நேற்றைய தினம் 11.05.2017 தலைமன்னார் பங்குத்தந்தை அருட்திரு நவரட்ணம் அடிகளார் தலைமன்னார் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக சில விடயங்களை தெரியப்படுத்தியிருந்தார்.
மேற்படி தலைமன்னார் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்பொருட்டு இன்றைய தினம் 12.05.2017 வெள்ளிக்கிழமை அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் நேரடியாக விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த சந்திப்பானது முற்பகல் 11.30 மணியளவில் தலைமன்னார் கிராமத்தில் அமைந்துள்ள சென்.லோறன்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் குறித்த பங்குத்தந்தை அவர்களும், மீனவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருன்தனர்.
இக்கலந்துரையாடலின்போது மீனவ பிரதிநிதிகள் தாம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீடையில் இறங்கிநின்று தமது மீன்பிடி தொழிலினை மேற்கொள்வதனை இலங்கை கடற்ப்படையினர் நிறுத்தியுள்ளதாகவும் இதனால் தாம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர். குறித்த தொழிலானது அப்பகுதி மீனவர்களால் பரம்பரை பரம்பரையாக மேற்கொள்ளப்பட்டுவரும் மீன்பிடிதொழிலென்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்துதெரிவித்த அமைச்சர்
அவர்கள் மீனவர்கள் கடந்த சிலநாட்களாக எதிர்கொண்டுவருகின்ற பிரச்சனையை உரியமுறையில் தீர்த்து அவர்கள் எதிர்நோக்குகின்ற அசௌகரியங்களை நீக்கும் பொருட்டு எதிர்வரும் 16ம் திகதி முற்பகல் 11 மணியளவில் சந்திப்பு நடைபெற்ற அதே ஆலயத்தில் மன்னார் மாவட்ட மீன்பிடி உதவிப் பணிப்பாளரோடு விசேட கூட்டம் ஒன்றினை ஒழுங்குபடுத்தியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. ஆகவே அங்கு இருக்கின்ற மீனவ பிரதிநிதிகள் குறித்த சந்திப்புக்கு தவறாது சமூகமளிக்குமாறு அமைச்சர் அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
