தற்கொலை எண்ணம் உள்ளவர்களை காப்பாற்ற பேஸ்புக் நிறுவனம் முன்வந்துள்ளது.
அதன்படி பேஸ்புக் இணையதளம் தற்கொலை தடுப்புக் கருவியை உலகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது.
National Suicide Prevention Lifeline, Save.org ஆகிய அமைப்புகளின் உதவியுடன் பேஸ்புக் இணையதளம் இந்த கருவியை உருவாக்கியுள்ளது.
இந்த தற்கொலைத் தடுப்புக் கருவி அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாரேனும் துன்பத்தில் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் பதிவுகளை போஸ்ட் செய்திருந்தால் அவருடைய நண்பர்கள் அல்லது அந்த பதிவை பார்ப்பவர்கள் இந்த கருவிக்கு தெரியப்படுத்தலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கான மனரீதியிலான ஆலோசனைகள், உதவிகள் மற்றும் நண்பர்களுடன் இணைத்தல் போன்ற பல வகையான உதவிகளைச் செய்வதற்காக பேஸ்புக் நிறுவனம் குழுக்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.