திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவை பிரிவினைவாதியாக சீனா கருதி வருகிறது.
தலாய்லாமாவுடன் யார் தொடர்பு வைத்துக்கொண்டாலும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சீனாவின் வழக்கம்.
இந்த நிலையில் அமெரிக்க பாராளுமன்ற ஜனநாயக கட்சி தலைவர் நான்சி பெலோசி தலைமையில் இரு கட்சி எம்.பி.க்கள் குழுவினர், சமீபத்தில் இமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவுக்கு வந்து தலாய்லாமாவை சந்தித்துப் பேசினர்.
இது தொடர்பாக பீஜிங்கில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங்கிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில்,
“தலாய்லாமா மதத்தின் பெயரால், வெளிநாடுகளில் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறார். அமெரிக்க பிரதிநிதிகள் குழு தர்மசாலா சென்று, தலாய்லாமாவை சந்தித்திருப்பது திபெத் சுதந்திரத்துக்கு ஆதரவு அளிப்பது போன்ற ஒரு தவறான சமிக்ஞையை வெளி உலகத்துக்கு ஏற்படுத்தி விடும். இது திபெத் சுதந்திரத்துக்கு ஆதரவு அளிப்பதில்லை என்ற அமெரிக்காவின் வாக்குறுதியை மீறிய செயல்” என்று கூறினார்.
மேலும், “இதை உறுதியாக எதிர்க்கிறோம். இதுபற்றி அமெரிக்க தரப்பிடம் நமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். சம்மந்தப்பட்ட அமெரிக்க எம்.பி.க்கள் குழு, திபெத் தொடர்பான விஷயங்களை சரியான விதத்தில் கையாள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தலாய்லாமாவுடனான அனைத்து விதமான தொடர்புகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.