Breaking
Wed. Apr 24th, 2024

டக்ளஸ் தேவானந்த தன்னால் எதுவும் முடியாத நிலையில், போலி பசப்பு வார்த்தைகளையும், கொக்கரிப்புக்களையும் செய்து வருவது வேடிக்கையான விடயமாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருக்கோயில் விபுலானந்த அகடமியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால யுத்தத்தின் போது, தமிழ் மக்கள் சிக்குண்டு வேதனையில் தவிர்த்த போது, டக்ளஸ் தேவானந்த மகிந்த அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்கள் பற்றி எந்த அக்கறையும் கொள்ளாது தனது சுகபோக அரசியலில் வாழ்ந்து வந்தார்.

இன்று தமிழ் மக்கள் மீது, ஏதோ அக்கறை கொண்டவர் போல் கூக்குரல் இட்டு, கொக்கரித்து, போலிப் பாசாங்கு காட்டிக்கொண்டு தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை சேர்த்துக் கொண்டு புதிய கட்சியொன்றை உருவாக்கியுள்ளார்.2-1

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், செல்வாக்குகள் அனைத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக சில சர்வதேச நாடுகளுடனும், சில பேரினவாத கட்சிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கான விடிவு கிடைத்து விடக்கூடாது என்ற சதித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, அவர்களது எந்தவிதமான கொக்கரிப்பையும் பொருட்படுத்தப் போவதில்லை.

எமது மக்கள் நலன்சார்ந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் சரியான பாதையிலே செல்லும்.

ஸ்ரீலங்காவில் நல்லாட்சி நடைபெற்று வருகின்றது. ஆனால் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குறை நிரப்பு பிரேரணையின் போது, கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து வாக்களிக்காமல் விட்டிருக்குமானால் இன்றுள்ள நல்லாட்சி கெட்டாட்சியாக மாறியிருக்கும்.

அவ்வாறு இல்லாமல் தமிழ் மக்களின் நலன்கருதி நல்லாட்சிக்கு முட்டுக்கொடுக்கும் ஒரு கட்சியாகவே கூட்டமைப்பு இன்றும் இருந்து வருகின்றது.

எப்போது தமிழ் மக்களுக்கான விடிவு, உரிமை கிடைக்கவில்லையோ அன்றே கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தை தள்ளி வீழ்த்தி விட்டு வெளியேறும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

அன்று மகிந்த ஆட்சி தமிழ் மக்களுக்கான தீர்வினை கொடுக்கும் என்ற நம்பிக்கையில், மகிந்த அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்.

ஆனால், அந்த அரசாங்கமோ தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் வழங்காத நிலையில் அந்த கொடூர ஆட்சியை வீழ்த்தி விட்டு மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தினை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்.

பல சந்தர்ப்பங்களில் பேரினவாதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிரித்தாழ பல பிரயத்தனங்களை எடுத்தார்கள்.

ஆனால், எமது கட்சியும், தமிழ் மக்களும் அதற்கு ஒருபோதும் இடம்கொடுக்கவில்லை. இடம் கொடுக்கவும் மாட்டார்கள்.

மக்கள் எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதும், அதன் தலைமை மீது பற்று உறுதி கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

அதற்காகவே, தமிழ் மக்களின் உரிமைகள், அபிவிருத்திகள் என்பவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம் என்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *