மன்னார் – தலை மன்னார் பிரதான வீதி,பேசாலை பிரதேசத்திற்கு உற்பட்ட வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான வகையில் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மன்னார் உதவிப்பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மன்னார் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி, பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமஜித், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட வைத்தியர், கிராம சேவையாளர் ,உட்பட உரிய அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.
குறித்த அகழ்வின் போது எவ்வித சந்தேகப்பொருட்களும் மீட்கப்படவில்லை.
இந்நிலையில் குறித்த அகழ்வுப்பணி நாளை வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாகவும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

