ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைய அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பாடசாலைகளை மீள திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாட்டில் பாரிய வரி ஏய்ப்புக்களை செய்பவர்களுக்கு தற்போதைய அரசாங்கம் வரி சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த ஊழல்வாதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் வாய்ப்பை இல்லாதொழிக்கும் வகையில் புதிய சட்டமூலம் ஒன்றையும் அரசாங்கம் கொண்டுவந்துள்ளது என்றார்.
இச்சட்டமூலத்தூடாக கறுப்புப் பணங்கள் வெள்ளையாக்கப்படும். கொரோனா வைரஸ் ஒழிப்புப்பான தொழில்நுட்ப குழுவிலிருந்து விசேட நிபுணர்கள் தொடர்ந்து விலகி வருகிறார்கள். இவ்வாறு நிபுணர்கள் விலகுவதால் அந்த குழு அமைக்கப்பட்டமைக்கான நோக்கம் நிறைவேறாது எனவும் அவர் தெரிவித்தார்.
பிள்ளைகளுக்கு தற்போது கல்வி செயற்பாடுகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளை திறப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை. தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் உள்ளதால், நாட்டில் உள்ள பிள்ளைகள் தொடர்பில் அவர்களுக்கு அக்கறை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.