்தனர்.

ஆட்சியமைப்பதிலும் தவிசாளர் தெரிவிலும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பல்வேறு சவால்களை எதிர்நோக்கினார். சகோதரர் சுபியானுக்கு தவிசாளர் பதவியைப் பெற்றுக் கொடுக்க வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் மௌலவிமார்கள் சிலரும் அமைச்சரை பாரிய நெருக்கடிக்குள் தள்ளியிருந்தனர். இதனை மிகத்தெளிவாக அறிந்து வைத்திருந்த அமைச்சர் இறுதி நேரம் வரை எதனையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

தவிசாளர் தெரிவில் கொண்டச்சி மக்களின் விருப்பங்களும் அழுத்தங்களும் விசேடமாக இருந்தது. இதற்குக் காரணம் சகோதரர் சுபியான் கரடிக்குளி – கொண்டச்சி வட்டாரப் பிரதிநிதியாக இருந்ததும் சகோதரர் மக்பூல் கொண்டச்சியைச் சேர்ந்தவராக இருந்ததுமாகும்.

எனக்கு தவிசாளர் பதவி தருவதாக அமைச்சர் முன்னமேயே கூறியிருந்ததால் அதற்காக அமைச்சருக்கு எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கத் தேவையில்லை என எனக்கு நெருக்கமான சில பெரியோர்கள் என்னைக் கேட்டுக் கொண்டதால் இறுதிவரை நான் அமைதியாக இருந்து விட்டேன்.

தற்போது பிரதித் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். இப்பதவியில் தொடர்ந்து நான் நிலைத்திருப்பது குறித்து என் வெற்றிக்குக் கடுமையாக உழைத்தவர்களின் முடிவுக்காகக் காத்திருக்கிறேன்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முசலி சமூகம் ஆகிய முத்தரப்பின் கௌரவத்திற்காக இந்த விடயத்தில் என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்தேன். அல்ஹம்துலில்லாஹ்.

எதிர்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வளர்ச்சிக்காகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கரங்களை பலப்படுத்தவும் முசலியின் அபிவிருத்திக்கும் என்னாலான சகல முயற்சிகளையும் உணர்வுபூர்வமாக மேற்கொள்வேன். இன்ஷா அல்லாஹ்.

என்றும் சமூகப் பணியில்

முகுசீன் றயீசுத்தீன்,
பிரதித் தவிசாளர்,
முசலி பிரதேச சபை

Related posts

வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல! வடக்கின் இறுதிச்சாட்சியம் ரிஷாத்

wpengine

கவர்ச்சி உடையில் கும்மாளம் போடும் திரிஷா

wpengine

புத்தளம் பாடசாலை பரிசளிப்பு விழா முன்னால் அமைச்சர் றிஷாட் அதிதி

wpengine