தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து விரல் தேய்ந்து போனதே தவிர வேறு ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரைக்கும் 27,000 பேருக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையை ஒன்பது வீதத்தினால் குறைத்துள்ளேன். இந்த பெருமை வாக்காளராகிய உங்களுக்குரியது.
உங்கள் வாக்குகளால் வந்த நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது வீதத்தினால் வறுமையை குறைப்பதற்கு பணியை செய்திருக்கின்றேன் என்றால் எல்லா சமூகமும் சந்தோசமாக இருக்கின்றார்கள் என்பதுதான் எனக்கு பெரியதொரு பெருமை.
நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை தேர்தல் காலங்களில் அநேகமாக ஒரு சிலர் இன்னுமொரு கட்சிக்கு வாக்களித்தார்கள். இரண்டு தடவையும் மாகாண சபை உறுப்பினரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. அத்தோடு இன்னொரு ஊருக்கு நாடாளுமன்ற உறுப்பினரை தூக்கிக் கொடுத்த பெருமை உங்களை சார்ந்தது.
இறுதியில் நீங்கள் தோல்வி என்கின்ற பரீட்சையை எழுதுகின்ற பரீட்சார்த்திகளாகத் தான் இருப்பீர்கள். தமிழ் மக்கள் மத்தியில் நான் பேசுகின்ற விடயம் என்னவென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து விரல் தேய்ந்து போனதே தவிர வேறு ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை என்பதாகும்.
ஒருவனுக்கு கிட்டத்தட்ட 11 தடவைகள் வாக்களிப்பதற்கு இறைவன் சந்தர்ப்பத்தை வழங்குகின்றார்.
ஆனால், நீங்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை நடைபெறுகின்ற தேர்தல் பரீட்சையில் தோல்வியடைந்தால், அடுத்த ஐந்து வருடம் தாமதித்து இருக்க வேண்டும் அடுத்த முடிவை எடுப்பதற்காக எவ்வளவு கொடுமை என்று யோசித்துப் பாருங்கள்.
11 தடவை ஒருவருக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த தவறுவதாக இருந்தால் அவர்கள் என்றோ ஒருநாள் அந்த அரசியல்வாதிகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.