வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கும் ஒரு திட்டத்தினை முன்வைத்து அங்கிருந்தும் பேருந்து சேவைகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சீராக செயற்பட ஒரு திட்டத்தினை முன்வைக்கும் போது பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் சேவைகள் இடம்பெற திட்டம் முன்வைக்கப்படும். அதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஒத்துழைப்பு தேவை. இரண்டு பேருந்து நிலையத்திற்கும் சம்மதம் தேவையாகவே உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவோம்.
அத்துடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மயூரன் போதைப்பொருள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்திருந்தார். ஆனால் போதைப்பொருளுக்கு எதிராக நான் கருத்து தெரிவித்தால் சிரிக்கும் அமைப்பு, சிரிக்காத அமைப்பு என்று சில கட்சிகள் எனக்கு எதிராக செயற்படுகின்றனர்.
போலி முகநூலில் தவசிகுளத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினர் வீட்டில் கஞ்சா பாவனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னை எப்படி குறை கூறலாம் என திட்டம் போடுகின்றனர்.
ஆனால் நான் வலுவாக ஒரு திட்டத்தினை அவர்களுக்கு கொடுக்கப்போகின்றேன். நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன் வென்றுவிட்டேன். ஆனால் சிலர் 5 வருடங்களுக்கு பல தேர்தலில் போட்டியிட வேண்டியுள்ளது.
நீங்கள் செய்த திருகுதாளங்களை நான் வெளியில் விட்டால் அவர்களுக்கு இருப்பதும் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். அதனை விரைவில் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.