(ரஸீன் ரஸ்மின்)
“வடக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் விரிசல்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே சில தமிழ் அரசியல் தலைவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என வட மாகண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
வடமாகாண சபையில் வெள்ளிக்கிழமை(22) நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “வன்னி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வன்னிக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்து அங்கு கட்சி, இனம், பிரதேசவாதம் என்பவற்றுக்கு அப்பால் இன்று வரை தனது பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
தனிநபராக இருந்து கடந்த காலங்களில் வன்னி மாவட்டத்தில் பயணித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று தனது கட்சி சார்பில் மூன்று மாகாண சபை உறுப்பினர்களுடன் பயணிக்கிறார். ரிஷாட் பதியுதீன் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஊடாக வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கட்சி சார்பில் மூன்று பேர் வெற்றிபெற்று மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் ஊடாக மத்திய அரசாங்கத்தின் உதவியையும் மாகாண சபையின் உதவியையும் பெற்று வாக்களித்த அனைத்து மக்களுக்கும் வேறுபாடுகள் இன்றி, பணியாற்றக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது” என்றார். “வட மாகாண சபையின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்று வரை தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே உணர்வில் இனவாதம், பிரதேசவாதம் என்று பார்க்காமல் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். தமிழ், முஸ்லிம் மக்கள் அதாவது தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன், சந்தோஷத்துடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஆனால், அதனை மாற்ற வேண்டும், தமிழ் பேசும் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த வேண்டும். இரு சமூகங்களும் நிம்மதியிழந்து வாழ வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்ப அரசியல் செய்யும் இவர்கள் உள்ளத்தில் ஒன்றும் வெளியில் இன்னொன்றையும் வைத்துக்கொண்டு மக்கள் மத்தியில் கபடத்தனமாக செயற்படுகிறார்கள். இவர்களின் செயற்பாடுகளை பார்க்கும் போது மிகவும் வேதனையளிக்கிறது. எங்களுடைய உள்ளம் மிகவும் தூய்மையாக இருக்கிறது. அத்துடன், வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பான பிரேரணை வெள்ளிக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தப் பிரேரணையை நான் எதிர்க்கின்றேன். குறித்த பிரேரணை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் வன்னி மாவட்ட மக்களினால் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட எங்களிடம் எந்தக் கருத்துக்களும் கேட்கப்படவில்லை. இந்த விடயத்தில் தமிழ் தலைவர்கள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா ஒரு மூத்த அரசியல்வாதி. ஆவரை நான் கொளரவமாக மதிக்கிறேன். தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாகவும் இருக்கிறார். ஆனால், அதுபற்றி தமது கட்சி உறுப்பினர்களுக்கும் சம்பந்தன் ஐயா தெளிவுபடுத்த வேண்டும்.
அப்போதுதான் உண்மையான ஒற்றுமை ஏற்படும். தமிழ் பேசும் தலைவர் ஒருவர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதை நாம் பெருமையாக நினைக்கிறோம். சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு எமது பங்கும் முக்கியம் பெறுகின்றது. எனவே, தமிழ் மக்களின் தலைவர், இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற பாரிய பொறுப்பை சுமந்து நிற்கின்ற சம்பந்தன் ஐயா வடக்கில் தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு உரிய வகையில் முஸ்லிம் தலைவர்களுடன் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தி அதற்குரிய வழிகளைச் செய்துகொடுக்க வேண்டும்.
நல்லுறவோடு வாழும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே எந்த சந்தர்ப்பத்திலும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகள் செயற்படக் கூடாது என்பதே என்து தாழ்மையான கோரிக்கையாகும்” எனவும் அவர் தெரிவித்தார்.