Breaking
Sun. Nov 24th, 2024

 (எம்.ஐ.முபாறக்)

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை;நிரந்தர நண்பனும் இல்லை.சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் லாபங்களை நோக்காகக் கொண்டு நண்பர்கள் எதிரிகளாகவும் எதிரிகள் நண்பர்களாகவும் மறுவார்கள்.இலங்கையின் அரசியலும் அப்படித்தான் செல்கிறதோ என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் நீண்ட கால உறுப்பினராக இருந்து-அந்தக் கட்சியின் முந்தைய ஆட்சியாளர் மஹிந்தவுடன் நண்பனாக இருந்து-மஹிந்தவின் சகோதரர்களுடன் நெருக்கமாக இருந்து இறுதியில் இவர்களுக்கு எதிரியாக மாறியவர்தான் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

மஹிந்தவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சர்வதேசத்தாலும் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவாலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவாலும் துருப்புச் சீட்டாகக் கண்டெடுக்கப்பட்டவர்தான் இந்த மைத்திரி.அவர் 2015 ஜனாதிபதி தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டு மஹிந்த கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து மஹிந்தவின் எதிரியாக மாறினார் மைத்திரி.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு ரணில்,சந்திரிக்கா எனப் பலர் காரணமாக இருந்தபோதிலும்,கூடவே இருந்து குழி பறித்தார் என்பதற்காக மைத்திரிமீதே மஹிந்தவுக்கு கடுப்பு அதிகம்.சுதந்திர கட்சியின் தலைமைத்துவப் பதவியைக்கூட மைத்திரி மஹிந்தவிடமிருந்து எடுத்துக் கொண்டமை மஹிந்தவின்  கோபத்தை-பலி வாங்கும் உணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து சில நாட்கள் மாத்திரமே தனது ஹம்பாந்தோட்டை இல்லத்தில் முடங்கிக் கிடந்த மஹிந்த மீண்டும் அரசியலில் குதித்தார்.மஹிந்தவை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றோரின் இழுப்பால் மீண்டும் அரசியலுக்குத் திரும்பிய மஹிந்த,ரணில் மற்றும் சந்திரிகாவை விடவும் மைத்திரியையே பலி வாங்கத் துடிக்கின்றார்.

மைத்திரியிடம் இருந்து சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தையும் ஆட்சியையும் கைப்பற்றுதல் என்ற வெறியோடு மஹிந்த அணி இப்போது களத்தில் இறங்கி செயற்படுகின்றது.

இந்த அரசில் காணப்படும் குறைபாடுகள்,ஊழல்.மோசடிகள் போன்றவற்றை மிகைப்படுத்தி இனவாதத்தைப் பரப்பி சிங்கள மக்களின் ஆதரவைப் பெருக்கிக்கொள்ளும் செயற்பட்டில்  மஹிந்த தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.அத்தோடு,தமிழ்-முஸ்லிம் மக்களை வளைத்துப் போடும் வேலையையும் அவர்கள் செய்து வருகின்றனர்.

மறுபுறம்,இந்த சவாலை முறியடிப்பதற்காக மைத்திரியும் களத்தில் குதித்துள்ளார்.மஹிந்த சார்பு சுதந்திர கட்சி தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.ஊழல்,மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் மஹிந்த அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் சிறைக்கு அனுப்பி எடுக்கப்படுகின்றனர்.

மஹிந்த அணியினரைக் கட்டுப்படுத்தும் மைத்திரியின் இந்த நடவடிக்கையில் ஒன்றாக மஹிந்த அணியின் முக்கியஸ்தர்களை வளைத்துப் போடும் திட்டத்தையும் உள்ளடக்கியுள்ளார்.அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே கோட்டாவுக்கு ஆதரவான மைத்திரியின் கருத்து அமைந்துள்ளது என்று அறிய முடிகின்றது.

எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் கோட்டா நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டமைக்கு மைத்திரி கவலை வெளியிட்டுள்ளமையானது நாட்டில் இப்போது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதனுடன் இணைந்ததாக ஊழல்,மோசடிகள் தொடர்பில் தனக்கு அறிவித்துவிட்டே ஆணைக்குழுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மைத்திரி கூறியிருப்பதானது பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

மைத்தியின் இந்த இரண்டு கருத்துக்களும் மஹிந்த அணியின் ஊழல்,மோசடிக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை காப்பாற்றுவதாக அமைகின்றன என்பது தெளிவாகின்றது.அதிலும்,கோட்டாவுக்கு ஆதரவான-அவரைக் காப்பாற்றும் வகையிலான கருத்தே நாட்டில் அதிகம் பேசப்படுவதோடு மைத்திரியின் நேர்மைத் தன்மையையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் இந்தக் கருத்தால் அதிகம் கவலை அடைந்திருப்பவர்கள் தமிழ்-முஸ்லிம் மக்கள்தான்.மஹிந்த ஆட்சியில் இந்த மக்கள் கோட்டாவால் எவ்வளவு துன்பத்தை அனுபவித்தார்கள் என்பதை நாம் அறிவோம்.யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர்கள் நசுக்கப்பட்டார்கள்.யுத்தம்முடிந்த பின்பும் அது தொடர்ந்தது.

அதேபோல்,பேரினவாதக் குழுக்களைக் கொண்டு முஸ்லிம்களும் ஒடுக்கப்பட்டார்கள்.இத்தனையும் கோட்டா தலைமையில்தான் நடந்தன என்று சிறுபான்மை இன மக்கள் குற்றஞ்சாட்டுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

காலியில் அமைந்துள்ள பொது பல சேனாவின் அலுவலகத்தைத் திறந்து வைத்து அவர்களின் பேரினவாத செயற்பாடுகளைத் தொடக்கி வைத்தவரே கோட்டாதான் என்பதை முழு உலகமும் அறியும்.பொது பல சே னாவுக்கும் தனக்கும் எதுவிதத் தொடர்பும் இல்லை என்று கோட்டா கூறி வந்தபோதிலும்,மறைமுகமாக அவர்களின் இனவாத செயற்பாடுகளுக்கு கோட்டா தூபமிட்டுக்கொண்டே இருந்தார்.இதனால்தான் பொது பல சேனாகூட மஹிந்தவைவிடவும் கோட்டாவையே அதிகம் நேசித்தது;புகழ்ந்து தள்ளியது.

அதேபோல்,வடக்கு-கிழக்கு தமிழர்களுக்கு படையினர் இழைத்த அத்தனை கொடுமைகளுக்கும் கோட்டாவே காரணம் என்று ஒட்டுமொத்த தமிழர்களும் கூறுகின்றனர்.அதையும் கோட்டா மறுத்தாலும்கூட அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து படையினரை வழி நடத்தியபோதுதான் இந்த அநியாயங்கள் இடம்பெற்றன என்பதை மறுக்கமுடியது.

இந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் மஹிந்தவின் ஆட்சி கவிழ்ப்புக்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து துணை போனார்கள்;கோட்டாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பித்தான் மைத்திரியை ஜனாதிபதியாக்கினர்.ஆனால்,மைத்திரியோ அந்த மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும்வகையில்-அவர்களுக்கு துரோகமிழைக்கும் வகையில் செயற்படுகிறார் என்று அந்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்.

தனது அரசியல் லாபத்துக்காக கோட்டாவைக் காப்பாற்றுவதற்கு மைத்திரி முயற்சி செய்கின்றமை  அவர் மீதான ஒட்டுமொத்த மக்களின் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் சிதைக்கத் தொடங்கியுள்ளது.தான் ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இவ்வளவு காலமும் நாடகமாடியுள்ளாரா என்று மக்கள் கேட்கின்றனர்.

மைத்திரியின் இந்த நிலைப்பாட்டால் தமிழ்-முஸ்லிம் மக்கள் அனைவரும் அதிருப்தியடையத் தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் அவருக்கான சிறுபான்மை இன மக்களின் செல்வாக்கில் வீழ்ச்சி  ஏற்படுவதோடு சிங்களத் தலைவர்கள் அனைவரும் ஒரே ரகம்தான்;சிறுபான்மை இன மக்களின் விவகாரத்தில் அவர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளனர் என்ற மனோநிலையை வளர்த்துவிடும்.

ஆகவே,தனது அரசியல் லாபத்துக்காக தன்னை ஆட்சிபீடமேற்றிய மக்களை மைத்திரி ஏறி மிதிக்கக்கூடாது.தமிழ்-முஸ்லிம் மக்கள் மாத்திரமன்றி அவருக்கு வாக்களித்த சிங்கள மக்கள்கூட மஹிந்த அரசின் ஊழல்,மோசடிகளுக்கு நடவடிக்கை  எடுப்பதற்காகவே வாக்களித்தனர் என்பதை மைத்திரி மனதில் நிறுத்தி-உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *