பிரதான செய்திகள்

தலைமன்னார் வீதியில் உயிரிழந்த 5ஆம் ஆண்டு மாணவி பாத்திமா றிஸ்னா

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி கரிசல் சந்தியில் இன்று மாலை இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னாரில் இருந்து கரிசல் வீதியூடாக மன்னார் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியே குறித்த மாணவி உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவி பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும்,புதுக்குடியிருப்பில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5ல் கல்வி கற்கும் ஜிப்ரி பாத்திமா றிஸ்னா (வயது-10) என தெரிய வந்துள்ளது.

குறித்த மாணவி பாடசாலை முடிந்து பேருந்தில் பெரிய கரிசல் கிராமத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீடு நோக்கிச் சென்றுள்ளார்.

பேருந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி சக மாணவனுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது இன்று மாலை 3 மணியளவில் தலைமன்னார் வீதியூடாக மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் குறித்த சிறுமி மீது மோதியுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

சம்பவ இடத்தில் மக்கள் ஒன்று கூடிய நிலையில் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு, குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியையும்,உதவியாளரையும் மக்கள் கடுமையாக தாக்கிய நிலையில் குறித்த இருவரையும் மீட்ட பொலிஸார் மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மன்னார்-தலைமன்னார் வீதி கரிசல் சந்தியில் மக்கள் ஒன்று கூடியமையினால் நீண்ட நேரம் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விக்கியின் விசாரணை குழுவில் மோசடி,சிறைவாசம்

wpengine

10 வருடங்களின் பின்பு மன்னாரில் பண்பாட்டு விழா! மாவை பங்கேற்பு

wpengine

பசில் நாடு திரும்பியதும்! முக்கிய அமைச்சில் மாற்றங்கள்

wpengine