(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
தற்போது 20ம் சீர் திருத்தம் பற்றிய விடயங்களே பலத்த பேசு பொருளாக மாறியுள்ளது. இது சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பாக அமையுமா என்பது பற்றி பலவாறான கருத்துக்கள் நிலவி வருகிறது. அதிகமான கருத்துக்கள் பாதிப்பானது என்றே கூறுகிறது. இதனை கிழக்கு மாகாண சபை அங்கீகரித்துள்ளமை தான் இங்கு சுட்டிக் காட்டத்தக்க விடயமாகும். இது நிறைவேறியவுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம், “ திருத்தங்களுடனான சீர் திருத்தம் வந்துவிட்டதால், மஹிந்த அரசியல் வாதிகள் தோற்றுவிட்டதாக” பதிவிட்டிருந்தார். இவருடைய பிரச்சினை, இதன் மூலம் மஹிந்த அரசியல் வாதிகள் வெற்றி பெற்று விடுவார்களா என்பதேயாகும் என்பதை அறிந்துகொள்ளலாம். இங்கு இதுவா எமது பிரச்சினை? அவர்களின் பிரச்சினை அதுவேயாகும்.
இவ்வரசு கொண்டுவர முன் மொழிந்த 20ம் சீர் திருத்தம் பேரின மாகாண சபைகளிலே படு தோல்வியை தழுவியது. இதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் இதனை நிறைவேற்ற முடியாது என்பதை இவ்வரசு உணர்ந்து கொண்டது. அதன் அடிப்படையிலேயே தற்போது முன் மொழிந்த 20ம் சீர் திருத்தத்தை மீண்டும் திருத்த முயற்சிக்கின்றனர். இருந்த போதிலும் மீள திருத்தப்பட்ட வரைவு தொடர்பில் இதுவரை உறுதியான எந்த வடிவமும் வெளிப்படவில்லை. இச் சீர் திருத்தமானது தோல்வியை தழுவினால் அது மஹிந்த அரசியல் வாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பது உண்மை. அது இவ்வரசின் பிரச்சினை. எமது பிரச்சினையல்ல. அரசின் பிரச்சினை தான் தவத்தின் பிரச்சினையாகவுள்ளதா? மேலும், இதனை அவர் அதாவுல்லாஹ்வை மையப்படுத்தியும் கூறியிருக்கலாம். இது என்ன அதாவுல்லாஹ்வா, தவமா, என்ற பிரச்சினையா?
தவத்தின் இக் கூற்றின் மூலம் இவ்வரசு கொண்டு வந்த அரசியலமைப்பானது திருத்தமல்லாமல் நிறைவேற்றினால் சிறுபான்மையினருக்கு பாதிப்பானது என்பதை தெளிவுபடுத்துகிறது. மஹிந்த சிறுபான்மையின மக்களுக்கு துரோகமிழைத்தார் என்றே அவரை முஸ்லிம்கள் வெறுத்தனர். அதனை காட்டியே அவருக்கு சார்பான அரசியல் வாதிகளை வெறுப்படையச் செய்ய இன்று தவமும் முனைகிறார். இதிலேயே இவ்வரசு முஸ்லிம்களுக்கு துரோகம் செய்ய சிந்தித்துள்ள போது, இது விடயத்தில் இவ்வரசை கண்டிப்பதை விடுத்து, இவ்வரசை வென்று விட்டோம் என பெருமைப்படுவதை விடுத்து (இவ்விடயத்தை வெற்றியாத கருதியிருப்பின்), மஹிந்தவை கண்டிப்பது ஒரு முஸ்லிம் சமூகம் பற்றிய உண்மை சிந்தனையாளனுக்கு அழகல்ல.
சட்டியில் உள்ளவை தான் அகப்பையில் வரும். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை வேறு. இவர்கள் பிரச்சினை வேறு. இதில் பலிக்கடாவது முஸ்லிம் சமூகமேயாகும். எனவே, தவத்தின் குறித்த கூற்றின் மூலம் மு.காவினர் எதனை இலக்காக கொண்டு இவ்விடயத்தில் செயற்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.